தமிழ்க் கல்வி அதிகாரிகளின் நியமனங்களை விரும்பாத பேரினவாத செயற்பாடுகள்

By Digital Desk 2

15 Nov, 2022 | 09:39 AM
image

(சிவலிங்கம் சிவகுமாரன்)

அதிக தமிழ் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்டிருக்கக் கூடிய அட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களை நான்காக பிரிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் திடீரென அவை மூன்றாக குறைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டமானது தொடர்ச்சியாக தமிழ்க் கல்வி அமைச்சை தக்க வைத்திருக்கும் பிரதேசமாகும். கல்வி இராஜாங்க அமைச்சும் இம்மாவட்டத்துக்கே கிடைத்திருந்தது. எனினும் இந்த பதவிகள், எந்தளவுக்கு நிர்வாக பொறுப்புகளை தமிழ் அதிகாரிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்பது கேள்விக்குரியே. 

நுவரெலியா மாவட்டத்துக்கு மேலதிக பிரதேச சபைகளை அமுல்படுத்த விடாது எந்த மறை கரங்கள் செயற்பட்டனவோ அதே  போன்று தான் தற்போது கல்வி வலயங்களை பிரிக்கும்  விவகாரத்திலும் அந்த பேரினவாத கரங்கள் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. தமிழ் சமூகம் செறிவாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் அவர்களுக்கான எந்த சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்க விடாது செய்யும் பேரினவாத சிந்தனைகள் கொண்ட அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் தமது காய் நகர்த்தல்களை கச்சிதமாக முன்னெடுத்திருந்தனர். இவர்களுக்கு பல அதிகாரிகளும் பின் நின்றனர்.  தகுதிகள் இல்லாவிட்டாலும் சிங்கள இன அதிகாரிகள் உயர் பதவிகளை அலங்கரித்தனர். 

இப்போது கல்விச்சேவைகளில் தமிழ் அதிகாரிகளை உள்ளீர்க்க விடாது இவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை, நுவரெலியா மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டும் காணாதது போன்று உள்ளனரா அல்லது வாய் திறக்க பயப்படுகின்றனரா என்பது தெரியவில்லை. அதுவும் மலையகத்தில் இனி அடக்குமுறை அரசியலுக்கு இடமில்லையென்றும், அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் உரிமைக்காக பாடுபடுவோம் என்றும் ஒரே மேடையில் தோன்றி மக்களை உற்சாகப்படுத்தியவர்கள் இனி துணிகரமாக இவ்வாறான சம்பவங்கள் குறித்து குரல் எழுப்பாமலிருந்தால் எப்படி?

கல்வி வலயங்கள் பிரிப்பு 

அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள கல்வி வலயங்களை விஸ்தரிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களை விஸ்தரிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் தமிழ்க் கல்வி சமூகத்துக்கு வேண்டுமென்றே பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருகின்றன. அதிக தமிழ்ப் பாடசாலைகளையும் மாணவர்களையும் கொண்ட நுவரெலியா –அட்டன் கல்வி வலயங்களில், அட்டன் கல்வி வலயத்துக்கு மாத்திரமே கடந்த சில வருடங்களாக தமிழ் வலயக்கல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் நுவரெலியா கல்வி வலயத்துக்கு  தமிழ் வலயக் கல்வி பணிப்பாளர் ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை மத்திய மாகாண கல்வித் திணைக்களமும் நுவரெலியா மாவட்ட சிங்கள பிரதிநிதிகளும் என்றும் தருவதில்லை.  மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை இது வரை நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அலங்கரித்து வந்தாலும் கூட இவர்களின் அதிகாரங்கள் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் எடுபடாது என்பதற்கு இது ஒன்றே உதாரணமாகும். 

 அட்டவணை–1 

இல வலயம்                            தமிழ்பாடசாலைகள் சிங்களபாடசாலைகள்    

01 நுவரெலியா                                131                          30    

02 ஹட்டன்                                     115                          31    

03 வலப்பனை                                   30                          89    

04 கொத்மலை                                  42                          43    

05 ஹங்குறன்கெத்த                          12                          69  

நுவரெலியாவில் அமைந்துள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் அதிக தமிழ்ப்பாடசாலைகளைக் கொண்ட வலயங்களாக நுவரெலியாவும் அட்டனுமே உள்ளன. (அட்டவணை –1) 246 பாடசாலைகளிலும் சுமார் 78 ஆயிரம் வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்நிலையில், கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நுவரெலியா   வலயமானது,   

1) நுவரெலியா கல்வி வலயம்

2) தலவாக்கலை கல்வி வலயம்

என இரண்டாகவும் அட்டன்  வலயமானது, 

1) அட்டன் கல்வி வலயம்

2) நோர்வூட் கல்வி வலயம்

எனவும் நான்கு புதிய வலயங்களாக பிரிக்கப்படுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் திடீரென இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு தலவாக்கலையின் ஒரு பகுதி மற்றும் கொட்டகலை அடங்கலாக அட்டன் கல்வி வலயம் என்றும் மஸ்கெலியா மற்றும் நோர்வூட் அடங்கலாக நோர்வூட் கல்வி வலயம் என்றும் அக்கரபத்தனை , டயகம பிரதேச பாடசாலைகளைக்கொண்ட நுவரெலியா வலயம் என மூன்றாக பிரிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முதலில் இந்த கல்வி வலயங்கள் பிரிக்கப்படுவதற்கான ஆலோசனைகளை யார் முன்னெடுத்தது, நுவரெலியா மாவட்டத்தின் அரசியல் பிரமுகர்களுக்கு இந்த நடவடிக்கைகள் தெரியுமா, தெரிந்து கொண்டே அவர்கள் அமைதி காக்கின்றனரா, அல்லது நுவரெலியா மாவட்டத்தின் தமிழ்ப் பிரதிநிதிகள் எவருமே அரசாங்கத்தின் பக்கம் இல்லாத காரணத்தினால் அவர்களை அலட்சியப்படுத்தி விட்டு மத்திய மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் இதை முன்னெடுக்கின்றனரா ? போன்ற கேள்விகளுக்கு பதில்கள் அவசியமாகவுள்ளன. 

தமிழ்ப் பணிப்பாளர்களுக்கான வாய்ப்பை மறுதலித்தல்

வலயக் கல்வி கட்டமைப்புகள்  அமுல்படுத்தப்பட்டவுடன், வலயக்கல்விப் பணிப்பாளர்களாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்   (SLEAS) கொண்டவர்களையே நியமிக்க வேண்டும் என்ற கொள்கை இருந்தது. ஆரம்பத்தில் மலையகப் பிரதேசங்களில் இப்பரீட்சைகளில் தோற்றும் அதிபர், ஆசிரியர்களின் அல்லது வலயக்கல்வி பணிமனையில் பணிபுரியும் உதவிக் கல்வி பணிப்பாளர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல.  

 கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீட்சைகளிலும் சேவை மூப்பு அடிப்படையிலும் நான்கு கல்வி வலயங்களிலும் தரம் 1 மற்றும் 3  வரையான தமிழ் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் 18 பேர் உள்ளனர். (அட்டவணை –௨)  ஆனால் இவர்களின் தகுதிக்கேற்றவாறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். உதாரணமாக ஹங்குரன்கெத்த கல்வி வலயப் பணிப்பாளராக தரம் 3 ஐ கொண்ட பெரும்பான்மையினத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் தரம் 1 மற்றும் 2 ஐ கொண்ட தமிழ் உத்தியோகத்தர்கள் இம்மாவட்டத்தில் இருக்கின்ற போதிலும் குறித்த கல்வி வலயத்தில் சிங்கள பாடசாலைகளைக் கருத்திற்கொண்டு அந்நியமனம் இடம்பெற்றுள்ளது.  

அட்டவணை –2 

இல வலயம்                          கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தர்கள்    

01 நுவரெலியா                                      06    

02 அட்டன்                                             08    

03 வலப்பனை                                        01    

04 கொத்மலை                                       03    

05 ஹங்குரன்கெத்த                                -  

 

நுவரெலியா கல்வி வலயத்தில் அதிக தமிழ்ப்பாடசாலைகள் இருந்தாலும் கூட அங்கு சிங்கள மொழி வலயக்கல்விப் பணிப்பாளர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக பல செய்திகள் பிரசுரமானதைத் தொடர்ந்து அங்கு மேலதிக கல்வி பணிப்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அடுத்த வருடமளவில் அவர் ஓய்வு பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதன் பிறகு அந்த வெற்றிடத்துக்கு எவரையும் நியமிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு எனலாம். 

நுவரெலியா கல்வி வலயத்துக்கு புதிய வலயக்கல்வி பணிப்பாளர் நியமனத்தின் பிறகு அவரை வரவேற்கும் நிகழ்வின் போது  எந்த தமிழ்ப்பாடசாலை அதிபர்களுக்கும் அது குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்பது கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தது. முழுக்க முழுக்க சிங்கள பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மட்டும. இந்த நிகழ்வை முன்னின்று நடத்தினர். 

குறித்த கல்வி வலயத்தில் பணி புரியும் தமிழ் கல்வி அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அமைதியாக இருந்து விட்டனர். 

தற்போது அதிக தமிழ்ப் பாடசாலைகள் மற்றும் ஆசிரிய மாணவர்களைக் கொண்ட  மூன்று கல்வி வலயங்களை உருவாக்கும் வாய்ப்பை பெரும்பான்மை அதிகாரிகள் தட்டிக் கழித்துள்ளனர். மட்டுமின்றி மூன்று கல்வி வலயங்களுக்கும் மூன்று தமிழ் வலயக்கல்வி பணிப்பாளர்களை உருவாக்கும்  சந்தர்ப்பத்தையும் அவர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். இது தமிழ்க் கல்வி சமூகத்துக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியாகும். இது குறித்து நுவரெலியா மாவட்ட எம்.பிக்கள், முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் வாய் மூடி மெளனம் காப்பது தமது சமூகத்துக்கு செய்யும் துரோகமாகும். 

மட்டுமன்றி பல தியாகங்கள் ,சவால்களுக்கு மத்தியில் கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து தமது சேவைகளையும் அனுபவங்களையும் சமூகத்துக்காக ஆற்றவும் பகிரவும்  காத்திருக்கும் தமிழ் உத்தியோகத்தர்களின் முயற்சிகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் முற்றாக மழுங்கடிக்கச்செய்யும் செயலாகவும் இது உள்ளது. 

 ஆனால் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறில்லை.  ஒரு கல்வி வலயமானது 40 பாடசாலைகளையும்  சராசரியாக  20 ஆயிரம் மாணவர்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதுடன்  அது சில இடங்களில் அமுல்படுத்தப்பட்டும் வருகின்றது. இதன் மூலம் கல்வி வளங்களை சரிசமமாக பகிர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

ஆனால் நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் இதில் பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருகின்றன. நுவரெலியா மற்றும் அட்டன் கல்வி வலயங்களில் மாத்திரம் ஒரு வலயத்துக்கு சராசரியாக 40 ஆயிரம் மாணவர்கள் உள்ள அதே வேளை  நூறுக்கும்  மேற்பட்ட பாடசாலைகள் உள்ளன. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.   

இந்த பாரபட்சங்கள் தொடர்பில் கேள்வி  எழுப்புவதற்கும்  நீதி கேட்பதற்கும்  குறித்த கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களுக்கு பெரும் பங்குள்ளது. ஏனெனில் பல இளம் அதிபர்கள் அதிபர் சேவை தரம் 1 கொண்டிருக்கும் அதே வேளை எதிர்காலத்தில் கல்வி நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளுக்கு முகங்கொடுத்து அடுத்த கட்டமாக கல்வி அதிகாரிகளாக வருதற்கான வாய்ப்புகளை  அதிகம் கொண்டிருக்கின்றனர். 

 ஏற்கனவே அட்டன் கல்வி வலயத்தில் கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐ கொண்ட ஒரு பெண் அதிகாரியை வெறுமனே உட்கார வைத்திருக்கின்றனர். தமிழ்க் கல்வி அமைச்சு தொடர்ச்சியாக நுவரெலியாவுக்கே கிடைத்து வருகின்றது  என்ற வரலாற்றுப் பெருமைகளைப் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன் உள்ளது? அந்த அமைச்சு மூலம் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளின் ஊடாக பல பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் கிடைத்திருக்கலாம்.    அதிபர் , ஆசிரியர் இடமாற்றங்களை தமது விருப்புக்கேற்றவாறு செய்திருக்கலாம். ஆனால் கல்வி நிர்வாக செயற்பாடுகளில் எத்தனை தமிழர்களுக்கு சந்தர்ப்பத்தை இந்த அமைச்சு பெற்றுக்கொடுத்திருக்கின்றது? அல்லது சிபாரிகளை செய்திருக்கின்றது? மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் அல்லது செயலாளர் என்ற பொறுப்புகளும் பதவிகளும் கடந்த காலங்களில் இந்த விடயத்தில் ஆற்றிய பங்களிப்புகள் என்ன?  தற்போது மாகாண சபைகள் இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு இடம்பெறுகின்றன என எவரும் இந்த விவகாரத்தை தட்டிக் கழித்து விட முடியாது.   நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள் என்பதை அவர்களே கூற வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right