உணவு பாதுகாப்புவாரத்தை முன்னிட்டு உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட  தேடுதல்கள் மூலம் இதுவரை 51 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியது. நாடுபூராகவும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் பேக்கரி, சிற்றுண்டிச்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய சிற்றுண்டிச்சாலைகளை சோதனை செய்துவருகின்றனர். அதனடிப்படையில் சுகாதார அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4421 பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

ஆரம்ப நாளான திங்கட்கிழமை ஹோட்டல்கள், பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலைகள்  என 4421 உணவகங்கள் சோதிக்கப்பட்டுள்ள. அதில் 208 உணவகங்களின்  உணவு வகைகள்  ஆகாரத்துக்கு உகந்ததல்ல  என தெரிவித்து  அவை அழிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று  பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பாடசாலைக்கு அருகில் அமைந்திருக்கும் சிற்றுண்டிச்சாலைகள் என 682 சிற்றுண்டிசசாலைகள் சோதிக்கப்பட்டுள்ள. அவற்றில் 112 சிற்றுண்டிச்சாலைகளில் ஆகாரதுக்கு பொருத்தமற்ற  உணவுவகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள. அவற்றில் 12 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் நிறம் கலக்கப்படாத மென்பான போத்தல்கள் தொடர்பாகவும் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது முறையற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்து  42 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தூரப்பயண சேவை பஸ் வண்டிகள் நிறுத்தும் இடங்களில் அமைந்துள்ள 86 சிற்றுண்டிச்சாலைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 72 இடங்களில் அமைந்திருந்த சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வகைகள் அழிக்கப்பட்டதுடன் 22 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.