தமிழக ஆளுநருக்கு எதிராக களமிறங்கியிருக்கும் தி.மு.க.

By Digital Desk 2

13 Nov, 2022 | 04:16 PM
image

(குடந்தையான்)

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மூன்று இடங்களில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி அவர்களின் காலூன்றலை பொதுவெளியில் அதிகாரப்பபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் நடைபெற்றதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் அழுத்தத்திற்கு அடிமையாகி விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு, பா.ஜ.க.வினர் களத்தில் இறங்கி எம்மாதிரியான பணிகளை செய்கின்றனர் என்பதனை அவதானித்து, அவர்களின் பாதையில் சென்று அவர்களுக்கு பாடம்புகட்டுவது தான் திராவிட சித்தாந்தத்தின் வலிமை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன், தமிழகத்தில் பா.ஜ.க. என்ன செய்தாலும் அவர்களால் இரண்டு சதவீதத்திலிருந்து அதிகபட்சம் ஐந்து சதவீதமளவிற்கே வாக்குசதத்தை உயர்த்த முடியுமே தவிர, ஆட்சியையோ அல்லது அதிகாரத்தையோ ஒருபோதும் கைப்பற்ற இயலாது. தற்போதுள்ள தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசுடன் நிர்வாக ரீதியிலான சுமுகமான இணக்கத்துடன் பயணிக்கிறதே தவிர, அரசியல் ரீதியாக அதற்கு எதிர் திசையிலேயே பயணிக்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் இந்திய உச்ச நீதிமன்றம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லுபடியாகும் என்ற உத்தரவு வெளியானதும், “இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறமை அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.  

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒன்பது நிதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட வேண்டும் என்றும், இத்தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாகவும் அறிவித்திருக்கின்றமை, முதல்வருக்கும் அவரது கூட்டணிக்கும் வலுச்சேர்ப்பதாகவும் உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் செயற்பாடு, தி.மு.க.வுக்கு எதிராக தீவிரமாக இருக்கிறது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் பா.ஜ.க.வின் ஒவ்வொரு உணர்வுபூர்வமான செயற்பாட்டின் பின்னணியில் அக்கட்சியின் முதிர்ச்சியற்ற தன்மை, பக்குவமற்ற அணுகுமுறை, பொறுப்பற்ற பேச்சு, தகுதியற்ற தலைமை, என்று ஒவ்வொரு விடயத்தையும் மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையிலேயே காணப்படுகின்றது.

அதேநேரம், தி.மு.க. “ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை தீவிரபடுத்தியிருக்கும் தி.மு.க. அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு தலைமையில் ஒருகுழுவினை அமைத்து, ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் கூட்டணி கட்சியினரிடம் கைசாத்து பெற்றுக்கொண்டிருக்கிறது.

தி.மு.க.கூட்டணியிலுள்ள கட்சியை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சியிடமும், தமிழக முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி இருக்கின்றன.

இவ்வாறிருக்கையில், அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆளுநர் தொடர்பான அரசியல் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஜெகதீப் தன்கர் ஆளுநராக இருந்தபோது அவருக்கும், முதல்வருக்கும் பாரதூரமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக மோதல் போக்கை கடைபிடித்தனர். ஆனால் தற்போது அங்கு ஆளுநர் மாற்றப்பட்டு தமிழகத்தை சார்ந்த இல.கணேசன் ஆளுநராக பதவி வகிக்கிறார். 

தற்போது ஆளுநர் இல.கணேசன் இடையே புரிதலுடன் கூடிய நல்லுணர்வு நீடிக்கிறது. இதே போன்றதொரு நிலைப்பாடு, தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் எண்ணமாக இருக்கிறது. இதற்காகத்தான் ஆளுநர் மாற்றப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை முன்வைக்கிறது. இது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்வாரிலால் புரோகித், ஆர்.என்.ரவி என்று ஆளுநர்கள் மாற்றப்பட்டாலும், தமிழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ஆதரவாளர்கள் தான் ஆளுநராக நியமிக்கப்படுவார்கள். அதனால் தி.மு.க., ‘ஆளுநரை மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாலும், அது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், எந்தவித விளைவையும் தமிழகத்தில் ஏற்படுத்தாது. 

பன்வாரிலால் புரோகித் அவரது ஆட்சி காலத்தில் மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநரான ஆர்.என்.ரவி பல்கலைக்கழக அளவில் மற்றும் தனியாக பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்தது எல்லாம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை தோற்றுவித்து வலுப்படுத்துவதற்காக தான் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் ஏனைய இந்துத்துவ அமைப்புகள் தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை விட, சமூகம் சார்ந்த சிந்தனையில், வெறுப்பரசியலை உட்பகுத்தி, மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் வெறுப்புணர்வை உண்டாக்கி, நிரந்தரமான இந்துத்துவா வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் என்பதனை திட்டமிட்டு, அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் இவ்விடயத்தில் தி.மு.க.வுக்கு மறைமுகமாகவும், மக்களுக்கு நேரடியாகவும் விளக்கம் அளிக்க வேண்டிய, ‘வலிமையான எதிர்க்கட்சி’ என்று பறைசாற்றிக் கொள்ளும் அ.தி.மு.க. அமைதி காப்பது மட்டுமல்லாமல், மௌனமாக வேடிக்கை பார்ப்பது, அக்கட்சிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகரித்து விடும்.

ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியான தி.மு.க. மேற்கொண்டு வரும் அரசியல் ரீதியான காய்நகர்த்தல்கள், தற்காலிகமான நிவாரணமே ஒழிய நிரந்தர தீர்வு அல்ல. இருப்பினும் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் முன்னெடுத்து வரும், ‘இந்த ஆளுநரை திரும்ப பெற வேண்டும்’ என்ற முடிவை ஏற்பதா? வேண்டாமா? என்பதையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான் தீர்மானிக்க வேண்டும். அதனால் தி.மு.க.விற்கு இவ்விடயத்தில் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதனை வரும் காலங்கள் தான் உணர்த்தும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்