இன்னொரு கடற்பயணம்

By Digital Desk 2

13 Nov, 2022 | 03:44 PM
image

சுபத்ரா

“ஒரு தொலைபேசி அழைப்பில், நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் என்று அறிவித்ததும் அதனை நம்பி இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைகைகு உதவி கோரியிருக்குமா?”

 “20 சிறுவர்கள், 19 பெண்கள் 264 ஆண்களை உள்ளடக்கி ஆபத்தான பயணத்தினை மேற்கொண்டிருந்த படகை முதலில் நெருங்கியது ஜப்பானிய கப்பல் தான்”

“பணத்தை இலக்காக கொண்ட முகவர்களால் , பாதுகாப்பற்ற ஒரு படகில், ஆழம் நிறைந்த, ஆபத்தான ஆறாயிரம் கடல் மைல் பரந்த பசுபிக் பெருங்கடலைக் கடந்து கனடாவை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டு அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்”

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், கனடா நோக்கிப் பயணித்த, சன் சீ, ஓஷன் லேடி போன்ற கப்பல்களுக்குப் பின்னர், 300இற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களுடன், ஒரு படகின் கனடா நோக்கிய பயணம் இடைநடுவில் நின்று போயிருக்கிறது.

அகதிகளுடன் சென்ற கப்பல் தத்தளிப்பு என பல ஊடகங்கள் தகவல் வெளியிட்ட போதும், அது ஒரு கப்பலே அல்ல. லேடி ஆர் 3 (LADY R3) என்ற மீன்பிடிப் படகே அது.

நீண்ட நாட்கள் ஆழ்கடலில் தங்கி நின்று மீன்பிடிக்க கூடிய அந்தப்படகில் குறிப்பிட்ட சிலருக்கான வசதிகளே இருக்கும். ஆனால் அதில் 303 பேர் இருந்தனர். ஆயிரக்கணக்கான கடல் மைல்களுக்குப் பயணம் செய்வதற்கு ஏற்ற படகு அல்ல அது.

கனடா வரை செல்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அதில் இருந்தவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்  அந்தப் படகில் இருந்திருக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

தென்கிழக்காசியாவில் இருந்து மியான்மார் கொடியுடன் 303 இலங்கைத் தமிழர்களுடன் புறப்பட்ட அந்தப் படகு, கடந்த 5ஆம் திகதி பிற்பகல் 6 மணியளவில், கடும் காற்று மற்றும் கடற் கொந்தளிப்பில் சிக்கி சேதமடைந்தது.

படகின் இயந்திர அறைக்குள் நீர் புகத் தொடங்க, அதனை வெளியேற்றும் முயற்சிகள் பெரியளவில் வெற்றி பெறாத நிலையில், செய்மதி தொலைபேசி மூலம் கனடாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு ஒருவர் உதவி கோரியிருந்தார்.

தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், ஐ.நா.வுடன் தொடர்பு கொண்டு தங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த தொலைபேசி அழைப்பு சரியானதா- உண்மையானதா என்பதை ஆராய்ந்து அறிந்து தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் பலரும் இருந்தனர்.

அதற்கிடையில், படகில் இருந்து ஆபத்து சமிக்ஞை அனுப்பப்பட்டு உதவி கோரப்பட்டது. அப்போது படகு, வியட்நாமின், வூங் டோ முனை (Vung Tau cape) யில் இருந்து 258 கடல் மைல் தொலைவில் காணப்பட்டது.

இந்தநிலையில், 7ஆம் திகதி இரவு இலங்கை கடற்படை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

வியட்நாமுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் படகு ஒன்றில் இருந்து இலங்கையர் ஒருவர் விடுத்த ஆபத்து உதவிக் கோரிக்கையை அடுத்து, இலங்கை கடற்படை வியட்நாம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிடம் உதவி கோரியதாகவும், அதற்கமைய சிங்கப்பூர் கடற்படை அவர்களை மீட்டுள்ளது என்றும் கடற்படைப் பேச்சாளர் இந்திக்க பண்டார கூறியிருந்தார்.

குறித்த படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதை கடற்படை அறிந்திருந்ததே தவிர, அது யாரால் எப்படி மீட்கப்பட்டது என்பதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

ஆபத்தில் இருந்த படகில் இருந்தவர்கள், இலங்கை கடற்படையிடம் உதவி கோரியிருப்பார்களா என்பது முதல் சந்தேகம். ஏனென்றால் இலங்கை கடற்படை ஒருபோதும் உதவிக்கு வரக்கூடிய தொலைவில் அந்தப் படகு இருக்கவில்லை.

ஐ.நா.வின் உதவியைக் கோரியவர்கள், மீண்டும் இலங்கை கடற்படையிடம் சிக்கிக் கொள்ள முனைந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு தொலைபேசி அழைப்பில், நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம் என்று அறிவித்ததும் அதனை நம்பி இலங்கை கடற்படை இவ்வாறானதொரு மீட்பு நடவடிக்கைகைகு உதவி கோரியிருக்குமா?

கப்பலில் ஒரு இலங்கையர் இருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதாக கூறியிருந்தது கடற்படை. அவர் இலங்கையர் தான் என்பதை கடற்படை எவ்வாறு உறுதி செய்தது? இவ்வாறான பல சந்தேகங்கள் உள்ளன.

இந்த நிலையில், கடற்படை தகவல் அறிந்தவுடன் அவர்களை மீட்கும்படி வியட்நாமில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் தேடுதல் ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பியது.

இலங்கை கடற்படை பல நாடுகளுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை பேணுகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுடன், இலங்கை நெருங்கிய கடல் சார் ஒத்துழைப்பை பேணுவதுடன் அந்த நாடுகளிடம் இருந்து ரோந்துப் படகுகள், பயிற்சிகளுக்காக வசதிகளைப் பெற்றுக் கொள்கிறது.

கடல் சார் பாதுகாப்பை பலப்படுத்தும் முக்கிய இலக்குடன் தான், இந்தப் படகுகளை இந்த நாடுகள் வழங்கியிருந்தன.

அண்மையில் ரியூனியன் தீவு நோக்கி இலங்கையில் இருந்து பலர் படகு மூலம் செல்லத் தொடங்கியுள்ளதால், பிரெஞ்சு கடற்படையும் இலங்கை கடற்படையுடன் நெருங்கிப் பணியாற்றுவதற்கு தயாராகி வருகிறது.

இலங்கையை கொண்டு இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நாடுகள் விரும்புகின்ற நிலையில், இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறன் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ஆறு கடற்படையினருடன் ஒரு மீன்பிடிப்படகு மர்மமான முறையில் காணாமல் போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றிய விசாரணைகள் இன்னமும் இடம்பெறுகின்றன.

அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைந்த பல புகலிடக் கோரிக்கைப் படகுகள் கைப்பற்றப்பட்டு அதிலிருந்தவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டியாகோ கார்சியா, ரியூனியன் தீவுகளை நோக்கிப் படகுகளில் தப்பிக்கின்ற முயற்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

அயலில் உள்ள இந்தியாவுக்கும் தொடர்ச்சியாக பலர் அகதிகளாக செல்கின்றனர். இதனைத் தடுப்பது குறித்து அண்மையில் இந்திய கடற்படைக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையில் நடுக்கடலில் பேச்சுக்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறாக, இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறன் பிறநாடுகளால் கவனிக்கப்படும் நிலையில், அதனைக் காரணமாக வைத்து பல நாடுகளிடம் இலங்கை பாரிய உதவிகளைப் பெற்றிருக்கின்ற நிலையில், 303 பேருடன் ஒரு படகு வியட்நாம் கடல் வரை பயணித்திருப்பது எல்லோரையும் திகைக்க வைத்தது.

எனவே தான், இலங்கை கடற்படை அவசரமாக தொடர்பு கொண்டு அவர்களை காப்பாற்றி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரும் வகையில் செயற்பட்டது.

சிங்கப்பூர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்ற நாடு அல்ல. அதனால் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டால், அவுஸ்ரேலியாவைப் போலவே, அவர்களை திருப்பி அனுப்பும் என்று அரசாங்கம் நம்பியது.

அதனால் படகை மீட்க அரசாங்கம் சிங்கப்பூரிடம் உதவி கோரியதாகத் தெரிகிறது.

ஆனால், படகு வியட்நாமுக்கு அருகிலேயே காணப்பட்டது. வியட்நாம் கடல்சார் தேடுதல் மீட்பு நிலையத்துக்கு சென்ற உதவிக் கோரிக்கையை அடுத்து, அதன் அருகே எந்தெந்தக் கப்பல்கள் காணப்படுகின்றன என்று ஆராயப்பட்டது.

ஜப்பானில் இருந்து சிங்கப்பூருக்கு கார்களை ஏற்றிக் கொண்டு செல்லும், ஹெலியஸ் லீடர் (Helios Leader) என்ற கப்பலே, படகுக்கு மிக அருகில் காணப்பட்டது.

கடந்த 7ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் அந்தக் கப்பலுக்கு தகவல் கொடுக்கப்பட்டு படகில் இருந்தவர்களை மீட்க அறிவுறுத்தப்பட்டது.

அதைவிட, அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த வேறு 5 கப்பல்களையும், தேவைப்படின் உதவிக்காக தயார் நிலையில் இருக்குமாறு அனுப்பி வைத்தது வியட்நாமின் கடல்சார் மீட்பு மற்றும் தேடுதல் நிலையம்.

அடுத்த 40 ஆவது நிமிடம், ஜப்பானிய கப்பல், படகை நெருங்கியது.  அதில் இருந்த 20 சிறுவர்கள், 19 பெண்கள் 264 ஆண்களை மாலை 7 மணியளவில் ஜப்பானியக் கப்பலில் ஏற்றப்பட்டனர்.

அவர்களுக்கு கப்பலில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதுடன், மறுநாள் காலை 8 மணிக்கு உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்குப் பின்னரே, இலங்கை அரசாங்கம் வியட்நாமிடம் கேட்டுக் கொண்டதற்கமையவே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறியது.

உடனடியாகவே அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக வியட்நாமிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் வியட்நாம் இன்னமும் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

போர் முடிந்த பின்னர், 1975ஆம் ஆண்டுக்கும் 1995 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் படகு அகதிகளால் மிகப்பெரிய அவலங்களைச் சந்தித்த நாடு வியட்நாம்.

அப்போது படகுகளில் அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளை நோக்கி அகதிகள் படையெடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் 4 இலட்சம் பேர் வரை கடலில் மாண்டதாக ஐ.நா. மதிப்பிட்டிருக்கிறது. 

இலட்சக்கணக்கான வியட்நாமியர்கள் பல நாடுகளில் புகலிடம் தேடினார்கள். அவ்வாறானதொரு நாடு, இலங்கை அகதிகளை எவ்வாறு கையாளப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

படகில் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் டொலர்கள் செலுத்தி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த கடல் பயணத்துக்கான ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர்கள் இன்னமும், 8 நாட்களில் அமெரிக்காவில் இருப்பார்கள் என்றும், அவர்கள் ஐ.நா.கப்பலில் ஏற்றப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் ஏமாற்றுகின்ற தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் பரவுகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் 76 பேர் கப்பலில் இருந்தனர் என்று கூறப்படும் நிலையில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 49 பேர் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகவர்களை கண்டறிய அவர்களின் உறவினர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பயண முயற்சி ஆபத்தானது. பாதுகாப்பற்ற ஒரு படகில், ஆழம் நிறைந்த, ஆபத்தான ஆறாயிரம் கடல் மைல் பரந்த பசுபிக் பெருங்கடலைக் கடந்து கனடாவை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டு அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இவர்களின் புகலிடக் கோரிக்கையை கனடா பரிசீலிக்க வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

மறுபக்கத்தில் இவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டால், இதுபோன்ற ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளப் பலரும் துணிவார்கள், ஆட்கடத்தல்காரர்களும் உற்சாகமடைவார்கள் என்ற பயம் கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு உள்ளது.

இவ்வாறான சூழலில், 303 தமிழர்களும், தற்போதைக்கு திரிசங்கு நிலையில் தான் இருக்க வேண்டும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right