கிடைக்குமா நிதி ஒதுக்கீடு ?

Published By: Digital Desk 2

13 Nov, 2022 | 01:19 PM
image

(கார்வண்ணன்)

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் போதுமான நிதி கிடைக்காத நிலையில் சாட்சியங்களை திரட்டும் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இந்த ஆண்டில் ஏழுவாரங்களே எஞ்சியுள்ளன”

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட, இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும், 51/1 தீர்மானம் கடந்த செவ்வாயன்று ஐ.நா பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த தீர்மானம், 7 நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்க, 20 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் தவிர்த்த நிலையில், 20 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர், பெட்ரிக்கோ வில்லேகாஸ் இந்த தீர்மானத்தை பொதுச்சபையில் முன்வைத்திருக்கிறார்.

இந்த தீர்மானத்தின் மூலம், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்துக்கு இடப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றுவதற்கு 6.092 மில்லியன் டொலர்கள் தேவை என்று, மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காகவே, குறித்த தீர்மானம் பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், கடந்த 10ஆம் திகதி ஐ.நா செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியொன்றில், மனித உரிமைகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட இந்த ஆண்டில் குவளையின் அரைப்பகுதி தான் நிரம்பியிருக்கிறது என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர், பெட்ரிக்கோ வில்லேகாஸ் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் போதுமான நிதி கிடைக்கவில்லை என்பதையே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

கொரோனா, காலநிலை மாற்றம், யுக்ரைன் போர் என இந்த ஆண்டில் முப்பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைமைப் பொறுப்பை வகிப்பது, சுனாமியின் சிக்கிய கப்பலுக்கு தலைமை தாங்குவதற்கு ஒப்பானது என்றும் அவர் விபரித்திருக்கிறார்.

அவர் இதனைக் கூறியிருப்பதற்கு முக்கியமான காரணம், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை மற்றும் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் செயற்பாடுகளை, முன்னெடுப்பதற்குப் போதிய நிதி இல்லை என்பதனாலேயாகும்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தில், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஆதாரங்கள், சாட்சியங்களை சேகரித்துப் பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் பணியகத்தை உருவாக்கும் ஆணை வழங்கப்பட்டது.

அதனைச் செயற்படுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்துக்கு உரிய நேரத்தில், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் அந்தச் செயற்பாடுகளைத் தொடங்குவதில் இழுபறிகள் ஏற்பட்டு, கடந்த மே மாதமே அது இயங்கத் தொடங்கியது. அந்தப் பொறிமுறையை மேலும் வலுப்படுத்தி, காத்திரமாக செயற்பட வைப்பதற்கு, 51/1 தீர்மானத்தில், ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, இந்த ஆண்டின் இறுதி 3 மாதங்களுக்கும், 0.567 மில்லியன் டொலர்கள், 2023ஆம் ஆண்டின் 12 மாதங்களுக்கு, 3.398 மில்லியன் டொலர்களும், 2024 ஆம் ஆண்டின், 9  மாதங்களுக்கு, 2.127 மில்லியன் டொலர்கள் என - இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரையான காலப்பகுதிக்கு, மொத்தம், 6.092 மில்லியன் டொலர்கள் தேவை என்று பேரவையின் திட்ட மதிப்பீட்டுச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி எவ்வளவு விரைவாக அங்கீகரிக்கப்படுமோ, அவ்வளவு விரைவாக, தமது பணியை முன்னெடுக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூறியிருக்கிறது.

இந்த ஆண்டில், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியகத்தின் இரண்டு அதிகாரிகள், ஐரோப்பாவில் ஐந்து நாட்கள், தகவல் சேகரிப்பு பணயத்துக்கு திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் தமது பயணத்தை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு இன்னும் 7 வாரங்கள் மாத்திரமே உள்ளன. அதற்குள் இந்த நிதி விடுவிக்கப்பட வேண்டும்.

2023ஆம் ஆண்டு, தகவல் சேகரிப்புக்காக இரண்டு அதிகாரிகள், ஐரோப்பாவிற்குள் 5 நாட்கள் ஒரு பயணத்தையும்,  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தகவல் சேகரிப்பதற்கும் மூன்று அதிகாரிகள் 5 நாட்கள், கொழும்புக்கான ஒரு பயணத்தையும், பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைகளை ஒழுங்கமைக்கவும், பங்கேற்கவும் மற்றும் தகவல் சேகரிப்பில் பங்கேற்கவும் இரண்டு அதிகாரிகள், 7 நாட்கள் ஒரு பிராந்திய இடத்திற்கான ஒரு பயணத்தையும்,  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுத்து மூல புதுப்பிப்பு, வாய்வழி புதுப்பிப்புகளுக்கான தயாரிப்பில் ஆலோசனைகளை நடத்துவதற்கு, ஒரு அதிகாரி இலங்கைக்கு 5 நாட்களைக் கொண்ட இரண்டு பயணங்களையும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோன்று, 2024ஆம் ஆண்டு, தகவல் சேகரிப்புக்காக இரண்டு அதிகாரிகள், ஒரு பிராந்திய இடத்திற்கு 5 நாட்கள் ஒரு பயணத்தையும், தகவல் சேகரிப்புக்காக இரண்டு அதிகாரிகள், வட அமெரிக்காவிற்கு 5 நாட்கள் ஒரு பயணத்தையும்,  பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசனைகளை ஒழுங்கமைக்கவும் பங்கேற்கவும் இரண்டு அதிகாரிகள், 7 நாட்கள் ஒரு பிராந்திய இடத்திற்கு ஒரு பயணத்தையும், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்துக்கு, விரிவான அறிக்கையைத் தயாரிப்பதற்கு, ஆலோசனைகளை நடத்துவதற்காக இரண்டு அதிகாரிகள் 5 வேலை நாட்கள் இலங்கைக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளவும்,

போரின் உச்சக்கட்டத்தின் போது பெறப்பட்ட செய்மதி படங்களின் ஆதாரங்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவுமே, 6.092 மில்லியன் டொலர் நிதி தேவை என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிதியை ஐ.நா. பொதுச்சபையின் அனுமதியுடன் ஐ.நா பொதுச்செயலாளர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான பணிகளில் குறுக்கீடுகள் இருக்காது என்று கூறுவதற்கில்லை.

ஏனென்றால், சாட்சியங்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை ஒரு வீண் வேலை என்றும், அதற்காக செலவிடப்படும் நிதி வீணானது என்றும், இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருப்பதுடன், அந்தப் பொறிமுறையை ஏற்கவும் மறுத்து வருகிறது.

அதேவேளை, கடந்தமுறை இந்தப் பொறிமுறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முயன்ற போது, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற இலங்கையின் பல நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டதால்,  குறித்த அலுவலகத்தின் பணிகள் திட்டமிடப்பட்டதை விட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த பணியகத்தை வலுப்படுத்தி, அதனை பணியை விரிவுபடுத்தும் ஆணை பேரவையினால் வழங்கப்பட்டுள்ளதால், கோரப்பட்டுள்ள நிதியை ஐ.நா பொதுச்சபை வழங்க வேண்டும்.

இதற்கு இலங்கையின் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிடக் கூடும். எவ்வாறாயினும், இந்த நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டால், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் செயற்பாடு மற்றும் விசாரணைகளை பாதிக்கும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நிறைவேற்றினாலும், பொதுச்சபை நிதி ஒதுக்கீட்டில் வெட்டிக் குறைப்புகளை செய்தால், ‘கடவுள் வரம் கொடுத்தும் பூசாரி இடம்கொடுக்காதது’ போன்ற நிலை தான் ஏற்படும்.

அது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஆதாரங்கள், சாட்சியங்களை சேகரித்துப் பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் முயற்சிகளை குறைமதிப்புக்குட்படுத்துவதாகவே இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13