பெருந்தோட்டப்பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணங்கள் என்ன ?

By Priyatharshan

13 Nov, 2022 | 12:01 PM
image

வீ.பிரியதர்சன்

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதாவது சுமார் 30 சதவீத மக்கள்  தற்போது உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

86 சதவீதமானவர்கள் மலிவான விலைகளில் பொருட்களை பெறுதல் போன்ற சமாளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். 95 சதவீதமானவர்கள் குறை சத்துள்ள உணவை நுகர்கின்றனர். 83 சதவீதமானவர்கள் பகுதி அளவில் உணவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். 66 சதவீதமானவர்கள் தினசரி உணவை கட்டுப்படுத்தியுள்ளனர். 

கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், ஏனைய நடுத்தர வருமான நாடுகளை விட இலங்கைப் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 17 சதவீதமானோர் வளர்ச்சி குன்றியதால் மிகவும் குட்டையாகவும், 15 சதவீதமானோர் மிகவும் உடல் மெலிவாகவும் காணப்படுகின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி இதை மேலும் மோசமாக்கும்” என்று உலக உணவுத் திட்டத்தின் சமகால நிலைமைகளை உள்ளீர்த்துள்ள ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நுவரெலியா மாவட்டம் 

அதன்படி, இலங்கையின் நுவரெலியா மாவட்டம் மந்தபோசணையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசமாக காணப்படுகின்றது. கிராமம், நகரம், பெருந்தோட்டம் என்று வகைப்படுத்தி இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் போது பெரும்பாலும் இவ்வாறு மந்தபோசனையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இலங்கையில் சிறுபான்மை தமிழ்பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களாகவே காணப்படுகின்ற நிலையில் அதிலும் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளே அதிகம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இது தொடர்பாக சில தோட்டப்பகுதிகளுக்குச் சென்று தகவல்வளை திரட்டக் கூடியதாகவிருந்தது.

காரணங்கள் என்ன?

‘எனது தந்தை இறந்து 3 மாதங்கள். கணவன் மதுப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் காலமானார். எனக்கு 3 பிள்ளைகள். ஒரு நாளைக்கு 1000 ரூபாவை பெறுவது சிரமமானது. தோட்ட தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல. கணவர் இறந்த சந்தர்ப்பத்தில் தோட்ட மக்கள் உதவி செய்தார்கள். தற்போது சகலருக்கும் பிரச்சினை உள்ளது. எவரிடமும் உதவி கேட்க முடியாது. தோட்ட தொழில் ஊடாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும், மூத்த மகனை நம்பியே உள்ளேன் என்கிறார் வறுமைக்கு எதிராக போராடும் தேயிலைத் தோட்டத் தொழிலாளியான 31 வயதுடைய பார்வதி.

இவ்வாறு பல கதைகள் உள்ளன. தற்போதைய சூழலில் நாடளாவிய ரீதியில் கர்ப்பத்தில் உள்ள சிசுக்கள் முதல் எதிர்கால சந்ததியினரின் மூன்று வேளை உணவைப்பெற்று சுகதேகியாக வாழும் நிலைமைகளை இருள் கௌவிக்கொண்டுள்ளது. 

வறுமை பிரதான காரணம்

“ மந்தபோசணையால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக வறுமை, வருமானமின்மை, பொருளாதார நெருக்கடியே காணப்படுகின்றன. இவ்வாறு வருமானம் குறைவாகக் காணப்படுவதால் பிள்ளைகளுக்கு பால்மாவோ அல்லது புரதச் சத்துள்ள மீன், முட்டை போன்ற போசணையான உணவுகளை பெற்றுக்கொடுப்பதில் பெற்றோர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்” என மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் நரேந்திரகுமார் கூறுகிறார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னதாகவே தெற்காசியப் பிராந்தியத்தில், மந்தபோசணையுடைய சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது உலகளாவிய ரீதியில் மந்தபோசணையுடைய சிறுவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படும் நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்து உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து போசனைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் கூறுகிறார்.

“ எனக்கு மாதம் 15 அல்லது 16 ஆயிரம் ரூபா மட்டுமே வருமானமாக கிடைக்கின்றது. பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். உணவிற்கான பிரச்சினை உள்ளது என்கிறார் பார்வதி.

இலங்கையில் வாழும் சிறுவர்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன. இருப்பினும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போசணை மற்றும் வளர்ச்சி என்பவற்றுக்கு அவசியமான வளங்களைப் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலையிலுள்ளனர் என்று யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

சிறுவர்களின் நிலை

பல சிறுவர்கள் போஷாக்குக் குறைவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சிறுவர்களில் பலர் பெருந்தோட்டத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான குடும்பங்களில் வருமானமின்மையே பிரதானமான காரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலை 13.2 சதவீதமாக குறைந்துள்ளதுடன், தற்போது அது 12.1 ஆக குறைந்துள்ளதாகவும் ஏனைய நாடுகளைப் போன்று இந்நாட்டில் சிறுவர்கள் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் அபாயம் இல்லை என்றும் மராமஸ், குவோஷியோகர் போன்ற கடுமையான போசாக்குக் குறைபாடுகள் எதுவும் இல்லை எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்த சற்று ஆறுதலான செய்தியை தெரிவித்துள்ளார்.

 

பிள்ளைகளுக்கு உணவு பிரச்சினை உள்ளது.பிள்ளைகளுக்கு போசாக்கின்மையால் பிள்ளைகளின் கல்வி அறிவும் பாதிக்கப்படுகிறது. அதேமட்டத்தில் சாதாரண போசனையில் உள்ள பிள்ளைகள் மந்தபோசன நிலையினை அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. பிள்ளைகளுக்கு நிறைவான உணவை வழங்குவது கூட பிரச்சினையாகவுள்ளது”. என்கிறார்  சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர் வள்ளியம்மை.

“ தற்போதைய வாழ்க்கை செலவு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. நாளாந்தாம் 1000 ரூபாவை பெற்றுக்கொள்வது மிகச் சிரமமானது.தோட்ட தொழிலில் கிடைக்கும் வருமானம் போதுமானதல்ல” என்கிறார் பார்வதி.

ஏற்கனவே பெருந்தோட்டப் பகுதியில் வாழும் மக்களின் வருமானம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி அதிகரிப்பையடுத்து அவர்களின் வருமானம் மேலும் கீழ் மட்டத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையில் தொழில் செய்வோர் 20 கிலோ தேயிலைக்கொழுந்தை பறித்தால் தான் அவர்களுக்கு ஒருநாளைக்கு 1000 ரூபா கிடைக்கின்றது. இதைவிட பெரும்பாலும் அவர்களுக்கு அந்த 1000 ரூபாவே முழுமையாக கிடைப்பதில்லை. என்கிறார் மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் நரேந்திக்குமார்.

அதிகமான மதுபாவனை ஒரு பிரச்சினை தான்

“ 1000 ரூபா கிடைத்தாலும் அந்தப் பணத்தை திட்டமிட்டமுறையில் முகாமைத்துவம் செய்வதில்லை. அந்தப் பணங்கள் மாதுபானசாலைகளுக்கு தான் செல்கின்றன. இவ்வாறு மதுவிற்கே அதிகமாக பணத்தை இந்த மக்கள் செலவழிக்கின்றனர். இவ்வாறு மதுவை கட்டுப்படுத்த எம்மால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியதுள்ளது.

இதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு மதுபானசாலைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றன. அரசாங்கம் மதுபானசாலைகளை குறைத்து அவற்றை கட்டுப்படுத்தலாம்” எனவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். 

அதிக மதுபானசாலைகள் எங்கு உள்ளன?

இலங்கையைப் பொறுத்தவரை அதிக மதுபானசாலைகளைக்கொண்ட மூன்றாவது மாவட்டமாக நுவரெலியா திகழ்வதுடன் அதிக மதுவை நுகர்வோரை கொண்ட மாவட்டங்களில் பிரதான இடத்தை வகிக்கும் பிரதேசமாகவும் இது விளங்குகிறது. கூடுதலாக பெருந்தோட்டப்பகுதி மக்களே அதிக மதுவை நுகர்வதாக காலங்காலமாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் இலங்கையில் அமைந்துள்ள மதுபான சாலைகள், அதிக மதுபான சாலைகளைக் கொண்ட மாவட்டம் ,மாகாணம் மற்றும் மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானம் பற்றி தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக இலங்கை மது வரி திணைக்களத்துக்கு விண்ணப்பித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,

அதிகூடிய மதுபான நிலையங்கள் அமைந்துள்ள மாகாணங்களில் முதலிடத்தில் மேல் மாகாணம் உள்ளது. இங்குள்ள மூன்று மாவட்டங்களில் கொழும்பில்- 804, கம்பஹாவில் 526, களுத்துறையில் 198 என மொத்தமாக 1528 மதுபானசாலைகள் உள்ளன. அதிக மதுபானசாலைகள் உள்ள இரண்டாவது மாகாணமாக மத்திய மாகாணம் விளங்குகிறது. இம்மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 289, நுவரெலியா மாவட்டத்தில் 234, மாத்தளை மாவட்டத்தில் 137 என மொத்தமாக 660 மதுபானநிலையங்கள் உள்ளன.

நுவரெலியா போன்ற போசாக்கு குறைந்த பிள்ளைகள் வசிக்கும் மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் வருமானத்தில் பெரும்பகுதி இந்த மதுபானசாலைகளுக்கே செல்கின்றபோது எவ்வாறு பிள்ளைகளுக்கு போசாக்கான உணவுகளை வழங்க முடியும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றது.

அப்படியானால் இங்கு மதுபானசாலைகள் அதிகரிக்க யார் காரணம் ? இம்மாவட்ட பிரதிநிதிகள் இது குறித்து ஏன் கண்டு கொள்வதில்லை? இது இவ்வாறிருக்க, “ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 14.6 சதவீதமானோர் வயதுக்கேற்ற நிறையைக் கொண்டவர்களாக இல்லை. ஐந்து வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் மத்தியிலான நிறைகுறைவைப் பொறுத்தவரை நுவரேலியா மாவட்டமே உயர்ந்த வீதத்தைக் (21) கொண்டிருக்கிறது”என குடும்ப சுகாதார பணியக ஆலோசகர் வைத்திய கலாநிதி கௌசல்யா கஸ்தூரியாராச்சி கூறுகிறார்.

எதிர்காலம் எப்படியாக இருக்கப்போகின்றது ?

பெருந்தோட்ட மக்களின் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டுமானால் அரசாங்கமும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் இந்த மக்களின் வாழ்வியல் சார் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நீண்ட கால திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். போசாக்கான உணவுப் பழக்கவழக்கத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அவற்றை பெற்றுக்கொள்ளக் கூடிய பொருளாதார சூழலையும் உருவாக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் பல்பொருள் அங்காடிகள் சதொச போன்ற விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டன. இவற்றின் ஊடாக சாதாரண மக்கள் பெரிதும் பயனடைந்தனர். இவ்வாறான திட்டங்களை தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு உணரப்படுகின்றது.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது குணமாக்க முடியாத நோயோ அல்லது தீர்க்க முடியாத பிரச்சனையோ கிடையாது. மாறாக அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுளின் பிரதிபலிப்பாகவே இந்த ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது. எனவே இதனை தேசிய பிரச்சினையாக கருதி செயற்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலும் ராஜபக்சாக்களும்

2022-12-09 08:12:16
news-image

அரசியல் தீர்வுக்கு இந்திய முன்மாதிரி

2022-12-08 21:47:36
news-image

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கடன்...

2022-12-09 08:49:19
news-image

தேர்தலில் கட்சி சார்பற்று சுயாதீனமாக செயற்படுவேன்...

2022-12-05 10:51:49
news-image

போஷாக்கு குறைபாட்டால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு

2022-12-05 11:14:06
news-image

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்: எயிட்ஸ்...

2022-12-01 10:26:30
news-image

தேர்தல்கள் மூலமாகவே ஆட்சிமுறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும்

2022-11-29 16:01:26
news-image

மகிந்தவும் சர்வதேச சதியும்

2022-11-28 08:17:47
news-image

மோடி - ரணில் சந்திப்புக்கு நாள்...

2022-11-26 16:25:50
news-image

சீனா தயக்கம் : இதுதான் காரணம்

2022-11-24 10:16:35
news-image

மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

2022-11-28 08:52:40
news-image

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும்...

2022-11-21 21:47:01