தமிழக அரசை போன்று தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்கு செவிமடுத்தும், அரசியல் கைதிகளின் நன்நடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட அரசு துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 30 வருட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்திருப்பதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மகிழ்ச்சியோடு வரவேற்று பாராட்டுகின்றது.
இவர்களுடைய விடுதலைக்காக பாடுபட்ட தமிழக அரசு உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவிக்கின்றது. இந்த வழக்கின் தீர்ப்பை முன் மாதிரியாக கொண்டேனும் இலங்கை சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 12,000 முன்னாள் போராளிகள் சமூக மயமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு குறுகிய காலத்திலேயே நன்நடத்தையாளர்களாக அடையாளம் காணப்பட்டு இவர்கள் சமூகமயமாக்கப்பட்டனர்.
தொடர்ந்து அரசியல் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவரை கொலை செய்வதற்காக முயற்சித்தவர் என பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதேபோன்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி காலத்திலும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 16 பேர் விடுவிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். தற்போதைய ஜனாதிபதியும் அண்மையில் சிலருக்கு விடுதலைக்கு அனுமதி அளித்திருந்தார்.இதற்கு இவர்களின் நன்நடத்தையும் ஒரு காரணமாகும்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட காலம் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு காலகட்டத்திலும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவோ எதனையும் செய்யவில்லை. நன்னடத்தை மிக்கவர்களாகவே காணப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு முன் அறிவிப்பு செய்தே பல்வேறு கால கட்டங்களில் சிறைச்சாலை பொருட்களுக்கோ அல்லது வேறு எதற்குமோ எந்த விதமான சேதங்களையும் ஏற்படுத்தாது அமைதி போராட்டங்களையே நடத்தியுள்ளனர். இப்ப போராட்ட காலத்தில் சிறந்த ஒழுக்க நெறியை கடைப்பிடித்துள்ளனர். தொடர்ந்து சிறைச்சாலை நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற்றவர்களாகவே உள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பலர் ஒப்புதல் வாக்கு மூலமே குற்றவாளிகள் ஆக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டும், தமிழக அரசை போன்று தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனும் குரலுக்கு செவிமடுத்தும் ,அரசியல் கைதிகளின் நன்நடத்தையை அடிப்படையாகக் கொண்டும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட அரசு அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயலும் அரசு அம் மக்களின் நீண்ட கால பிரச்சினைகளில் ஒன்றானதும் அரசியல் பிரச்சினையோடு நேரடி தொடர்புபட்டதுமான அரசியல் கைதிகளில் விடுதலை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும். அதுவே அரசின் மீதான நம்பிக்கைக்கு வழிவகுக்கும். பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் இந் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் இவ்வேளையில் அதற்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துணை செய்யும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM