துரை ரட்ணசிங்கம் ஒரு தமிழ்த் தேசிய பற்றுறுதியாளராக செயற்பட்டார் - சிறீதரன்  

Published By: Nanthini

12 Nov, 2022 | 10:48 AM
image

(இரஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம் வசீம்)

பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த துரை ரட்ணசிங்கம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் காலவர்த்தமான மாற்றங்களாலும், அதிகார பீடங்களின் எதேச்சதிகார இயங்குவிதிகளாலும் வஞ்சிக்கப்பட்ட சுதேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்தின் ஆத்மமாக, தமது உரிமைகளை இழந்து, சொந்த மண்ணிலேயே மலினப்பட்டிருக்கும் தமிழினத்தின் மீட்சிக்காக தன்னாலான பணிகளை ஆற்ற வேண்டுமென்ற ஆழ்மன உந்துதல் கொண்ட ஒரு தமிழ்த் தேசிய பற்றுறுதியாளராக வாழ்ந்தவர். 

கட்சிக் கட்டமைப்பினுள் எல்லோரையும் அனுசரித்து, நாம் எட்டவேண்டிய இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும் காப்பாளனாகவும், எமது கட்சியின் வளர்ச்சிக்கான வழிகாட்டியாகவுமே, தனது இறுதிக் கணம் வரை இதய சுத்தியோடு செயற்பட்டிருந்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ 11) இடம்பெற்ற அனுதாப பிரேரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறிகையில்,

தமிழர்களின் தலைநகர் எனும் போற்றுதலுக்கும், மரபார்ந்த அடையாளங்களுக்கும் உரித்துடைய திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், சேனையூரை பிறப்பிடமாகக் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி துரைரட்ணசிங்கம் தான் பிறந்த மண்ணிலேயே கல்வி கற்று, அதன்வழி உயர்நிலை அடைந்த உன்னத ஆசிரியராக, 1960ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆசிரியப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட அதேவேளை, தன் சொந்த மண்ணிலேயே மிகச் சிறந்த ஆளுமை மிக்க அதிபராக மிக நீண்ட காலம் கருத்தொன்றி சேவையாற்றினார்.

அதன் பின் திருகோணமலை வலயக்கல்வித் திணைக்களத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். 

இள வயதிலிருந்தே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொள்கைவழி அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது பணி ஓய்வின் பின்னர் நேரடியான அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினார். 

அப்போதைய சூழலில் நிகழ்ந்த மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் மறைவுக்குப் பின்னர், 2002ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியலில் தனது நேரடிப் பிரசன்னத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், மாவட்ட எல்லைகளை கடந்து மக்கள் நலன் சார்ந்து செயற்பட்ட மாமனிதனாகவும், இந்த நாட்டில் எங்கெல்லாம் தமிழினத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் எமது மக்களின் குரலாக ஐயாவின் குரலும் ஆழமாய் ஒலித்திருக்கிறது.  

அதையும் தாண்டி மக்கள் மனமறிந்த, மக்களின் பிரதிநிதியாக இருந்து, கட்சிப் பணிகளிலும் அபிவிருத்திப் பணிகளிலும் தன்னாலான கனதியான பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். 

அவர் ஆற்றி முடித்த அரும்பணிகளை கடந்து, தான் ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்த காலத்தே, தனது பிரதேச மக்களுக்காக சில அடிப்படை அபிவிருத்திப் பணிகளை ஆற்றி முடிக்கவேண்டும் என்று அவாவுற்று, அதற்காக பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தும்,  அவரின் காலத்தே அவை கைகூடாமல் போனமை கவலையளிக்கிறது.

மிக முக்கியமாக, திருகோணமலையில் அமையப்பெற்றுள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தினை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமென்ற அவரது முதன்மைக் கோரிக்கை, இன்றளவும் நிறைவேறாத கோரிக்கையாகவே இருந்துவருகிறது. 

அதுபோலவே அவரின் பிறப்பிடமான சேனையூருக்கும், அதனை சூழவுள்ள கட்டைபறிச்சான், சம்பூர், கூனித்தீவு, இளக்கந்தை, பாட்டாளிபுரம் முதலிய பல கிராமங்களுக்குமான ஒரே ஒரு போக்குவரத்து மார்க்கமான பிரதான வீதியில் அமைந்துள்ளதும், 1950களில் நிர்மாணிக்கப்பட்டு, தற்பொழுது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுமான கட்டைபறிச்சான் பெரிய பாலத்தை புனரமைக்க அல்லது புதிதாக நிர்மாணிக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையும், திருகோணமலை நகரப் பகுதியில் வீதி சமிக்ஞைகள் இன்மையால் நாளாந்தம் நிகழ்ந்தேறும் விபத்துக்களையும், அதனால் சம்பவிக்கும் மரணங்களையும் தவிர்க்கும் முகமாக உட்துறைமுக வீதியில் இருந்து அபயபுர சந்தி வரையான பகுதிகளில் வீதி சமிக்ஞைகள் அமைக்க வேண்டும் என்றும் பல தடவைகள் முன்மொழிந்த போதும், அவரின் காலத்தில் அவை நிறைவேறாமல் போனமை கவலைக்குரியது.

மிகச் சிறந்த கல்வியியலாளராக, குடும்பத் தலைவனாக, தன் மூன்று குழந்தைகளையும் சமூகச் சிற்பிகளாக செதுக்கிய பொறுப்புமிக்க தந்தையாக, கொள்கைப் பற்றுமிக்க அரசியல்வாதியாக என தான் வரித்துக்கொண்ட அத்தனை பொறுப்புக்களிலிருந்தும் விலகாமல், அந்தந்த பணிகளுக்குரிய கடமைகளை  செவ்வனே ஆற்றி முடித்து, தனது 80ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்த மதிப்பார்ந்த மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர். கதிர்காமத்தம்பி துரை ரட்ணசிங்கம் தான் ஆற்றிய பணிகளின் கனதியாலும் சிறப்பாலும் என்றென்றும் எம் மனங்களில் நீக்கமற நிறைந்திருப்பார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளரின் வாக்குகள் நிராகரிக்கப்படும்...

2024-09-18 11:11:06
news-image

அனைவரும் மறந்து விட்டாலும் தனியார் துறையை...

2024-09-18 11:08:20
news-image

ஊழலிற்கு உதவினார் என்பது உறுதியானால் ரணிலுக்கு...

2024-09-18 10:42:01
news-image

வவுனியாவில் தேர்தல் பதாதைகள், சுவரொட்டிகளை நீக்கும்...

2024-09-18 10:54:27
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-18 10:31:57
news-image

சிறுவர்கள், பெண்களின் உரிமையை நாட்டின் அடிப்படை...

2024-09-18 10:21:26
news-image

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட...

2024-09-18 10:40:21
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,737...

2024-09-18 10:25:02
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகைப் பணத்தை...

2024-09-18 09:56:54
news-image

வாகன விபத்தில் மூன்றரை வயதுடைய குழந்தை...

2024-09-18 10:29:39
news-image

இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேர்தல்...

2024-09-18 09:31:58
news-image

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-09-18 09:04:31