கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ்  03 ஒழுங்குவிதிகள் - டக்ளஸ்

Published By: Digital Desk 2

11 Nov, 2022 | 11:10 AM
image

எமது கடற்றொழில் அமைச்சின் மூலம், 1996 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் கொண்டுவரப் படுகின்ற இந்த கௌரவ சபையிலே எனது கருத்துக்களையும் பதிவு செய்வதற்கு வாய்ப்பினை வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் வெறுமனே பாதகங்களை மட்டுமே உலகளவில் கொண்டு வந்திருந்த, இன்னும் முடிவுறாது தொடர்கின்ற அனர்த்தங்கள் எமது நாட்டையும் விட்டு வைக்காத நிலையில், இந்த நாடு அசந்துப் போய்விடும் என நம்பி, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற சுயலாப அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் பின்னணி கொண்ட சுயநல வாதிகள் மேற்கொண்டிருந்த மிகைவாத செயற்பாடுகள் காரணமாக எமது மக்கள், இந்த நாட்டுக்கு இனி எதிர்காலமே கிடையாது என்ற வகையில் கொண்டிருந்த நம்பிக்கையை உடைத்தெறிந்து, விழ, விழ எங்களாலும் புதுத் தெம்புடன் எழுந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த அரசு எமது மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் எமது ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கும், கௌரவ பிரதமர் திணேஸ் குணவர்தன அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Sampanthan's Parliament Speech – Ilankai Tamil Sangam

அரசயலுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாங்கள். அதே நேரம், வெறும் அரசியலுக்காக நாம் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுமில்லை.

ஓர் இக்கட்டான நிலைமையில், இந்த நாட்டினைக் காப்பாற்றி, எமது மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த நோக்கத்திற்கு முகங்கொடுக்க முடிந்த செயற்பாட்டு தைரியத்துடன், நாங்கள் இந்த அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

எமது மக்கள் தங்களது வாக்குகளை எமக்கு வழங்கி, தங்களது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வழங்கிய ஆணையானது எங்களை நிர்ப்பந்தித்து இருக்கின்றது. எனவே, எங்களால் எமது மக்களுக்குக் கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பங்களை கை நழுவ விட முடியாது. 

அதன் காரணமாகவே, அரசாங்கங்களுடன் இணைகின்ற போது, நாங்கள் விதிக்கின்ற நிபந்தனைகள் பொது நிபந்தனையாகவே இருக்கின்றது. எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே அது.

அதற்காக, அரசாங்கங்கள் எமது மக்களின் பிரச்சினைகளை எல்லாம் உடனடியாகத் தீர்த்துவிடும் என்ற எதிர்பார்ப்பினை மட்டும் முன்வைத்து, நாங்கள் செயற்படுகின்றவர்களும் அல்ல.

எமது நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள், செயற்பாடுகள் காரணமாக எமது மக்களின் பிரச்சினைகளை போதியளவில் தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு நாங்கள் தடையற்ற பாதைகளைத் திறந்து விடுகின்றோம்.

அரசாங்கம் அதில் பயணிப்பதில் தாமதங்களையோ, சிரமங்களையோ எதிர்கொள்வதில்லை என்பது எமது மக்களுக்கு சாதகமான நிலைப்பாடாகும். 

இதற்கு மாற்றமான நிலைப்பாட்டினை கொள்கையாக வகுத்துக் கொண்டவர்கள் எமது சக தமிழ் அரசியல்வாதிகளாக செயற்பட்டு வருகின்றனர்.

அதாவது, எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவற்றை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டும் அவ்வப்போது கையில் எடுத்து, பின்னர் தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகளை, தீராப் பிரச்சினைகளாக்கி, அப்பிரச்சினைகளை எமது மக்களின் வீடுகளிலேயே குடியமர்த்தி வைத்து வருவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

இதன் மூலம் எமது மக்களது வாக்குகளை சூறையாடி வருவதே முதலீடு இல்லாத பண்டமாற்று அரசியல் என அவர்கள் கொள்கை வகுத்துக் கொண்டவர்கள். இதனை இப்போது எமது மக்கள் 'வீட்டை காட்டி மோசம் செய்கின்ற செயல்' என பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.

இத்தகைய கொள்கையின் வரைவிலக்கணமாகவே இவர்கள் இன்னமும் புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். எமது மக்களின் மனங்களில் வருகின்ற மாற்றங்களின் முன்பாக, புலிவாலை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடித்திருக்கவும் முடியாமல் திணறுகின்ற இவர்கள், புலிவாலுக்கு பதிலாக, பூனை வாலைப் பிடித்திருக்கலாமோ என நினைக்கவும் கூடும்.

எமது நாட்டின் தற்போதைய நிலைமையில் எமது மக்களின் வாழ்வாதார மற்றும் அன்றாடத் தேவைகளைத் தீர்க்கின்ற  வகையில் நாங்கள் உற்பத்தித் துறைகள் சார்ந்த முன்னெடுப்புகளை பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்ற நிலையில், இவர்கள் எமது மக்களது பிரச்சினைகளை தீர்க்காமல், தீர்க்க விடாமல், பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

அத்துடன் நிற்காமல், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற எமது வழிமுறைகளை இடைமறித்து, அதனையும் சீர்குலைத்து, எமது மக்களை நடுத் தெருவில் விடுகின்ற இவர்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் செயற்பட்டு வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சியிருந்தால், இன்று எமது மக்கள் அனுபவிக்கின்ற எவ்விதமான வாய்ப்புகளும் எமது மக்களுக்கு இதுவரையில் கிடைத்திருக்காது என்பதையும் எமது மக்கள் அறிவார்கள். 

COPE presents Interim Report in Parliament

நாங்கள் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென்றே அரசியலில் காலடி எடுத்து வைத்தவர்கள். அதனையே நான் எனக்குக் கிடைக்கின்ற அமைச்சுக்களின் மூலமும் செய்து வருகிறேன். 

எமது நாட்டில் வளங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், சரியான முகாமைத்துவ கட்டமைப்புகள், செயற்பாடுகள் இல்லாமை காரணமாக எமது வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பல வளங்களில் உரிய பயன்பாடுகள் பெறப்படாமல் இருக்கின்றன.

கடந்த 05ஆம் திகதி நான் முல்லைத்தீவில் அமைந்துள்ள கொக்கிளாய் கடற்றொழில் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே, கனிய மணல் அகழ்வு காரணமாக கடற் கரையானது குறிப்பிடத்தக்க தூரம் வரையில் கடல் உள்வாங்கப்பட்டு, அந்த கிராமம் கூடிய விரைவில் கடலுக்குள் சென்று விடுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கத்தில் மேற்படி மணல் அகழ்வு காரணமாக அக் கடற்றொழிலார்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த கரைவலைத் தொழிலை மேற்கொள்ள முடியாமல், அக் கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகளில் ஈடுபட நேரிட்டுள்ளதையும் அறியக் கிடைத்தது. இவ்விடயம் தொடர்பில் விரைவில் நான் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இங்கு மாத்திரமல்ல. பல்வேறு செயற்பாடுகள் காரணமாக கடலரிப்பு என்பது தென் மாகாணம் முதற்கொண்டு, மேல், வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் பல இடங்களில் ஏற்பட்டு வருவதை என்னால் நேரிடையாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. இதன் மறுபக்கத்தில் சட்டவிரோத மற்றும் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகளும் மேற்கொள்ளப்படுவதாகவே அறியக் கிடைத்து வருகின்றது. இத்தகைய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

அந்த வகையில், எமது நாட்டின் கடற்றொழிலை முகாமைத்துவம் செய்வதற்கென நாம் பல்வேறு திட்டங்களை வகுத்து, செயற்படுத்தி வருகின்றோம். அதில் ஒரு கட்டமாகவே இங்கு இந்த மூன்று ஒழுங்குவிதிகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதில் முதலாவது, 2227/04ஆம் இலக்கத்தையும், 25.04.2022ஆம் திகதியையும் கொண்ட அதி விசேட வர்த்தமானியின் 2022ஆம் ஆண்டு நீல நிற, நீந்தத்தக்க நண்டுகள் முகாமைத்துவ ஒழுங்குவிதியாகும்.

எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதில் பெரும் பங்கினை வகிக்கின்ற கடல் வளங்களில் நீல நிற, நீந்தத்தக்க நண்டு வகையினமும் ஒன்றாகும். இந்த கடல் வளத்தை அழியவிடாமல், அதன் உற்பத்தியில் உச்ச பயனை அடைய வேண்டும் என்பதற்காக நாம் இந்த முகாமைத்துவ ஏற்பாட்டினை அத்துறை சார்ந்த கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி மேற்கொண்டுள்ளோம். 

இதனடிப்படையில், மேற்படி நண்டு உற்பத்தித் துறையில் ஈடுபடுவதற்கென அனுமதிப் பத்திரம் வழங்கல் முறை, ஏனைய நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அதனைப் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய வலையின் விபரம், வலையின் கண்ணளவு விபரம், தொழிலில் ஈடுபட வேண்டிய படகுகளின் விபரம், பிடிக்கப்படக்கூடிய நண்டுகளின் எடை, பிடிக்கக்கூடிய கால எல்லை, மேற்படி கடல் வளம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்ற காலகட்டங்கள் என அனைத்து ஒழுங்குவிதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது ஒழுங்குவிதியானது, 2021ஆம் ஆண்டின் கடற்றொழில் (கட்டணம் அறவிடல்) ஒழுங்குவிதியாகும். இது, 2255ஃ22ஆம் இலக்கத்தையம், 24.11.2021ஆம் திகதியையும் கொண்டதாகும்.

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கத்தைக் கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் கட்டளைச் சட்டத்தின் மூலமாக அவிதிக்கப்பட்டிருந்த ஒழுங்குவிதிகளின் கீழ் பணிக்கப்பட்டிருந்த கடற்றொழில் அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் அறவிடல் விடயமானது, கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2011ஆம் ஆண்டு 1698ஃ13ஆம் இலக்கத்தையும், 23.03.2011ஆம் திகதிழயையும் கொண்ட விசேட வர்த்தமானியின் மூலம் அகற்றப்பட்டது. இதன் பின்னர், அதாவது, 2011ஆம் ஆண்டின் பின்னர், ஆழ்கடல் தொடர்பில் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக மாத்திரமே மேற்படி அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்பட்டு வந்தன.

தற்போதைய நிலையில், எமது நாட்டைப் பொறுத்த வரையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற படகுகளின் எண்ணிக்கையானது படிப்படியாக அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்புக்கு சமாந்திரமாக கடல் வளங்களில் அதிகரிப்புகள் காணப்படுவதாக இல்லை. 

எனவே, கடல் வளங்களின் அதிகரிப்பு தொடர்பில் எமது அமைச்சு கூடிய அவதானமெடுத்து, அதற்கான விஞ்ஞானப் பூர்வ ஆய்வுகளை மேற்கொண்டு, நடவடிக்கைளை எடுத்து வருகின்றது.

குறிப்பாக, கடல் வளங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்ற கடற்றொழில் முறைமைகளை தடை செய்தல், அதனை சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்தல், அனுமதிப் பத்திரங்களை வரையறை செய்தல், செயற்கை பவளப் பாறைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தடை செய்யப்பட்ட முறைமைகளின் ஊடாக கடற்றொழிலில் ஈடுபடுவதை அந்தந்தப் பகுதிகளில் இயங்குகின்ற கடற்றொழிலாளர் சங்கங்கங்கள், கடற்படையினர், கடலோரப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் எமது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, அவற்றைத் தடுப்பதற்கான பொறிமுறைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

அதேநேரம், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நிலைப்பாட்டில், விஞ்ஞானப் பூர்வமான புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக மாற்று வழிமுறைகளை நாம் இனங்கண்டு, அவற்றை அறிமுகப்படுத்தி வரும் அதேவேளை, மீனின மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளோம். 

இதனிடையே கடற்றொழிலுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குதல், கடற்றொழில் முகாமைத்துவம், கண்காணிப்பு போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கென பாரியளவில் செலவிடவும் நேரிட்டுள்ளது. 

எனவே, சிறு கடற்றொழிலாளர்களுக்கு அல்லாமலும், ஏனைய பாரிய பரிமாண கடற்றொழில் சார்ந்தும், அது சார்ந்த ஏனைய பாரியளவு தொழில்துறைகள் சார்ந்தும், அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையில், மேற்படி கட்டணங்களை குறிப்பிட்டளவு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். 

குறிப்பாக, கடற்றொழில் அனுமதிப் பத்திரத்திரங்களுக்கான கட்டணங்கள், கடலுணவு ஏற்றுமதிக்கான அனுமதிப் பத்திரங்களின் கட்டணங்கள், ஏற்றுமதிக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான கட்டணங்கள், அவற்றுக்கான நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணங்கள், படகுகள் கட்டும் தளங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணங்கள், பாரிய படகுகளுக்கான புதிய எண்களைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணங்கள் என்பன இதில் அடக்கப்பட்டுள்ளன. 

இத்தகைய கட்டண அறவீடுகளின் மூலம் ஈட்டப்படுகின்ற நிதியினைக் கொண்டு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மூலமாக எமது கடற்றொழிலாளர்களின் நன்மை கருதிய செயற்பாடுகளுக்கும், அனர்த்த நிலைகளின் போதான நிவாரண மற்றும் இழப்பீடுகளுக்குமான கொடுப்பனவுகளுக்குமான ஒரு பொறிமுறையை நாம் உருவாக்கவுள்ளோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Sri Lanka Parliament to debate 20th Amendment to the Constitution on Oct  21, 22 - Sri Lanka News - BusinessNews.lk

மூன்றாவது ஒழுங்குவிதியானது, 2266ஃ6ஆம் இலக்கத்தையும், 07.02.2022ஆம் திகதியையும் கொண்ட திருத்தப்பட்ட 1984ஆம் ஆண்டின் கரைவலை ஒழுங்குவிதிகள் ஆகும்.

1984ஆம் ஆண்டின் கரைவலை ஒழுங்குவிதிகளின் மூலம், அம்பாந்தோட்டை மாவட்டத்தில், தங்கல்லை மாவட்ட கடற்றொழில் திட்ட அதிகாரிப் பிரிவின், களமெட்டிய கடற்றொழில் பரிசோதகர் பிரிவில் அமைந்துள்ள களமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தின் கிவுல களமெட்டிய கரைவலை பாடுவை அகற்றுவதற்கான ஒழுங்குவிதியாகும். இந்தப் பகுதியில் கடற்றொழில் அபிவிருத்தி கருதி, 2013ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 09.06.2022ஆம் திகதி இக் கடற்றொழில் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டது. இதன் காரணமாக கரைவலை தொழில்வாய்ப்பினை இழந்த 28 கரைவலை உரிமையாளர்களுக்கு, அத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கும் பகிரும் வகையில் தலா 50 இலட்சம் ரூபா வீதம் இழப்பீட்டினை நாம் வழங்கியிருக்கின்றோம்.   மேற்படி கடற்றொழில் துறைமுகத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணமே இந்த ஒழுங்குவிதி கொண்டுவரப் பட்டுள்ளது.

அதேநேரம், கடற்றொழில் துறையிலும் பாரிய பாதிப்பினை உண்டு பண்ணிய எரிபொருள் பிரச்சினையானது, தற்போது குறிப்பிட்டளவு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பரவலான எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாம் தொடர்ந்தும் அவதானங்களை செலுத்தி வருகின்றோம். அதே வேளை, எரிபொருள் விலை ஒரு பிரச்சினையாக இருக்கின்றது என்பதை மறுக்க இயலாது. எனினும், தற்போது கடந்த காலங்களைவிட அதிகளவில் படகுகள் கடற்றொழிலில் ஈடுபடுகின்றன. அத்துடன் மீன்கள் அதிகளவில் அறுவடையாகின்ற காலமும் ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக  மீனினங்களின் விலைகளும் வீழ்ச்சியடைந்து, நுகர்வோருக்கு அதிக சுமையற்ற நிலை உருவாகியிருக்கின்றது. அதேநேரம், கடற்றொழில் உற்பத்தியாளர்கள் தொடர்பிலும் நாம் அவதானங்களை செலுத்த வேண்டியுள்ளது. எனவே எரிபொருள் விலையேற்றத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் மாற்று வழிமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

அதேநேரம், எமது கடல் வள மற்றும் எமது கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் சொத்துகளுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற இந்திய இழுவை வலைப் படகுகளின் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இந்திய பாரிய இழுவை வலை கொண்ட படகுகளுக்கு எமது கடற்றொழிலாளர்களின் படகுகளால் முகங்கொடுக்க இயலாது. இதன் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையும் காணப்படுகி;னறது. எனது, சட்ட ரீதியில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் அரசுடைமையாக்கப்படுகின்ற இ;நதிய இழுவை வலைப் படகுகளின் தொழில் முறைமைகளை மாற்றி, அவற்றை தேர்ந்தெடுக்கப்படுகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களால் இந்திய இழுவை வலைப் படகுகளை எதிர்கொண்டு, தொழிலில் ஈடுபட இயலுமென நம்புகின்றேன்.

மேலும், கரைவலைத் தொழிலில் ஆளணிப் பற்றாக்குறைகள் காணப்படுவதால் அதனை இழுப்பதற்கு டிரக்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது. இதன் காரணமாக கடல் வளமும், கடற்கரைகளும் பாதிக்கின்றன. எனவே, இம் முறைமை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இத்தொழிலில் ஈடுபடுகின்ற மக்களது வாழ்வாதாரங்கள் குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். எனவே, வளங்களுக்கு பாதிப்புகளற்ற வகையில் கரையில் வெகு தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகின்ற வின்ச் மூலமாக இதனை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் நாம் சிந்தித்து வருவதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேற்படி ஒழுங்குவிதிகள் சார்ந்த மற்றும் ஏனைய கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் இங்கு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். அவ்வாறு முன்வைக்கப்பட்டால், அவற்றுக்கான பதில்களை வரவு – செலவுத் திட்ட விவாதங்களின் போது, தெளிவாக முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பு கொண்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து, கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பிலான அனைவரதும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் செவிமடுத்தவனாக, ஆரோக்கியமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் செயற்படுத்த முனைபவனாக,

எமது இந்த செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டு பங்களிப்பாற்றி வருகின்ற கௌரவ கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த த சில்வா அவர்களுக்கும், எமது அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க உட்பட மேலதிக செயலாளர்கள் அடங்களாக அமைச்சின் அதிகாரிகளுக்கும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து, விடைபெற்றுக் கொள்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17