(ஆர்.ராம்.,எம்.எம்.மின்ஹாஜ்)

வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுமாறு ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார்.

25,000 ரூபா தண்டப் பணத்திற்கு காரணமாகப் போக்குவரத்து  அமைச்சரை நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். உண்மையிலேயே 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்க காரணம் நீங்களா? என்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து விமான சேவை கப்பல் துறைமுக அமைச்சுகள்  தலைப்பிலாலான குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 

தற்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவும் கெமுனு விஜேரத்னவும் நடித்த நாடகம் வெற்றி அளிக்கவில்லை. எங்களிடமும் வீதி ஒழுங்கு விதிமுறை மீறுவோருக்கு எதிராக 25,000 தண்டப்பணம் விதிக்க போவதாக தீர்மானித்துள்ளார். இதனை இலகுவில் செய்ய முடியுமா? முடியாது. மக்களின் எதிர்ப்பை அதிகரிக்க அரசு முயற்சிக்கின்றது.

நான் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன் முடியுமானால் 25,000 ரூபா தண்டப்பணத்தை விதித்து நடைமுறைபடுத்திக் காண்பியுங்கள். 

அத்துடன் நிதி அமைச்சர் 25,000 தண்டப் பணத்திற்கு போக்குவரத்து அமைச்சரே காரணம் என குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சரே அது உண்மையா? 

அத்துடன் தற்போது புகையிரத பாதை செப்பனிடுவதற்கும், புதிய புகையிரத வீதி அமைப்பதற்கும் சீனா, இந்தியாவிடமிருந்தே உதவி கோரப்படுகிறது. ஓர் மாற்று வழி இல்லையா ? இந்திய மயத்திற்குச் செல்லாமல் எமது நாட்டு பொறியியலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றார்.