(ப.பன்னீர்செல்வம்)

விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? எனக் கேள்வி எழுப்பும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப்பதை எதிர்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.  

இது தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பியான வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர்.  இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர்நீத்த தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு ?  இதில் தவறேதும் இல்லை. ஜே.வி.பி. யும்   ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.   

பிரபாகரன் இறந்த தினம் அனுஷ்டிக்கப்படலாம்.  அதேவேளை யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை அனுஷ்டிப்பது தார்மீக கடமை. அதற்கு தடைவிதிக்கலாகாது. ஆனால் இதன் போர்வையில் இலங்கைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை நினைவு கூருவதும், தனித் தமிழீழத்தை நினைவு கூருவதும் ஏற்றுக் கொள்ளப்பட  முடியாது. 

இந்த இரண்டு விடயங்களும்  நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன   என்றார்.