(கும்பகோணத்தான்)
இன்றைய திகதியில் எமது இணைய தலைமுறையினர் வணிக வளாகங்களுக்கு நாளாந்தம் செல்வது என்பது வாடிக்கையாகிவிட்டது.
அவர்களுக்கு பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, அரிய கலை வடிவங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அதன் நவீன வடிவத்தை வணிக வளாகங்களில் இடம்பெற வைத்துவிட்டால், அவர்களின் பார்வை அக்கலைகளின் மீது பதிந்துவிடும்.
பலரும் அக்கலை வேலைப்பாடுகளோடு இணைந்து செல்ஃபி எடுத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும், நாளடைவில் அது தொடர்பாக சிந்திக்க தொடங்குகிறார்கள்.
அந்த வகையில் வட இந்தியாவில் கனிம வளத்தின் சிறந்த மாநிலமாக திகழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள ஹஸாரிபாக் எனும் மாவட்டத்தில் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் கலாசாரங்களில் தவறாமல் இடம்பெறும் கோவார் சுவரோவியங்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
கோவார் சுவரோவியங்கள் - khovar painting
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியினூடே வசிக்கும் பழங்குடியின மக்களின் திருமணம் சார்ந்த விசேட வைபவங்களின்போது இடம்பெறும் சுவரோவிய கலைகளே 'கோவார்' ஓவியங்கள்.
கோவார் கலை என்பது மணமகன் மற்றும் மணமகளின் திருமண அறையை அலங்கரிக்கும் சுவரோவியங்கள்.
காடு மற்றும் பள்ளத்தாக்கு சூழ்ந்திருக்கும் பகுதியில் வசிக்கும் அந்த மக்கள், அங்குள்ள விலங்குகள், தாவரங்கள், இயற்கை சூழல் ஆகியவற்றின் ஆசியை பெறும் வகையில், இந்த வகை ஓவியங்களை தங்களது வீட்டுச் சுவர்களில் வரைகிறார்கள்.
கோவார் என்கிற சொல்லில் ‘கோ’ என்பது ஒரு குகை என்றும், ‘வார்’ என்பது திருமணமாகும் மணப்பெண்ணின் கணவர் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது திருமணத்துக்குப் பிறகு மணப்பெண் கருவுறுதலை குறிக்கும் வகையில் இந்த சுவரோவியம் உருவாக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் வசந்த காலத்தில் அதாவது ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இத்தகைய சுவரோவியங்கள் இங்கு வாழும் பெண்களால் வரையப்படுகிறது.
இக்கலை தொடர்பாக கோவார் ஓவியங்களை வரையும் கலைஞரொருவர் பேசுகையில்,
''திருமணமான மணப்பெண்ணும், மணமகனின் தாயாரும் அதாவது மாமியாரும் மருமகளும் இணைந்து மேற்கொள்ளும் கலை வடிவம் இது. அவர்களது தலைமுறை வம்ச விருத்திக்காக, இயற்கை அன்னையின் ஆசியை பெறுவதற்காக வரையப்படுகிறது.
இங்கு குர்மீ, முண்டா, சந்தால், பிரஜாபதி, ஓரான் என 10க்கும் மேற்பட்ட சமூகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்குரிய கிராம எல்லை பகுதிக்குள் இந்த கோவார் சுவரோவியங்களை வரைவார்கள்.
இந்த ஓவியங்களை தூரிகை அல்லது உடைந்த சீப்பை பயன்படுத்தி வரைவார்கள். இங்குள்ள சுரங்கங்களில் கணிசமாக கிடைக்கும் பிரத்தியேக வெள்ளை மண் மற்றும் கரித்துண்டு ஆகியவற்றை பிரத்தியேக பசை மற்றும் தண்ணீரில் கலந்து, சுவரில் முதலில் பூசுகிறோம். இதன் ஈரம் காய்வதற்குள் தூரிகை அல்லது உடைந்த சீப்பு ஆகியவற்றால் மிருகங்கள், வீட்டு விலங்குகள், இயற்கை காட்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை கலைஞர்களுக்கு ஏற்றபடி வரைகிறார்கள்” என்றார்.
தாய்மார்கள் பல தலைமுறைகளாக தங்களது பெண் வாரிசுகளுக்கு சுவரோவியங்களை உருவாக்குவதற்கான திறன்களையும் நோக்கங்களையும் கற்பித்து வளர்த்தெடுத்து வருகிறார்கள்.
வயதான பெண்மணியொருவர் கூறுகிறார், "இந்த ஓவியத்தின் நுட்பமான நோக்கம் பெண்கள் சிக்கல் இல்லாமல், இயல்பாக கருவுறுதலையும் பிரசவத்தையும் இன விருத்தியையும் பெறவேண்டும் என்பதே...'' என்று.
ஆனால், மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்து, கிராமப்புற மக்களுக்கு சுகாதார வசதி கிடைத்து வருவதால், இந்த பழங்குடி இனத்தில் உள்ள தற்போதைய இளம் தலைமுறையை சேர்ந்த சில பெண்மணிகள் இத்தகைய சுவரோவியங்களை வரைவதில் ஆர்வம் காட்டவில்லை என தெரியவருகிறது.
மேலும், இக்கலையை பற்றி சர்வதேச சமூகவியல் ஆய்வாளர்கள் விளக்கமளிக்கையில்,
''கோவார் சுவரோவியத்தில் பயன்படுத்தப்படும் சீப்பு தொழில்நுட்பம், கிரேக்க நாட்டில் 'ஸ்க்ராஃபிட்டோ' (sgraffito) எனும் தொழில்நுட்பத்துக்கு இணையானது. ஈரான் மற்றும் சிந்து சமவெளியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் காணப்பட்ட மட்பாண்ட தொழில்நுட்பத்தை ஒத்திருக்கிறது'' என்றனர்.
மேலும், இத்தகைய சுவரோவியத்தில் சீப்புடன் உடைந்த தூரிகைகள், துணிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
தற்போது இப்பகுதிகளில் உருவாக்கப்படும் வீடுகள் சீமெந்து, கொன்க்ரீட்களால் அமைக்கப்படுவதால் இத்தகைய சுவரோவியத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.
இளம்பெண்கள் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் தருவதாலும், இதுபோன்ற கடினமான பணிகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்ட மறுத்து வருகின்றனர்.
அங்கே கலையோவியங்களில் ஈடுபாடு கொண்ட மக்கள் வாழ்வாதார கட்டாயத்துக்காக நகரங்களுக்கு புலம்பெயர்வது, கொப்பரேட் நிறுவனங்கள் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளை உருவாக்குவதால் அங்குள்ள விவசாய குடியிருப்புகள் அழிக்கப்படுவது போன்றவற்றால் இத்தகைய சமூகங்களின் பாரம்பரிய நடைமுறை மெல்ல களையிழந்து வருகிறது.
இந்த கோவார் சுவரோவியத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தக்கவைத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்த அமைப்புகள் இத்தகைய பாரம்பரிய ஓவியங்களுக்கு பயிற்சியளித்து, இந்த கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு ஆதரவளித்து வருகிறது.
இக்கலையின் பாரம்பரியத்தையும், தங்களின் கலாசாரத்தையும் உணர்ந்து, நூற்றுக்கணக்கான பெண்மணிகள் இந்த ஓவியப் பயிற்சிகளை உற்சாகமாக தொடர்ந்து வருகிறார்கள். இதனால் இந்தக் கலை மென்மேலும் வழமையான கலாசார அடர்த்தியுடன் தொடரும் என உறுதியாக நம்பலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM