ஜவ்பர்கான் 

 வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பட்ட போராட்டத்தை நடாத்தியது.

 வரவு செலவுத் திட்டத்தில் இலவச சுகாதாரத் துறையினை கேள்விக்குட்படுத்தும் பல்வேறு பாதகமான விடயங்கள் காணப்படுவதாகவும் அவற்றினை நீக்குமாறு கோரி இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இன்று பகல் 12 மணி தொடக்கம் 1மணி வரையில் இந்த போராட்டம் ஒன்பது மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான கவனஈர்ப்பு  போராட்டம் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் டாக்டர் ஏ.எல்.என். லியனகே தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

 வைத்தியர்களின் விடுதி பகுதியில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்றதுடன் வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவத்தில் கை வைக்காதே, அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் கை வைக்காதே,தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, புகையிலை நிறுவனங்களிடம் கையேந்துவதை நிறுத்து, மக்களுக்கு தண்டப்பணம், அரசியல்வாதிகளுக்கு சொத்துசுகம், எட்காவை வரவேற்கும் வரவு செலவுத் திட்டம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.