(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (09) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் சாதனை மிகு ஆரம்ப ஜோடியினர் ஸ்திரமான தொடக்கத்தை இட்டுக்கொடுத்து தமது அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.
மிகவும் அவசியமான வேளையில் திறமையை வெளிப்படுத்திய பாபர் அஸாமும் மொஹமத் ரிஸ்வானும் எட்டக்கூடிய ஆனால் சற்று சிரமத்தைத் தோற்றுவித்த வெற்றி இலக்கை பாகிஸ்தான் அடைவதற்கு உதவினர்.
எவ்வாறாயினும் நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடியபோது ஷஹீன் ஷா அவ்றிடி தனது முதலாவது ஓவரில் ஃபின் அலனையும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கேன் வில்லியம்சனையும் ஆட்டமிழக்கச் செய்தததன் மூலம் தமது அணியின் வெற்றிக்கு வித்தி டப்பட்டதாக அணித் தலைவர் பாபர் அஸாம் தெரிவித்தார்.
ஷஹீன் ஷா அவ்றிடி 4 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றில் பிரகாசிக்கத் தவறிய பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் மிக முக்கிய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அரைச் சதங்களைக் குவித்து நியூஸிலாந்தை வெளியேறச் செய்தனர்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவர்களது இணைப்பாட்டங்கள் சாதனை மிக்கவை. நியூஸிலாந்துடனான வெற்றியின்போதும் அவர்கள் இருவரும் சாதனை நிலைநாட்டத் தவறவில்லை.
இன்றைய போட்டியில் அவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 105 ஓட்டங்கள், இருபது 20 உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அவர்களது மூன்றாவது சத இணைப்பாட்டமாகும். இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் வேறு எந்த ஜோடியும் இந்த சாதனையை நிலைநாட்டவில்லை.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் பகிர்ந்த 9ஆவது சத இணைப்பாட்டமும் ஒரு சாதனையாகும். அவர்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் கே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய ஆரம்ப ஜோடியினர் 5 தடவைகள் சத இணைப்பாட்டத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் இருவரும் இணைந்து 2509 ஓட்டங்களை பாகிஸ்தானுக்காக பகிர்ந்துகொடுத்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இருக்கும் ஜோடி 621 ஓட்டங்கள் குறைவாக பகிர்ந்துள்ளனர்.
இந்த வருட உலகக் கிண்ண அரை இறுதி போட்டிக்கு முன்னர் ஒரே ஒரு போட்டியிலேயே அதுவும் பங்களாதேஷுக்கு எதிராகவே பாபர் அஸாம் இரட்டை இலக்க எண்ணிக்கையான 25 ஓட்டங்களைப் பெற்றார்.
இன்றைய போட்டியில் ட்ரென்ட் போல்டிடமிருந்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாபர் அஸாம் கொடுத்த சற்று கடினமான பிடியை விக்கெட் காப்பாளர் டெவன் கொன்வே தவறவிட்டது அவருக்கு அதிர்ஷ்டமாக மாறியது. அதன் பின்னர் திறமையாகவும் தன்னம்பிக்கையுடனும் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் உலகக் கிண்ணத்தில் தனது முதலாவது அரைச் சதத்தைக் குவித்தார்.
பாபர் அஸாமைப் போன்றே இந்த உலகக் கிண்ணத்தில் மொஹமத் ரிஸ்வானும் முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.
அவர்கள் இருவரும் மீண்டும் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளமையும் ஷஹீன் ஷா அப்றிடியின் அற்புதமான பந்துவீச்சும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள அணிக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஒருவேளை, இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றால் பாகிஸ்தானின் ஆக்ரோஷத்தை மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்படித்தான் இந்தியாவும்.
2007இல் போன்ற மீள் இறுதி ஆட்டம் இடம்பெறுமா என்பதை அறிந்துகொள்ள இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நாளைய போட்டி முடிவரை காத்திருப்போம்.
நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதும் பஞ்சாப் உட்பட பாகிஸ்தான் முழுவதும் இரசிகர்கள் ஆரவாரம் செய்து தமது அணியின் வெற்றியைக் கொண்டாடினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM