இரட்டைக்குடியுரிமையும் பாராளுமன்ற உறுப்பினர்களும்

10 Nov, 2022 | 11:02 AM
image

அரசியலமைப்புக்கான 21 வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துவிட்டன.ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகக் கூறப்படும் இந்த திருத்தத்தின் மிகவும் முக்கியமான ஏற்பாடு அரசியலமைப்பு பேரவையையும் அதைத் தொடர்ந்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது பற்றியதாகும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆராய்ந்து இது குறித்த நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக 21 வது திருத்தத்தின் முக்கியமான ஏற்பாடு இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற எந்தவொரு அரசியல் பதவிக்கும் வருவதை தடுப்பதாகும்.இந்த ஏற்பாட்டைப் பொறுத்தவரை அது எப்போதுமே இரட்டைக்குடியுரிமையைக் கொண்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களை இலக்குவைத்ததாகவே இருந்து வந்திருக்கிறது.

ராஜபக்ச சகோதரர்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் முன்னாள் நிதியமைச்சர் பசிலுமே இலங்கை குடியுரிமையையும் அமெரிக்க குடியுரிமையையும் கொண்டவர்களாக இருந்தனர்.மைத்திரி  ரணில் அரசாங்கத்தினால் 2015 ஏப்ரிலில் கொண்டுவரப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தம் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் அரசியல் பதவிகளுக்கு தெரிவாவதை தடைசெய்ததால் 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை துறக்கவேண்டியேற்பட்டது.

பிறகு 2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்த பிறகு அக்டோபரில் கொண்டுவரப்பட்ட 20 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் மக்களால் தெரிவாகும் பதவிகளுக்கு வருவதை அனுமதித்தது.இந்த ஏற்பாடு ராஜபக்ச சகோதரர்களில் இளையவரான பசில் பாராளுமன்றம் வருவதற்கு அல்லது எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவே செய்யப்பட்டது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

இப்போது 21 வது திருத்தத்தில் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற தடை மீண்டும்  கொண்டுவரப்பட்டிருக்கிறது.இது குறிப்பாக சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான பசிலையே இலக்குவைத்ததாக அமைந்தது.20 வது திருத்தத்தையடுத்து கடந்த வருடம் ஆளும் கட்சியின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த பசில் இவ்வருடம் ஜூனில் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.இப்போது நீதிமன்ற அனுமதியுடன் தனது இரண்டாவது நாடான அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் அவர் அடுத்த வருட முற்பகுதியில் நாடு திரும்ப வேண்டியவராக இருக்கிறார்.

19 திருத்தம் கொண்டுவரப்பட்டதையடுத்து தேர்தலில் போட்டியிட முடியாமல் இருந்த பசில் 2016 டிசம்பரில்  பொதுஜன பெரமுனவை ஆரம்பித்து தேர்தல்களில் பெருவெற்றிபெற வைத்தார்.பாராளுமன்றம் வராமலேயே தன்னால்  அரசியலில் செல்வாக்குடன் விளங்க முடியும் என்பதை அப்போது அவர் காட்டினார்.இப்போது 21  வது திருத்தத்தையடுத்தும் தேர்தலில் தான் போட்டியிட முடியாவிட்டாலும் தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அவரால் களத்தில் நின்று செயற்படமுடியும்.

  ஆனால், பொதுஜன பெரமுனவை தொடங்கி அதை நாட்டின் பிரதான கட்சியாக பசில்  கட்டியெழுப்பிய காலப்பகுதியில் நிலவிய  அரசியல் சூழ்நிலைக்கும் தற்போது நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த ராஜபக்சாக்களின் தவறான ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து அவர்களை ஆட்சிக்கட்டில் இருந்து இறங்கவைத்த பின்னரான அரசியல் சூழ்நிலைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கிறது. ராஜபக்சாக்கள் நினைப்பது போன்று 'மீண்டும் ஒன்றாக எழுவது ' ஒன்றும் சுலபமான காரியம் அல்ல.என்றாலும் பசில் நாடு திரும்பி அரசிரலில் ஈடுபடலாம்.அது வேறு விடயம்.

  

   இங்கு கவனிக்கவேண்டிய முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது.அதாவது ஒரு அரசியல் குடும்பத்தின் உறுப்பினர்களின் இரட்டைக்குடியுரிமை தொடர்பிலான பிரச்சினையை கையாள்வதற்கு 7 வருட காலத்திற்குள் அடுத்தடுத்து மூன்று அரசியலமைப்பு திருத்தங்களில்  ஏற்பாடுகள் புகுத்தப்படவேண்டியிருந்தது.உலகில் இவ்வாறான விசித்திரம் இடம்பெற்றிருப்பது இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும்.

  இது இவ்வாறிருக்க, இப்போது இந்த இரட்டைக்குடியுரிமை என்பது வெறுமனே ராஜபக்சாக்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இல்லை.வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

  புதிய திருத்தம் நடைமுறைக்கு  வந்த பிறகு இரட்டைக் குடியுரிமை கொண்ட எவரும் பாராளுமன்றத்துக்கு வரமுடியாது ; எந்தவொரு  தேர்தலிலும் போட்டியிட்டு மக்களால் தெரிவாகும் பதவிகளுக்கு வரமுடியாது.இரட்டைக்குடியுரிமையுடன் தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய எவரும் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு பதவி விலகுவதுதான் கௌரவமான செயல்.ஆனால், மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் அந்த ' கௌரவ ' உறுப்பினர்களில் எவரும்  இதுவரையில் அவ்வாறு செய்யமுன்வரவில்லை.

  பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக்குடியுரிமையைக் கொண்டி ருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க அண்மையில்  கூறியிருந்தார்.பெயர்களை அவர் வெளியிடவில்லை.அவ்வாறு பத்து பேர்  இருக்கிறார்கள் என்றால்  சட்டவிரோதமாகவே  அவர்கள் பாராளுமன்ற கதிரைகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.நாட்டின் அதியுயர் சட்டவாக்க சமபக்குள்ளேயே சட்டவிரோதமான பிரதிநிதிகள்.

   தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சகலரும் 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் தெரிவானவர்கள்.அப்போது இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதை தடுக்கும் ஏற்பாட்டைக் கொண்ட 19 வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறையில் இருந்தது. இரட்டைக்குடியுரிமையுடையவர்கள் என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  அந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு  நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தபோது உண்மையைக் கூறவில்லை என்பது வெளிப்படையானது.தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மாத்திரம் அல்ல, தங்கள் கட்சிகளின் தலைவர்களுக்கும் அவர்கள் உண்மையை மறைத்திருக்கிறார்கள் அல்லது உண்மை தெரிந்திருந்தும் அவர்களை வேட்பாளர்களாக தலைவர்கள் நியமித்தார்கள் என்று தான் அர்த்தம்.

   இந்த விவகாரத்தில் உள்ள பெரிய பிரச்சினை இரட்டைக்குடியுரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பதில் பாராளுமன்றம் உட்பட சம்பந்தப்பட்டிருக்கும் அரச நிறுவனங்கள் முகங்கொடுக்கும சிக்கலாகும்.

 பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது பிரிட்டிஷ் குடியுரிமையை மறைத்து  குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தில் இலங்கை கடவுச்சீட்டை பெற்றதாக வழக்கு ஒன்று விசாரணையில் இருக்கிறது.            

    இரட்டைக் குடியுரிமை

கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருக்கும் அல்லது நியமிக்கப்பட்டிருக்கும் சாத்தியம் குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது அதைக் கண்டுபிடிப்பது பாராளுமன்றத்துக்குரிய பொறுப்பு அல்ல,தேர்தல்கள் ஆணைக்குழுவே அதைச்செய்யவேண்டும் என்று கூறினார்..ஆனால்,ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்யும்போது அவரின் குடியுரிமை குறித்து விசாரணைசெய்வது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு அல்ல என்று அதன் தலைவரான நிமால் புஞ்சிஹேவா கூறினார்.போதுமான சான்றுகள் இருந்தால் எவரும் இந்த சர்ச்சையில்  நீதிமன்றத்தை நாடமுடியும் என்பது அவரது நிலைப்பாடு.

    2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கோதாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்ததாக  முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டபோது முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் இதே நிலைப்பாட்டையே எடுத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

    சில பாராளுமன்ற உறுப்பினர்கள்  இரட்டைக்குடியுரிமையை இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை தொடர்பில் ஆராய்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஒரு அறிக்கை  அவ்வாறு  சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் இரட்டைக்குடியுரிமையுடன் 21 திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட உண்மையைக் கூறாமல் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதாக அடையாளம் காணப்படக்கூடியவர்கள்  நிச்சயம் பதவிகளை துறக்கவேண்டும்.அவ்வாறு அடையாளம் காணப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் தான் தங்களின் அந்தஸ்து தீர்மானிக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவார்களோ யாரறிவார்.

   இறுதியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் தங்கள் இரட்டைக்குடியுரிமையை மறைத்து போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்கள் கடந்த இரு வருடங்களுக்கும் கூடுதலான காலமாக சபையில் அங்கம் வகித்துவருகிறார்கள்.இவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இதுவரையில் அவர்கள் பெற்ற சம்பளங்கள்,விசேட கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை அவர்களிடமிருந்து மீட்க முடியுமா என்பதும் தெரியவில்லை.(இரட்டைக்குடியுரிமையை மறைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக ஏற்கெனவே ஐந்து வருடங்கள் பதவி வகித்து ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டிருக்கும் எத்தனை பேர் இருக்கிறார்களோ?)

  ஆனால், தாங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது 19வது திருத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், பிறகு 2020 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தம் இரட்டைக்குடியுரிமையடையவர்கள் பாராளுமன்றம் வர அனுமதித்ததால் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக எதையும்  தாங்கள் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வாதாடவும் கூடும்.ஆனால்,நியமனப்பத்திரங்கள் தாக்கலினபோது அவர்கள்  இரட்டைக்குடியுரிமையைக் கொண்டிருக்கும்  உண்மையை மறைத்து சட்டத்துக்கு புறம்பாகவே  நடந்துகொண்டார்கள் என்பதில் கேள்விக்கு இடமில்லை.

   பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த சர்ச்சையில் ஒரு முக்கிய பொறுப்பு உண்டு.ஆனால் அந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டிய தார்மீக கடமை தங்களுக்கு இருக்கிறது என்று அவர்களில் எவராவது இதுவரை உணர்ந்ததாக தெரியவில்லை.தங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது இரட்டைக்குடியுரிமையுடையவராக இருக்கிறார் என்பதை கண்டறிந்து அவர்களை பதவிவிலகுமாறு தலைவர்கள் கேட்கவேண்டும்.

  திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இதுவரையில்  எந்த  பாராளுமன்ற உறுப்பினரும் தானாக முன்வந்து தனக்கு இரட்டைக்குடியுரிமை இருக்கிறது என்று மனச்சாட்சிப்படி பிரகடனம் செய்து  பதவிதுறக்க முன்வரவில்லை.முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று  அவர்கள் 'ஔித்து' விளையாடுகிறார்கள்.இது தான் 'மக்கள் பிரதிநிதிகளின் ' நேர்மையின் இலட்சணம்.உண்மை கண்டறியப்பட்டு பதவிவிலக வேண்டிவரும்போது தங்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியத்தை அல்லது அவமானத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. 

  எந்தவொரு கட்சித்தலைவரும் கூட தங்கள் மத்தியில் இருக்கக்கூடிய இரட்டைக்குடியுரிமை பாராளுமன்ற உறுப்பினர்களை இதுவரையில் அடையாளம் கண்டார்களோ என்றும் தெரியவில்லை.அல்லது அவர்களும் சேர்ந்து உண்மையை மறைக்கிறார்களா?கழிசடை அரசியல்..!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலும் ராஜபக்சாக்களும்

2022-12-09 08:12:16
news-image

அரசியல் தீர்வுக்கு இந்திய முன்மாதிரி

2022-12-08 21:47:36
news-image

நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கடன்...

2022-12-09 08:49:19
news-image

தேர்தலில் கட்சி சார்பற்று சுயாதீனமாக செயற்படுவேன்...

2022-12-05 10:51:49
news-image

போஷாக்கு குறைபாட்டால் சிறுவர்கள் கடுமையாக பாதிப்பு

2022-12-05 11:14:06
news-image

இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்: எயிட்ஸ்...

2022-12-01 10:26:30
news-image

தேர்தல்கள் மூலமாகவே ஆட்சிமுறையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தமுடியும்

2022-11-29 16:01:26
news-image

மகிந்தவும் சர்வதேச சதியும்

2022-11-28 08:17:47
news-image

மோடி - ரணில் சந்திப்புக்கு நாள்...

2022-11-26 16:25:50
news-image

சீனா தயக்கம் : இதுதான் காரணம்

2022-11-24 10:16:35
news-image

மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

2022-11-28 08:52:40
news-image

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும்...

2022-11-21 21:47:01