பொருளாதார படுகொலையாளியான பஷில் அமெரிக்காவில் சுகபோகம் : வரியால் மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவது எவ்விதத்தில் நியாயம் - அநுரகுமார 

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 03:45 PM
image

(இராஜதுரை ஹஷன்,எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதார படுகொலையாளியான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது நாட்டு மக்களை வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானதாகும். 

பொருளாதார நெருக்கடியால் தோற்றம் பெறும் மக்கள் போராட்டம் பாரிய விளைவை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரித்துள்ளார். 

ஆகவே மக்கள் போராட்டத்தை தடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (08) நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.பணவீக்கம் 70 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதால் பொருள் மற்றும் சேவை கட்டணம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.

வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் நடுத்தர மற்றும் தோட்ட புறங்களில் வாழும் மக்களின் சுகாதார போசாக்கு தன்மை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

நடுத்தர மக்களின் போசனை மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பாடசாலை மாணவர்களின் கல்வித்துறையில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோட்ட புற மக்களின் குறைந்த வருமானம் தற்போதைய வாழ்க்கை செலவிற்கு எந்தவிதத்திலும் ஈடு செய்யும் வகையில் அமையவில்லை.மறுபுறம் இறக்குமதி தடையினால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சமூகத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அரச நிறுவனங்கள் வெளியிடும் ஆய்வு அறிக்கைக்கும், சமூகத்தின் உண்மை நிலைவரத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நாட்டில் 54 இலட்சத்திற்கும் அதிகமானோர் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளார்கள் என யுனிசெப் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அரசாங்கம் இந்த தரவுகளுக்கு முரணாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பு ஒட்டுமொத்த மக்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை மிக மோசமாக காணப்படுகிறது.

நுவரெலியா உள்ளிட்ட பெருந்தோட்ட பிரதேசங்களின் பிள்ளைகள் மந்த போசனை பாதிக்கப்பட்டுள்ளது.எமது உறவுகள் போசனை மட்டத்தில் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அவர் உலகத்தை வலம் வருகிறார்.மருந்து தட்டுப்பாடு மருத்துவ துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலவச மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். தனியார் மருந்தகங்களில் கூட மருந்து தட்டுப்பாடு உள்ள நிலையில் ஜனாதிபதி எகிப்து சென்றுள்ளார்.

நாட்டின் உற்பத்தி துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.நடுத்தர மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. 

அனைத்து வியாபார தொழிற்துறைகளும் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.நாட்டு மக்கள் வாழ்கையில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் எந்த விதத்தில் தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்ததை நிறைவேற்றி விட்டோம் என அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்கிறது.

21ஆவது திருத்தம் சமூக பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வினை பெற்றுக்கொடுக்கும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.நாட்டு மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்,அவருக்கு ஏற்றாட் போல் அரசாங்கமும் செயற்படுகிறது.

அரசாங்கம் அண்மையில் பல வரிகளை அதிகரித்துள்ளது.வரி அதிகரிப்பு நாட்டு மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து வரியை சடுதியாக அதிகரிப்பது எந்தளவிற்கு பொருத்தமானது.பொருளாதார படுகொலையாளியான  பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது வரி அதிகரிப்பால் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவது எந்தளவிற்கு நியாயமானது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தான் நான் நன்றாக செய்தேன் என ஊடகங்கள் ஊடாக மீண்டும் வெளிவந்துள்ளார். இயற்கை காரணிகளினால் பொருளாதாரம் பாதிப்பிற்குள்ளாகவில்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளருக்கு தண்டனை வழங்குவதாக குறிப்பிட்டவர்கள் தற்போது அவரையே தமது தலைவராக நியமித்துள்ளமை எந்த வகையிலான அரசியலாகும். அரச நிதியை மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக உள்ள போது தொழிற்துறையினர் மீது கடுமையான வரி அதிகரிப்பது நியாயமானதா,

பொருளாதார பாதிப்பால் படித்த தொழிற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்த இரண்டு விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

வங்கி கட்டமைப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.இந்த பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகத்தை வலம் வருகிறார்.

கல்வி பொதுத்தராதர சாதாரன தர பரீட்சை தகைமையில்லாத ஒரு இலட்சம் பேருக்கு அரச தொழில்வாய்ப்புக்களை வழங்குதாக பொதுஜன பெரமுன தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியது.34 ஆயிரம் பேருக்கு தொழில் நியமனம் வழங்கபர்பட்டுள்ளது.

அவர்களுக்கு 22 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.தற்போதைய பொருளாதார பாதிப்பிற்கு மத்தியில் 22ஆயிரம் எந்தளவிற்கு சாத்தியமாக அமையும்.பொதுஜன பெரமுன தமது தேர்தல் வெற்றிக்காக நடுத்தர மக்களின் எதிர்காலத்தை முழுமையாக இல்லாதொழித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் தனக்கு எதிரான அடக்கு முறைகளை எவ்வாறு முடக்குவது என்பது குறித்து மாத்திரம் அவதானம் செலுத்துகிறது. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் உட்பட மத குரு ஒருவர் மூன்று மாத காலத்திற்கு மேல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை இவ்வாறு தடுத்து வைப்பதற்கான காரணத்தை அரசாங்கத்தின் உறுப்பினர்களால் குறிப்பிட முடியுமா?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் போது அந்த நபரின் எதிர்காலம் முழுமையாக பாதிக்கப்படும் என்பதை பற்றி சற்றும் சிந்திக்காத உறவுகளின் உணர்வு தொடர்பில் உணர்வற்றவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார்.பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமைக்கான காரணத்தை ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு மனசாட்சிக்கு அமைய குறிப்பிட முடியுமா?

பொருளாதார பாதிப்பினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டம் இரத்தம் வெளிப்படும் வகையில் அமையும் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.ஜனநாயகத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தடுக்க அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசாங்கத்திற்கு எதிராக அமையும்,ஆகவே ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட வேண்டும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40