( எம்.எப்.எம்.பஸீர்)
பொலன்னறுவை – வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 75 தொடக்கம் 100 கைதிகள் வரை தப்பிச்சென்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மோதலில் காயமடைந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் இராணுவத்தை சேர்ந்தவர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவீ ஹேரத் தெரிவித்தார்.
மோதலின் போது, கைதிகள் சிலர் ஆயுதக் களஞ்சியசாலைக்குள் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை ( 6) இரவு 10.00 மனியளவில் இந்த அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்படுகின்ற 540 கைதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாக அறிய முடிகின்றது.
மோதல் நிலைமையை அடுத்து, உடனடியாக இராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவினர் அழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஆயுத களஞ்சியம் உள்ளிட்ட பகுதிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்துள்ளனர்.
இதனைவிட உடனடியாக ஸ்தலத்துக்கு அரலகங்வில, மன்னம்பிட்டி, வெலிகந்த, ஹிங்குரங்கொட, புலஸ்திகம பொலிஸாரும் அழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி,
“ ஞாயிற்றுக்கிழமை இரவு (6) கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது.
அது பின்னர் இரு குழுக்களுக்கு இடையிலான தகராறாக மாறியுள்ளது. அப்போது அந்த இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொண்டுள்ளனர்.
இதனைவிட அந்த சுற்றுச்சூழலில் உள்ள பொருட்களை பயன்படுத்தியும் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதில் நான்கு அல்லது ஐந்து பேர் காயமடைந்தனர். எனினும் இரவோடிரவாக பொலிஸாரும் இராணுவத்தினரும் வந்தனர். நிலைமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இருப்பினும் இன்று காலை ஒரு பகுதியில் கலவரம் இடம்பெற்று வருகின்றது. கைதிகளில் ஒரு பகுதியினர் தப்பிச் சென்றுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.' என தெரிவித்தார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிஆரச்சி குறிப்பிட்டார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இந்திக டி சில்வா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த ரத்னபால ஆகியோரின் கீழ் சிறப்பு குழுவொன்று அது தொடர்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தப்பியோடிய கைதிகளில் பலர் மீள சரணடைந்துள்ள நிலையில் ஏனையோரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதமும் பொலன்னறுவை – வெலிக்கந்த , கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கைதி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை மையப்படுத்தி குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையிலான கைதிகள், புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் தடுப்புகளை மீறி, அதன் பிரதான வாயில் மற்றும் வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பியோடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மோதலுடன் தொடர்புபடாத 218 கைதிகளை, சேனபுர முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேனபுர புனர்வாழ்வு முகாமுக்கு இவ்வாறு அவர்களை மாற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் கூறினார்.
அத்துடன் மேலும் 211 கைதிகள், நீதிமன்ற நடவடிக்கைகளின் நிமித்தம் பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 33 கைதிகள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், தப்பியோடியோரைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM