மணிரத்னம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் - ஜெயம் ரவி உற்சாக பேச்சு

Published By: Nanthini

07 Nov, 2022 | 02:06 PM
image

“கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வித்தியாசமான படைப்புகளை அளித்து எம்மையெல்லாம் சந்தோஷப்படுத்தி வரும் இயக்குநர் மணிரத்னம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். இவரை நாம் கொண்டாட வேண்டும்” என பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்த நடிகர் ஜெயம் ரவி தெரிவித்திருக்கிறார். 

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், அதே பெயரில் இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக தயாராகி, அதில் முதல் பாகம் செப்டெம்பர் மாத இறுதியில் வெளியானது. 

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிகை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 

இதில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன், திருமதி. பிரேமா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சீயான் விக்ரம், இரா. பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, லைகா நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், 

''நல்ல படைப்பை சர்வதேச அளவுக்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த ஊடகங்களுக்கு நன்றி. தமிழ் ஊடகங்கள், இந்திய ஊடகங்கள் மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் 'பொன்னியின் செல்வன்' படைப்பை கொண்டாடுகிறார்கள். 

இவை அனைத்துக்கும் மூல காரணம் மணி சார் தான். அவர் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலைச்சேவை செய்து வருகிறார். 

இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குநர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார். இவரை நாம் கொண்டாட வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்” என்றார்.

அதனை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், 

''அமரர் கல்கிக்கு முதலில் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. 

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது, அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக்கொள்வேன். 

இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிகையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதிய அமரர் கல்கியை போற்றும் வகையில், அவரது பெயரில் செயல்படும் அறக்கட்டளைக்கு லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right