பிரஜின் நடிக்கும் 'D3' படத்தின் இசை வெளியீடு

Published By: Nanthini

07 Nov, 2022 | 02:05 PM
image

முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதற்காக கடுமையாக உழைத்துவரும் பிரஜின் நடிப்பில் உருவாகியுள்ள 'D3' படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள 'D3' படத்தில் நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் வித்யா பிரதீப், சார்லி, ராகுல் மாதவ், அபிஷேக் குமார், வர்கீஸ் மேத்யூ, காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பி.கே. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ், த்ரில்லர் ஜேனரில் தயாராகியுள்ள இந்த படத்தை பி மாஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ். சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளார்.

D3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியாகியுள்ளது. 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், 

"ஒரே நாளில் நடைபெறும் கதை. D3 படம் வெளியான பிறகு D2, D1 என இதன் அத்தியாயங்களை படமாக உருவாக்கவிருக்கிறோம். 

ஒரு விபத்து, ஒரு கொலை, காணவில்லை என பதிவாகியுள்ள ஒரு வழக்கு‌ என இந்த மூன்றையும் பின்னணியாக வைத்து, இந்த படம் உருவாகி இருக்கிறது. 

நாயகன் பிரஜின் முதன் முறையாக காக்கி சீருடை அணிந்து, பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். 

இந்த படத்தின் திரைக்கதைக்காக அவர் ஆடையில்லாமல் சாலைகளில் ஓடி நடித்திருக்கிறார். இதுபோன்ற அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அவர் வழங்கியிருக்கிறார்'' என்றார்.

'D3' படத்தின் நாயகனான பிரஜின் சின்னத்திரை நடிகராகவும், வண்ணத்திரை நடிகராகவும் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 

இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரே ஒரு வணிக ரீதியான வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றியைத் தரும் என திரையுலக வணிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்