எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. 

அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இப்பிரதேசங்கள் காணப்பட்ட  போது தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் காணப்பட்ட கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டு துயிலுமில்லங்கள்  இருந்த இடம்தெரியாது மாற்றப்பட்டிருந்தன.

அதன் பின்னர் துயிலுமில்லங்களில் படையினர் முகாம்கள் அமைத்து சில வருடங்கள் சில வருடங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

தற்போது படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற மாவீரர்களின் உறவினர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்தனர்.

நேற்று கார்த்திகை 27 இல் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக  மாவீரர் நாள் நிகழ்வை அனுஸ்டித்தனர்.

மாலை 6.5 மணிக்கு மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரேற்றப்பட்டது. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொதுச் சுடரை பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன்   ஏற்றி வைக்க தொடர்ந்து  மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகள் எனும்  மாவீரர் வணக்கப் பாடல்   ஒலிபரப்பப்பட அப் பாடலில் வருகின்ற வரிகளான  எங்கே எங்கே உங்களின் இருவிழி திறவுங்கள் எனும் வரிகள் ஒலிக்கும் போது  கலந்து கொண்ட அனைவரதும் கண்களில் கண்ணீருடன்  உணர்வு பூர்வமாக காட்சியளித்ததனைக் காணக் கூடியதாக இருந்தது  

கல்லறைகள், நினைவுக் கற்கள் இல்லாத  போதும் எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இந்த  இடத்தில்  நின்று அவர்களை நினைவு கூற கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை. எனது பிள்ளையை அவனது புதைக்குழியில் நின்று நினைவு கூறுவதற்கு இனி சந்தர்ப்பமே இல்லாது போய்விடுமோ என்று ஏங்கிய எனக்கு இப்பொழுது ஆத்ம திருப்தி ஏற்பட்டுள்ளது. ஏழு ஏட்டு வருடங்களுக்கு பின் இந்த இடத்தில் நின்று  சுடரேற்றி அஞ்சலி செலுத்வேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் இன்று அது நடந்திருக்கிறது. எனவே எனக்கு இப்போதுள்ள ஒரு ஆசை இந்த மாவீரர் துயிலுமில்லம்  கடந்த காலத்தில் இருந்தது போன்று மீண்டும் மாறவேண்டும். அதுவும் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார் ஒரு மாவீரரின் தாய்.

இவ்வாறு பலர் தங்களினது உணர்வுகளை கண்ணீராகவும் வார்த்தைகளாலும் வெளிப்படுத்தியவாறு மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின் முதல்முதலாக துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான  பொது மக்கள் மற்றும் அரசியல் தரப்புகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு முழங்காவில் மற்றும் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறை  மாவீரர் துயிலும் இல்லங்களிலும்  மாவீரர் தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. 

புகைப்படங்கள் இணைப்பு