நடைமுறை மூலதனமின்மையால் நலிந்துபோகும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள்

Published By: Digital Desk 5

12 Nov, 2022 | 01:29 PM
image

ஆர்.ராம்

நாட்டில் 9 மில்லியன் மக்கள் அதாவது, சனத்தொகையில் 40 வீதமானவர்கள் நாடு எதிர்கொண்டுள்ள முடிவற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக உத்தியோகபூர்வ வறுமைநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின்படி உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7சதவீதமாக இருந்த நிலையில் செப்டெம்பரில் அது 94.9சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவில்லாப் பொருட்களின் பணவீக்கம், 50.2 சதவீதத்தில் இருந்து 57.6சதவீதமாக உயர்ந்துள்ளது. 

அதேநேரம், இந்த நிலைமை, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மேலும் தீவிரமடையாலாம் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி.நந்தலால் விஜயசிங்க எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் வடமாகாணத்தில், ஐந்து மாவட்டங்களிலும் ஒரு இலட்சத்து 70ஆயிரத்து 952பேர் சமுர்த்திக் கொடுப்பனவுப் பயனாளிகளாகவும், 45ஆயிரத்து 149பேர் சமுர்த்திக் கொடுப்பனவுக்காக காத்திருப்பவர்களாகவும் உள்ளனர். வறுமையினைக் குறைத்தல் மற்றும் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை கட்டியெழுப்புவதனை அடிப்படை நோக்காகக் கொண்டே 1995ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம்இலங்கை சமுர்த்தி அதிகாரசபை உருவாக்கப்பட்டு மாதந்த கொடுப்பனவுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

தற்போதைய நிலையில் வருமானம் குன்றிய நபரொருவருக்கு 1500ரூபாவும், இரண்டு அங்கத்தவர்கள் உள்ள குடும்பமொன்றுக்கு 2650ரூபாவும், நான்கு மற்றும் அதற்கு அதிகமான அங்கத்தவர்கள் உள்ள குடும்பமொன்றுக்கு 3800ரூபாவும் மாதாந்தம் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. 

இவ்வாறு சமுர்த்திக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்பவர்கள் அன்றாட உணவுத்தேவைக்கான அரசி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உலருணவுப்பொருட்களை தனியார் அங்காடிகளிலேயே பெற்றுக்கொள்ளும் நிலைமைகளே தற்போது காணப்படுகின்றன.

சமுர்த்திக் கொடுப்பனவைப் பெறுபவர்களின் அத்தியாவசிப் பொருட்கள் கொள்வனவைச் செய்வதற்கு ஆரம்பத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் துணைபுரிந்தன. ஆனால் தற்போது அந்நிலைமைகள் காணப்படவில்லை. ச.தோ.ச., கோப்-சிற்றி போன்ற கட்டமைப்புக்கள் காணப்பட்டாலும், அவை கிராமங்களில் வினைத்திறனாக செயற்படவில்லை. 

இதனால், பொருள் விநியோகச் சீரின்மை, செயற்கையாக தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுதல், சமநிலையற்ற விலை அதிகரிப்பு, பொருட்களைப் பெறுவதற்காக தொலைதூரங்களுக்குச் செல்ல வேண்டிய அவலநிலைமை என்று பல்வேறு நெருக்கடிகளுக்கு குறைவருமானம் பெறுபவர்கள் உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் தமது அன்றாட உணவுத்தேவையை நிறைவு செய்வதில் தடுமாற்றம் கண்டுள்ளனர்.

போர்ச் சூழலில், வடக்கில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மூடிய பொருளாதார நிலைமைகளின் போது, பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் முழுமையான செல்வாக்கினைச் செலுத்தியிருந்தன. 

குறிப்பாக, அக்காலத்தில்  அரசாங்கமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான பொருட்களையும் விநியோகிப்பதற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களையே பிரதான முகவர் நிலையங்களாக பயன்படுத்தியிருந்தன

இதனால், வடக்கில் எந்தவொரு நபருக்கும், தமது உணவுக்கான நுகர்வுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெரும் பிரச்சினைகள் இருந்திருக்கவில்லை. அத்துடன், நியாயமான நிர்ணய விலைகளைக் கொண்டிருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்து சமூகக்குழுக்களுக்கும் சமமான பொருட்பகிர்வினை முத்திரை வழங்கல் செயற்திட்டத்தின் ஊடாகச் செய்திருந்தன. தற்போது அவ்வாறான நிலைமைகள் காணப்படவில்லை.

இந்நிலையில், “வடக்கு மாகாணத்தில் நிலைபேறான சமூக பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கின்ற சக்தி வாய்ந்த நிறுவனமாக கூட்டுறவுத்துறை மிளிர்தல்” என்ற தொலை நோக்கினைக் கொண்டிருக்கிறது வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்.

ஆனால், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கத்தின் கீழ் 1972ஆம் ஆண்டு 5ஆம் இலக்க கூட்டுறவுச் சட்டத்திற்கு அமைவாக பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வரும் 47 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் 28 குறைந்த செயற்றிறன் கொண்டவையாக இருப்பதாக அத்திணைக்களம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான கோரிக்கைக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது. 

தற்போதைய சூழலில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் குறைந்த செயற்றிறன் கொண்டிருப்பதற்கும், அவற்றின் கிளைகள் மூடப்படுவதற்கும் பல காரணங்கள் கூறப்பட்டாலும், ‘நடைமுறை மூலதனம் இன்மை’ தான் பிரதான காரணமாக உள்ளதாக துறைசார்ந்த பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

“பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் தமது தொழிற்படு எல்லைப்பரப்புக்குள்ளே கிளைகளை அமைத்து செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் 47கிளைகளை கொண்டிருந்தது. தற்போது வெறுமனே ஆறு கிளைகளை மட்டுமே நடத்தி வருகின்றது. இதுபோன்று தான் ஏனைய பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் நிலைமைகள் மிகவும் பலவீனமாகக் காணப்படுகின்றன” என்று குறிப்பிடுகின்றார் 50ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுறவுத்துறையில் பொதுமுகாமையாளர், சமாசங்களின் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவருமான, வடமாகாண, பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட சிக்கனக் கடன் உதவி வழங்கும் சமாசங்களின் தற்போதைய தலைவருமான, சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை.

அத்துடன், “வடக்கை நோக்கி பல்தேசிய நிறுவனங்களின் வருகையாலும், தனியார் துறையின் அபரிமிதமான ஆதிக்கத்தாலும் போட்டிச்சந்தைக்கும், விற்பனை மூலோபாயங்களுக்கும் முகங்கொடுக்க முடியாத நிலையும் காணப்படுகிறது” என்று குறிப்பிட்டார். அத்துடன் “பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு வளங்கள் காணப்பட்டாமை,  கிளைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நிரந்தரமான கட்டமைப்பு இன்மை, வாடகை அதிகரிப்பு, நுகர்வுத்திறன் வீழ்ச்சி உள்ளிட்டவை செயற்றிறன் குறைவடைவதில் தாக்கம் செலுத்தினாலும், ‘நடைமுறை மூலதனம்’ இன்மையால் கிளைகளை முன்கொண்டு செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

“நெல் மூடையொன்றின் விலை பத்தாயிரம் வரையில் அதிகரித்துள்ளமையால், சுமார் ஆறுமாதங்களுக்கு தேவையான அரிசியை விநியோகிப்பதற்குரிய நெல்லை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான மொத்தநிதிப்பலம் சங்கங்களிடம் காணப்படவில்லை. இதனால், நுகர்வோருக்கும், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கச் செய்கின்றது” என்றும் உதாரணத்துடன் தெளிவுபடுத்துகின்றார்.

ஆனால், “வடபகுதியின் பெரும்பாலன பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் போர் காரணமாக அவற்றின் சொத்துக்கள் முற்றாக அழிந்து வினைத்திறனற்ற செயற்பாடுகளற்ற நிலைக்குச் சென்றிருக்கின்றன. அதன் அர்த்தம் கூட்டுறவுத்துறையிடத்தில் நிதிமூலம் இல்லை என்பதல்ல. பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஒவ்வொன்றும் தமது பெருந்தொகையான நிதியை நிலையான வைப்பிலிட்டு பாதுகாத்து வைத்துள்ளன.

அந்த நிதியை பயன்படுத்தி கூட்டுறவுச் சங்கங்களை மீளமைப்பதற்கு கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் அனுமதி அளிப்பதில்லை. காரணம், குறித்த நிதி பயன்பாட்டுக்காக சங்கங்கள் வைப்பிலிருந்து எடுக்கும் தருணத்தில் அவை முற்றாக கரைந்துவிடும் என்று திணைக்களம் கருதுகின்றது. இதனால் சங்கங்களின் மூலதமான வங்களில் தேங்கியுள்ளது” என்கிறார் இலங்கை நிர்வாகசேவையில் 25 வருடங்களுக்கு மேலாக பல துறைகளில், பணியாற்றியவரும், சமுகச் செயற்பாட்டாளருமான மரியாம்பிள்ளை செல்வின் இறேனியஸ்.

அதேநேரம் “கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், வெறுமனே கணக்காய்வுகளைச் செய்து அறிக்கைகளை தயாரிக்கின்ற ‘காவல்நாய்’ போன்று செயற்படுகின்றதே தவிர அதற்கு அப்பால் தொலைநோக்கான சிந்தனைகளைக் கட்டமைத்து அதன் வழியில் பயணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதுமட்டுமன்றி பண்புரீதியான மனிதவளங்களை உருவாக்குகின்ற இயலுமையும் காணப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களமானது பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வினைதிறனான செயற்பாடுகளுக்காக,

தொழிற்படு மூலதனம் குறைந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிற்கு பொருத்தமான திட்ட வரைபுக்கு இணங்க கூட்டுறவு நிதிக் கடன்களை வழங்கப்பட்டுள்ளது அல்லது வங்கி கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவில் கூட்டுறவு என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏனைய சங்கங்களின ஊடாக விற்பனை செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்பு கொண்டு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக நியாய விலையில் அரிசி விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இயங்கா நிலையில் இருந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் அரிசி ஆலைகளை இயக்குவதற்கான ஆலோசனைகளுடன் வழிகாட்டி தற்போது இலாபகரமாக இயங்குவதுடன் காலபோக நெல் கொள்வனவுக்கான முற்பணங்களையும் நியாய வட்டியில் வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண கிளைநிலையங்களாகவுள்ள விற்பனைத் தளங்களை மினிகோப் சிற்றிகளாக தரமுயர்த்துவதற்கு கொழும்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்த வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தொழிற்பாடு குறைந்த சங்கங்களிற்கு மேலதிகமாக உறுப்பினர்களை பதிவாளருக்கு உரித்தான அதிகாரங்களின் கீழ் நியமனம் செய்து அச்சங்கங்களினை விசேடமாக கண்காணித்தல்

ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதாக பட்டியலிட்டுள்ளது. மிக முக்கியமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 110.83மில்லியன்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களின் பணியாளர்களின் வேதனம் மிகக்குறைவு. அதனால் வினைத்திறனான ஊழியர்கள் காணப்படவில்லை. வேதன மீளாய்வைச் செய்வதற்கான நிதிப்பலமும், சட்டப்பலமும் சங்கங்களிடத்தில் இல்லை. இதனால் சகல மட்டங்களிலும் தரம் பேணப்படமுடியாத நிலை காணப்படுவதாக  மரியாம்பிள்ளை செல்வின் இறேனியஸ், கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி, “பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களை அரசாங்கம் தனது நிவாரணம் அளிக்கின்ற கருவிகளாக விம்பப்படுத்தப்படுத்தி அச்செயற்பாட்டையே தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் வழிசமைத்திருந்தது. இந்த நிலைமையே தற்போது கூட்டுறவுத்துறை பின்தங்கிய நிலையை அடைந்து புறக்கணிக்கப்பட்ட துறையாக மாறுவதற்கு அடிப்படையாகின்றது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“தென்னாசியாவிலேயே முதலாவது கூட்டுறவு வைத்தியசாலை மூளாயில் தான் ஆரம்பிக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு இந்தியாவின் ரிசர்வ் வங்கி கூட்டுறத்துறவுத்துறை தொடர்பில் படிப்பினைகளைப் பெறுவதற்கும், ஆய்வுகளைச் செய்வதற்குமாக குழுவொன்றை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தனது. அந்தளவுக்கு வடமாகாணத்தில் கூட்டுறவுத்துறையின் எழுச்சி காணப்பட்டிருந்தது” என்று குறிப்பிடுகிறார் வடக்கு,கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி.அகிலன் கதிர்காமர்.

“உலகமயமாதலின் பின்னர் இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும், தனிநபர்களாக நுகரும் போக்;கே அதிகரித்துள்ளமையால், கூட்டான நுகர்ச்சிக்கான சிந்தனை வெகுவாக குறைவடைந்துள்ளது. அதுவும் கூட்டுறவுத்துறையின் பின்னடைவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது” என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார். 

கூட்டுறவுத்துறை தன்னிறைவுப் பொருளாதரக் கோட்பாட்டை அடியொற்றியது என்ற அடிப்படையில், அதன்மூலமாக வாழ்வாதாரத்தினை பூர்த்தி செய்வதோடு போசாக்கான சமூகத்தினை பாதுகாப்பதற்கும், உருவாக்குவதற்கும் உதவுவதாக உள்ளது. 

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் அடுத்த தசாப்தற்திற்கு நீடிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்பது எனது கணிப்பாக இருக்கையில், கூட்டுறவுத்துறை மூலமாக அதனால் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும். அதற்காக கூட்டுறவுத்துறையில் மக்களின் பங்கேற்பும், ஒத்துழைப்பும் அவசியமாகின்றது” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“கூட்டுறவுத்துறைக்குள் காணப்படும் கிளைகளை உள்வாங்கி சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தும் அதேநேரம் உள்ளுர் உற்பத்தியாளர்களிடமிருந்து நியாயமான விலைகளில் உற்பத்திகளைப் பெற்று விற்பனை செய்வதற்கான விரைவுத்திட்டமொன்றை முன்னெடுப்பதன் ஊடாக, நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வல்லதாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய முடியும்” என்றும் கலாநிதி.அகிலன் கதிர்காமர் குறித்துரைத்துள்ளார்.

தற்போதைய நிலையில், உள்நாட்டு உற்பத்தி, உணவுப்பாதுகாப்பு தொடர்பில் அதீதமான கரிசனைகள் செலுத்தப்படுகின்றன. இந்தச் சமயத்தில் கூட்டுறவுத்துறையின் தேவையும் வெகுவாக உணரப்படுகின்றது. ஆகவே, கூட்டுறவுத்துறை மக்களை கவரும் பாரிய இயக்கமாக தன்னை வளர்த்துக்கொள்வதற்கான நடைமுறைமூலதனம் உள்ளிட்ட பலநோக்கு மூலோபாயங்கள் அவசியமாகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்