இன்னொரு குழப்பமா ?

By Digital Desk 5

06 Nov, 2022 | 04:44 PM
image

கபில்

“சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது”

“சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக போரைத் தொடங்கியிருக்கிறார்? அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, ஊடகச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்?

22ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்படும் ஜனநாயகமின்மை, பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது போன்ற விடயங்களில் நீண்டகாலமாக காணப்பட்டு வந்த சர்ச்சை இப்போது வெளிப்படையாக வெடித்திருக்கிறது.

22 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதா- எதிர்ப்பதா என்று பாராளுமன்றக் குழு தீர்மானிக்கும் கட்டம் வந்த போது, அதில் பங்கேற்ற 7 உறுப்பினர்களில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய நான்கு பேர், அதனை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

நடுநிலை வகிக்க சிறிதரன் முடிவு செய்தார். கலையரசன், பெரும்பான்மையானவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார். ஆனால் எம்.ஏ.சுமந்திரன் வாக்களிக்கப் போவதில்லை என்று மறுத்தார்.

இந்த நிலையில், பெரும்பான்மையினரின் கருத்துக்கு இணங்கி, தானும் ஆதரவாக வாக்களித்ததாக கூறியிருக்கிறார் சிறிதரன்.

கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் சுகவீனம் காரணமாகவும், ஒரு உறுப்பினர் வெளிநாட்டில் இருந்த காரணத்தினாலும் பாராளுமன்றத்தில் சமூகமளிக்காமல் தவிர்க்க, ஆறு பேர் ஆதரவாக வாக்களிக்க சுமந்திரன் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக் கொண்டு, வெளியேறி வாக்களிப்பின் போது, முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

இப்போது, கட்சிக்குள் இருந்து கொண்டே, முரண்பட்ட முடிவுகளை எடுத்து வாக்களிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க  கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.

அந்த வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தார். தனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் வாக்களித்தனர் என்று அவர்  கூறியிருந்தார்.

ஆனால், கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் அதனை நிராகரித்திருந்தார். அதே சுமந்திரன் இப்போது, வெளியே நிற்கிறார். 

கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள், 22 ஆவது திருத்தத்தை ஆதரிக்க அவர் மட்டும், வாக்களிப்பை புறக்கணித்திருந்தார். அத்தோடு அந்த விவகாரம் முடிந்து போகவில்லை.

இனி நாங்கள் சுமந்திரனின் முடிவுகளுக்கு கட்டுப்படப் போவதில்லை என்று பகிரங்கமாக சிறிதரன் அறிவிக்க, தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் சட்டத்தரணி தவராசா அதற்கு ஆதரவு தெரிவிக்க, இப்போது கூட்டமைப்புக்குள்ளேயும், தமிழரசுக் கட்சிக்குள்ளேயும், பூகம்பம் வெடித்திருக்கிறது.

நீண்டகாலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், சுமந்திரன் எதிர்ப்புணர்வு புகைந்து கொண்டிருந்தது. சம்பந்தனும் சுமந்திரனும் இணைந்தே முடிவுகளை எடுக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்தாலோசிப்பதில்லை, என்ற கருத்து நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளும் கூட, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறும் நிலைக்கு காரணமாகியது.

அவர்களின் வெளியேற்றத்துக்கு இது மட்டுமே காரணமாக இல்லாத போதும், இப்போது எழுந்து வரும் சுமந்திரன் எதிர்ப்பு அலையானது, எல்லா வெளியேற்றங்களுக்கும் அவரே காரணம் என்ற பழியைப் போடுவதற்கு வசதியானதாக மாறியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சுமந்திரனின் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்தது உண்மை.  சம்பந்தனின் ஆதரவுடன் அவரே முடிவுகளை எடுப்பது என்ற நிலை காணப்பட்டது.

இப்போது, அதனை பங்காளிக் கட்சிகளும் விரும்பவில்லை, சக பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பவில்லை.  இந்தச் சூழலில், சுமந்திரனுக்கு ஆதரவாக சாணக்கியன் மட்டும் இருக்கிறார். 

அதேவேளை, சம்பந்தன் தவிர, ஏனைய 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே கோட்டில் இணைந்து பயணிக்கும் நிலையில் காணப்படுகின்றனர்.

இந்தப் பிளவு நிலை வரும் நாட்களில் விரிசலடையுமா அல்லது கடந்தகாலத் தவறுகளை சீர் செய்து கொண்டு கூட்டமைப்பு  சரியான வழிக்குத் திரும்புமா என்ற கேள்வி பரவலாக காணப்படுகிறது.

சுமந்திரனுக்கு எதிராக சிறிதரன் ஏன், பகிரங்கமாக இந்தப் போரைத் தொடங்கியிருக்கிறார்? அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, ஊடகச் சந்திப்பை நடத்தியிருக்கிறார்?

அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற விடயங்கள் என்றோ, எதேச்சையான சம்பவங்கள் என்றோ ஒதுக்க முடியாது.

தற்போது, இரா.சம்பந்தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். அவரால் பெரிதாக அரசியலில் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

வரும் பெப்ரவரி மாதத்துடன் 90 வயதை தொடப் போகும் இரா.சம்பந்தன், தற்போதுள்ள 9 ஆவது பாராளுமன்ற அமர்வுகளில், 169 நாட்கள் பங்கேற்கவில்லை. வெறும் 35 நாட்கள் மட்டும் தான் பாராளுமன்றம் வந்திருந்தார்.

22 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்களிப்பு, விவாதம் போன்றவற்றில் கூட அவர் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் அவரை கைத்தாங்கலாக இரண்டு பேர் அழைத்து வர வேண்டியிருந்தது.

முதுமையும், முதுமைக்கால உபாதைகளும் அவருக்கு இன்று பிரச்சினையாக உள்ளது போலவே, அவரது இடத்தைப் பிடிக்க நடக்கின்ற போட்டியும் அவருக்கு சவாலானதாக உள்ளது.

சம்பந்தனுக்குப் பின்னர் தலைமைத்துவத்தை யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், இப்போது அது உச்சம் பெற்றிருக்கிறது.

இவ்வாறான நிலையில் தான், இதுவரை சுமந்திரனின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு வந்த அல்லது விருப்பமில்லா விட்டாலும் பம்மிக் கொண்டிருந்து, அதற்குத் தலையாட்டியவர்கள், அவருக்கு எதிராக கிளர்ந்தெழத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான காலகட்டம் இது. இதனை எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வெறும் கோச அரசியலோ கன்னை கட்டி நின்று மோதுகின்ற அரசியலோ இப்போது தேவையில்லை. கூட்டமைப்பை ஒரு முகமாக மாற்றுவது தான் இன்றுள்ள தேவை. 

ஒருமித்த கருத்துடன், ஒருமித்த நிலைப்பாட்டுடன் கொண்ட- இறுக்கமான கட்டமைப்பாக மீண்டும் கூட்டமைப்பை கட்டமைக்க வேண்டும்.

இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்புகள் அருகத் தொடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.

ஏனென்றால் சுமந்திரனுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பனிப்போர், அவரை ஓரம் கட்டும் திட்டத்துடன் தான் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பனிப்போரின் உச்சக்கட்டம், அவரை வெளியே தள்ளுவதை இலக்காகவும் கூட கொண்டிருக்கலாம்.

இந்தப் பனிப்போரில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதல்ல முக்கியம், அது கூட்டமைப்பை ஒன்றுபடுத்துமா, பலப்படுத்துமா என்பதே முக்கியமான விடயம்.

அந்த நிலையில் இருந்து பார்த்தால், கூட்டமைப்பு இன்னொரு பிளவையோ, உட்கட்சிக் குழப்பத்தையோ சந்தித்தால் அது ஆச்சரியமான விடயமாக இருக்க முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right