தென்கொரியாவில் துர்ப்பாக்கிய மரணங்கள்

By Digital Desk 5

06 Nov, 2022 | 02:17 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

“பெரும்சனநெரிசல் அசம்பாவிதத்தின் வெளித்தெரியாத உண்மைகள்”

தென்கொரிய தலைநகரின் தெற்கேயுள்ள நகரமானது, நெருக்கமான கட்டடங்கள், குறுகலான தெருக்கள் என்பவற்றைக் கொண்டது. அங்கே ஜப்பானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட கோட்டையொன்று உண்டு. பின்னர், அது அமெரிக்க இராணுவ தளமாக பயன்படுத்தப்பட்டது.

இந்நகரின் பெயர் இத்தாயெவொன். மதுபான விற்பனை நிலையங்கள், உணவகங்கள், இரவுநேர விடுதிகள் என்று கேளிக்கைக்குப் பேர்; போன இடமாகும். பல நாடுகளில் இருந்து வரித்துக்கொண்ட கலாசாரங்கள் உள்ள தேசமே தென்கொரியா என்று எவராவது கூறினால், இதற்கு சான்று இத்தாயெவொன் நகரம் தான்.

எப்போதும் கேளிக்கையும், கொண்டாட்டமுமாக இருக்கும். கூத்துக்களுக்கும் கும்மாளங்களுக்கும் குறைவில்லை. கடந்த 31ஆம் திகதி சனிக்கிழமையும் அப்படித்தான். தமக்கு அந்நியமான மரபில் இருந்து வந்த கொண்டாட்டத்திற்காக மக்கள் வெள்ளம் இத்தாயெவொன் நகரில் அலைமோதியது.

இந்தக் கொண்டாட்டம் என்ன? ஆங்கிலத்தில் ‘ஹலோவீன்’ எனப்படுவது. மேலைத்தேய கிறிஸ்தவ மரபில், மரித்தவர்களின் ஆன்மாக்களை நினைவுகூர அர்ப்பணிக்கப்பட்ட காலப்பகுதியின் தொடக்க நாள். அடிப்படையில், கிறிஸ்தவத்தில் புனிதர்களாக திருநிலைப்படுத்தப்பட்டவர்களை நினைவுகூருமொரு மதச்சடங்கு. அது கொண்டாட்டமாக மாறியது தான் பிரச்சினை. 

தேவாலயம் சென்று கூட்டுப்பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். மரித்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று ஆத்ம சாந்திக்காக இருகரம் ஏந்தி இறைவனை மன்றாடலாம். வீட்டு முற்றங்களில் அலங்கார விளக்கேற்றி ஆனந்தப்படலாம். அவ்வாறன்றி, பேய்களதும் பிசாசுகளதும் ஆடையணிந்து, அடுத்தவர்களை பயமுறுத்தியும், கேலி செய்தும் ஆனந்தப்படும் கொண்டாட்டமாக மாறியிருப்பது தான் பிரச்சினை.

தமது கலாசாரத்திற்கு அந்நியமானதொரு கொண்டாட்டத்திற்காக கடந்த 31ஆம் திகதி இத்தாயெவொன் நகரில் ஒன்றுகூடியிருந்தார்கள். ஒரு புறத்தில் பிரதான கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதி இருந்தது. மறுபுறத்தில் நகர்ப்புற புகையிரத நிலையம் காணப்பட்டது.

இரண்டையும் இணைக்கும் வகையில் ஆளுயரக் கட்டடங்களுக்கு இடையில் குறுந்தெரு. விடுதியில் இருந்து புகையிரத நிலையத்திற்கும், அங்கிருந்து விடுதிக்கும் விரைந்து செல்லும் சனக்கூட்டம். இரு திசைகளிலும் வருபவர்களால் நிறைகிறது. அந்தளவுக்கு அதிகமான ஆட்கள். 

குறுந்தெரு சரிவானது. ஒருதிசையில் இருந்து வந்தவர்கள் நிதானமிழந்து விழுகிறார்கள். எங்கும் தடுமாற்றம். இருமுனைகளில் இருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நடுப்புள்ளியை நோக்கி நகர்கிறார்கள்.

ஆளுக்கு ஆள் ஒருவரையொருவர் நெருக்கித் தள்ளுகிறார்கள். அல்லோலகல்லோம். சிலருக்கு மூச்சுத்திணறி மாரடைப்பு ஏற்படுகிறது. சிலர் கீழே விழுந்து மிதிபடுகிறார்கள். 

தென்கொரியாவின் வரலாற்றில் மற்றொரு மோசமான அசம்பாவிதம். இந்த சனநெரிசலில் சிக்கி குறைந்தபட்சம் 156 பேர் பலியானதுடன், பலர் காயம் அடைந்திருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு 306 பேரைப் பலிகொண்ட செவொல் படகு அசம்பாவிதத்திற்கு அடுத்தபடியாக மிகவும் மோசமான பேரனர்த்தம்.

இந்தப் பேரனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் தென்கொரியப் பிரஜைகள் தான். வளரிளம் பருவத்தவர்களும், இருபதைத்தாண்டிய இளவயதுப் பெண்களும் அநேகம். இதுதவிர, உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்தவரும், இலங்கையர் ஒருவரும் மரணித்தார்கள்.

இந்த மரணங்களால் உறைந்து நின்ற தென்கொரிய தேசம், இப்போது ஆத்திரத்துடன் கேள்விக் கணைகளைத் தொடுத்து வருகிறது. தேசிய துக்கதினத்தினை அறிவித்த ஜனாதிபதியால், எவரது தவறால் மரணங்கள் நிகழ்ந்தன என்ற கேள்விக்கு விடையளிக்க முடியாமல் தவிக்கிறார்.

குறுந்தெருவில் கூடியிருந்த வேளையில், ஒரு பிரபலத்தைப் பார்ப்பதற்காக சனம் முண்டியடித்தபோது, ஒருவரின் மேல் மற்றொருவர் விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்ததாக சால்ஜாப்புகள் சொல்லப்படுகின்றன.  இருந்தபோதிலும், அசம்பாவிதம் குறித்த ஆழமான பார்வைகள் ஆட்சிபீடத்தில் உள்ளவர்களதும், அதிகாரிகளதும் மெத்தனப்போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.

சியோல் என்பது இரண்டரை கோடிக்கு மேலான மக்கள் வாழும் பெருநகரம். இந்த நகரத்திற்கு கொண்டாட்டங்களும், ஊர்வலங்களும், இசை நிகழ்ச்சிகளும், ஆர்ப்பாட்டங்களும் புதியவை அல்ல. இது தவிர, இரு வருடங்களுக்கு மேலாக கொவிட் பெருந்தொற்றிற்குரிய கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடந்து, எப்போது ஒன்று கூடுவோம் என்ற எண்ணத்துடன் கொண்டாட்ட மனநிலைக்காக காத்திருந்த மக்கள்.

ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்திருக்க வேண்டும். மாறாக, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் தான் பேரவா. அவ்வளவு பெரிய தென்கொரியத் தலைநகரில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முறையாக போக்குவரத்துத் திட்டத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டாமா? இப்படித் தான் செல்ல வேண்டும் என மக்களை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டாமா?

சம்பவம் நடந்த தினத்தன்று மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வெறும் 158 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, ஜனாதிபதிக்கு எதிரான அமைதிவழி ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் படையணியின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டுவதை தென்கொரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஹலோவீன் கொண்டாடும் மக்கள் எக்கேடுகெட்டுப்போனால் என்ன? நான் எனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அதிகாரவெறி. இன்று ஹலோவீன் அசம்பாவிதம் பற்றிய ஊடக மாநாடுகளில் செய்தியாளர்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தபோதிலும், அதிகாரிகள் சாக்குப்போக்கு சொன்னார்கள்.

சியோல் மாநகர முதல்வர் ஐரோப்பிய பயணத்தில் இருந்துள்ளார். இத்தாயெவொன் நகருக்குப் பொறுப்பான அதிகாரியின் பதில் வேறு மாதிரியாக இருந்தது. ஹலோவீன் கொண்டாட்டம் சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாதது என்பதால், இந்த சம்பவத்திற்கு பொறுப்புக்கூற முடியாது என்று பதில் அளித்திருக்கிறார். 

இருந்தபோதிலும், சம்பவ தினத்தன்று அரச இயந்திரம் எந்தளவிற்கு மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை இன்னொரு விசாரணை புலப்படுத்தியுள்ளது. அவசர நிலைமைகள் குறித்து அறிவிக்க தென்கொரியாவில் 112என்ற இலக்கத்தை அழைக்க வேண்டும். அந்த இலக்கத்திற்கு வந்த அழைப்புக்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறுந்தெரு சனநெரிசலில் முதலாவது மரணம் நிகழ்வதற்கு முன்னதாகவே அங்கிருந்தவர்கள் உதவி கோரியிருக்கிறார்கள். மிகவும் மோசமான அளவிற்கு சனநெரிசல் அதிகரித்துள்ளது. ஆட்கள் காயமடையலாம். உடனே உதவிக்கு வாருங்கள் என்றெல்லாம் கேட்டிருப்பதை குரல் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

இதேமாதிரியானதொரு சம்பவம் தான் 2014இல் நிகழ்ந்தது. தென்கொரியாவின் தென்மேற்குக் கரையில் படகொன்று கவிழ்ந்ததில் 306பேர் மாண்டார்கள். இந்தப் படகில் அளவுக்கு அதிகமானவர்கள் ஏற்றப்பட்டிருந்தது பேரனர்த்தத்திற்கு பிரதான காரணம். அது தவிர, கரையில் இருந்து குறுகிய தூரத்தில் படகு கவிழத்தொடங்கிய சமயத்தில், அதில் இருந்தவர்களை மீட்பதற்கு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. 

மாறாக, படகிலேயே இருங்கள் என்றார்கள். உரிய தருணத்தில் விரைந்து செயற்பட்டிருந்தால், சகலரையும் காப்பாற்றியிருக்கலாம். மரணங்களைத் தவிர்த்திருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்தது. தவிர, படகுச்சேவையில் நிகழ்;ந்த ஊழல் மோசடிகளையும் விசாரணை அம்பலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி பார்க் கெயுன்-ஹையிற்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் பாடம் படித்திருக்கலாம். தவறுகளைத் திருத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச்செய்யவில்லை என்ற ஆத்திரம் தென்கொரியாவின் இளம் தலைமுறை மத்தியில் கொழுந்து விட்டெறிவதை அந்நாட்டு ஊடகங்கள் ஆதாரத்துடன் காட்டியிருக்கின்றன. இந்த ஆத்திரம் ஜனாதிபதிக்கு எதிராக திரும்பவும் கூடும்.

தென்கொரிய ஜனாதிபதி சுயநலமானவர். சமுதாய விலங்கென்ற ரீதியில், ஒன்றுகூடுவதற்கு மனிதர்களுக்கு உள்ள அவாவை தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள முனைந்தவர் என்ற விமர்சனம் அவர் மீது உண்டு. ஒன்றுகூடி கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் மற்ற பிரச்சினைகளை மக்கள் மறந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனோ கொரோனா கட்டுப்பாடுகளை தான்தோன்றித்தனமாக தளர்த்தினாரென பத்திரிகைகள் விமர்சிக்கின்றன. 

சுயநல நோக்கத்துடன் சிந்திக்கும் தலைவர்கள் இப்படித்தான். அவர்கள் ஜனங்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் ஒன்றுகூட வேண்டும். ஒன்றுகூடுவதால் கிடைக்கும் இன்பத்தை விடவும், ஒரு பொறுப்பற்ற ஆட்சி இயந்திரத்தின் குறைபாடுகளை அறிந்து கொண்டு, தமது பாதுப்பிற்கு தாமே பொறுப்பு என்பதைப் புரிந்து கொண்டு ஒன்றுகூடுதலே முக்கியமானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right