பட்டுப்பாதையின் முட்கள்

Published By: Digital Desk 5

06 Nov, 2022 | 02:20 PM
image

லோகன் பரமசாமி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய காலத்திலிருந்து மத்திய ஆசிய பிராந்தியம்  பெரும் அரசியல் மாற்றங்களை கண்டு வருகிறது. மத்திய ஆசிய பிராந்தியம் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்திற்கும் சர்வதேச  பொருளாதார தலைமைத்துவத்திற்கும் பெரும் முக்கியத்துவமான பிராந்தியமாகும். 

தெற்கே கடல்சார்ந்த விரிவாக்கத்தில் பல்வேறு சிக்கல்களை சீனா கண்டு வருகிறது. இந்த சிக்கல்கள் தாய்வான் தீவிலிருந்து ஆரம்பித்து வியட்நாம் ஊடாக இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியம் முழுவதுமாக பரந்து கிடக்கிறது. சீனாவை போகும் இடமெல்லாம் ‘கடன்பொறி’ எதிரியாக முத்திரை குத்துவதில் மேலை நாடுகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. 

இந்நிலையில் தரை வழியாக தனது விரிவாக்கத்திற்கு ‘மைய’ நிலப்பரப்பான ஆப்கானிஸ்தனை கையிலெடுத்தள்ளது சீனா.  அமெரிக்காவின் வலுக்கட்டாயமான அதிகாரமாற்றங்களால் சிக்கலுற்றுக் கிடந்த ஆப்கானிஸ்தான் தற்பொழுது  சீனக் கையாள்கைக்குள் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சீனநகர்வுகள் குறித்த ஆய்வுகளை செய்துள்ள ஆய்வாளர்கள் ஐந்து வகையாக சீன நகர்வுகளை வகைப்படுத்தியுள்ளனர். 

அதில் முதலாவது, தலிபான் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு  நடைமுறையோடு இசைவான, மிகக்கவனமான அணுகுமுறை,

இரண்டாவது,ஆப்கானிஸ்தானை பயங்கரவாதத்தின் பாதுகாப்பு சுவர்க்கபூமியாக  ஆகாதவகையில் நிலைமையை உருவாக்குதல்,

மூன்றாவது, ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே உள்ள அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியதொரு நிரந்தர அரசியல் நகர்வை உருவாக்குதல், மனிதாபிமான விவகாரங்களை முன்னெடுத்தல்

நான்காவது, எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவும் அதன் கூட்டுநாடுகளும் வெட்கப்பட வைக்கும் அளவில் கடந்த கால நடவடிக்கைகளில் விட்ட பொறுப்புணர்வற்ற தவறுகளை எடுத்து காட்டுதல், 

ஐந்தாவது, இவை எல்லாவற்றின் வெற்றியின் மூலம் கையாள்கை மூலோபாயத்தின் முழு வெற்றியும் எதுவென்று காண்பித்தல் ஆகியனவாகும். 

சீனா தன்னையொரு பூகோள பொருளாதார வல்லரசாக மாற்றி கொள்வதற்குரிய முதற்படிக்கல்லாக ஆப்கானிஸ்தானைக் கருதுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு உள்ளன. அதில் முதலாவது, ஆப்கானிஸ்தானின் பூகோள அமைப்பாகும். அதாவது, இந்தோ-பசுபிக் கடல் பகுதியில் இலங்கை எவ்வாறானதொரு முக்கியமான பூகோள நிலையத்தில் உள்ளதோ, அதேபோல தரைவழிப் பட்டுபாதைத் திட்டத்திற்கு ஆப்கானிஸ்தான் முக்கியதொரு பூகோள மையத்தில் இருக்கிறது.

இரண்டாவதாக கடந்தகால அமெரிக்க நிருவாகங்கள் ஆப்கானிஸ்தானிய , தலிபான் போராளிகளால் வெறுக்கப்பட்டு நிருவாக சிக்கல்கள் உருவாக்கப்பட்டு இறுதியாக பின்வாங்கி ஓடிவிட்ட நிலையில், தனது  புதிய அணுகுமுறைகளுடாக அரசியல் பொருளாதார நிரந்தர நிலையை உருவாக்கக் கூடிய வல்லமை தனக்கு இருக்கிறது என்பதை எடுத்து காட்டும் நோக்கம் கொண்டதாகும்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரையில் தலிபான்கள் மட்டுமே வன்முறை செய்தவர்கள் அல்ல. சோவியத் படையெடுப்பு காலத்தில் பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த இராணுவத் தளபதிகளும் தமக்கென ஒவ்வொரு குழுக்களை உருவாக்கி கிளர்ச்சிகள் செய்தனர். 

பஸ்தூன் இனத்தைச் சார்ந்த இளைஞர்களை அதிகம் கொண்டதாகவே தலிபான்கள் இருந்தனர். பஸ்தூன் இனத்தவர்கள் ஆப்கானிஸ்தானில் 40சதவீதமானவர்களாவர்.  இந்தக் குழுகளுடன் சீனா தொடர்புகளை வைத்திருந்தது.  இந்தத்தொடர்புகளுக்கு சீனாவின் உய்குர் இன மக்கள் காரணமாகக் கருதப்பட்டனர்.

எழுபது, எண்பதுகளில் சீனா, சோவியத் உறவுகள் முறுகலடைந்திருந்தது. இதனால் உய்குர் இனப் போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்குடன் சீனா, தலிபான் போராட்டக்காரர்களை தனது தேவைக்கேற்ப பயன்படுத்தி வந்தது. 

இந்தத் தொடர்புகள் ஊடாக தற்பொழுதும் சீனா, தலிபான்களுடன் பேச்சுகளை நடாத்தி வருகிறது. ஆனால் இம்முறை சீனா, தலிபான்களை பல்வேறு கோணங்களில் அணுகிவருகிறது. குறிப்பாக இவற்றில் ஆப்கானிஸ்தானிய செப்புப்படிமங்கள் போன்ற இயற்கை மூலப்பொருட்களும் அடங்கும் என்பதில் ஐயமில்லை.

இத்தகையதொரு தேவையை நோக்கி நகர்வதாயின் ஆப்கானிஸ்தானில் சட்ட அங்கீகாரம் பெற்ற அரசாங்கமொன்று இருப்பது அவசியம். இதனாலேயே தலிபான்களை சீர்செய்தவொரு அரசாங்கமாக மாற்றும் பணியில் பீஜிங் இறங்கியுள்ளது. அத்துடன் பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளைத் தரைவழி மூலம் இணைப்பதற்கும் ஆப்கானிஸ்தானில் பதற்றமற்ற சூழல் தேவையாகும். 

இந்த வகையில் சீனக் கையாள்கையில் மேலும் முக்கிய இடத்தினை வகிப்பது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரமாகும்.  இந்த விவகாரத்தில் சீன நகர்வுகள் மிகநுட்பமான சமநிலை தன்மையுடையதாக இருப்பது அவசியமாகிறது. ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் சமதளத்தில் வைத்துக்கையாள்வதில் சீன மனக்கண் முன்னே இரண்டு பிரதான அடிப்படை எதிர்பார்ப்புகள் உள்ளன. 

அதிலொன்று சீன உள்நாட்டு அரசியல் திடநிலையைக்காப்பது மிகமுக்கியமானதாகும். அதாவது ஆப்கானிஸ்தானை சரிவரக் கையாளாது போனால் உய்குர் மக்களின் போராட்டத்திற்கு ஆப்கானிஸ்தான் பின்புலத்தளம் அமைத்து கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.  அதேவேளை பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணாதுபோனால் சீனாவின் கணிசமான அளவுநேரடி முதலீட்டை முதன்மையாக கொண்ட சீன, பாகிஸ்தான் பொருளாதார ஒழுங்கைத்திட்டம் சிதைவுற்றுப் போய்விடும். சீன, பாகிஸ்தான் பொருளாதார ஒழுங்கைத்திட்டத்தை பீஜிங் நிர்வாகம் மிகவும் முக்கியமானதாக கருதுகின்றது. 

ஆனால் ஆப்கானிஸ்தனிய நடைமுறை அரசாங்கத்தை உடைப்பதில் மேலை நாடுகள் குறிப்பாக வொஷிங்டன் நிர்வாகம் மிகக்கவனமாக செயற்படுகின்றன. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றநிலையை உருவாக்கக்கூடிய அரசியல் இராணுவ உட்கிடைக்களை ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றன. 

உதாரணமாக தஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பும் அதன் நடவடிக்கைகளும் குறித்த ஆய்வுகளை மேலைநாட்டு சஞ்சிகைகள் செய்கின்றன. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் வட,கிழக்கு நடைமுறை எல்லைகளை மதிக்காது செயற்படுகின்றன. இதனால் தற்போது பாகிஸ்தானிய இராணுவதிற்கும் பெரும்சவாலாக இவ்வமைப்பு மாறியுள்ளது.

இஸ்லாமிய மதச்சட்டங்களையே முற்றுமுழுதாக தனது பிராந்தியத்தில் அமுல்படுத்த வேண்டும் என்பது இந்த அமைப்பின் பிரதான இலக்காகும். இதற்கு பாகிஸ்தான் அரசும் அதன் இராணுவமும் முழுமையான எதிர்ப்பைக் காண்பித்து வருகின்றன. அத்துடன் இந்த அமைப்பு, பாகிஸ்தான் படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்திருத்தும் உள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த காலத்தில் அங்கு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அவ்வேளையில் அதுவொரு பாகிஸ்தானிய மூலோபாய வெற்றியாக கணிப்பிடப்பட்டது. பாகிஸ்தானிய, இஸ்லாமிய தலைவர்கள் பலர் வாழ்த்து செய்திகளை அனுப்பியும் இருந்தனர். 

தனது பதவி பறிக்கப்பட்டபோது இம்ரான்கான் நேரடியாகவே அமெரிக்காவை குற்றம்சாட்டினார். அவுதிஸ்திரேலிய இணயதளச் சஞ்சிகையொன்று வெளியிட்ட தகவலில் வொஷிங்டனின் வழிகாட்டலைப் பின்பற்றாது இம்ரான் கான்  தன்னிச்சையான வெளியுறவுக்கொள்கையை  கடைப்பிடித்தமையே இந்தப்பதவி பறிபோனதற்கு காரணமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நியூயோர்க்கிலிருந்து வெளிவரும் பறூக்கிளின் சிந்தனை குழு தனது கட்டுரைகளில் இம்ரான் கான் தஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் உடன் பேச்சுக்களை நடாத்தி வருகின்றார்.  இது அந்தஇயக்கத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கு இணையானது என்று குறிப்பிட்டு இருந்தது. தற்பொழுது இம்ரானின் பதவிப்பறிப்பிற்கு பின்னர் தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுத்துள்ளது. இதுவொரு மிகப்பாரிய தெற்காசிய அரசியல் கொள்கை மாற்றமாகும்.

மேலைத்தேய வழிகாட்டலை பின்பற்றகூடிய தற்போதைய பாகிஸ்தானிய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் பாகிஸ்தானில் சீனர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் மீண்டும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக, சீனாவின் பட்டுப்பாதை இணைப்புத் திட்டம் மிகப்பெரும் தெற்காசிய பதற்ற நிலையாக பரிணமிக்கவுள்ளது இதனை சீனாவால் தவிர்க்கவும் முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22