இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் 18 பேரடங்கிய புலம்பெயர் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழு நாட்டிற்கு வருகை

By T. Saranya

05 Nov, 2022 | 10:10 AM
image

(நா.தனுஜா)

மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்கு உதவும் வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளல், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்களுக்கு அவசியமான ஆலோசனைகளை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் புலம்பெயர் கனேடியத்தமிழர்கள் உள்ளடங்கலாக கனடாவில் முன்னணியில் திகழும் 18 வர்த்தகப்பிரமுகர்கள் அடங்கிய குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

சுமார் ஒருவாரகாலம் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள இக்குழு, பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார சமத்துவம் ஆகியவற்றின் ஊடாகவே அரசியல் ரீதியான சமத்துவத்தைத் தோற்றுவிக்கமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய வர்த்தகப் பிரமுகர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. 

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸின் தலைமையில் நாட்டிற்கு வருகைதந்துள்ள இக்குழுவில் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிற்குச்சென்று, அங்கு வணிகத்துறையில் முன்னணியில் திகழும் 17 வர்த்தகப்பிரமுகர்கள் உள்ளடங்குகின்றனர்.  

அதன்படி நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல், கனடாவில் இலங்கையின் வணிகங்களை ஊக்குவித்தல், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுதல், இலங்கையை ஓர் சுற்றுலாத்துறை நாடாகப் பிரபல்யப்படுத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்களின் இலங்கைக்கான விஜயம் மற்றும் அவர்களது நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இச்சந்திப்பில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பொருளாதார விவகாரங்கள் பிரிவின் மேலதிக செயலாளர் கலாநிதி ஏ.சாஜ்.யூ.மென்டிஸ், கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தவகையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்களின் இலங்கைக்கான விஜயம் குறித்துத் தெளிவுபடுத்திய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, நல்லிணக்கத்தைப் பொறுத்தமட்டில் இது மிகமுக்கிய நகர்வாகும் என்று சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பேசும்போது புலம்பெயர் இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதும் அதில் முக்கியமானதோர் விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

'அண்மையகால மக்கள் போராட்டத்தைத் (அரகலய) தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் எமது நாடு குறித்த தவறான பிம்பமொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு வருகைதருவதோ அல்லது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதோ எதிர்மறையானதொரு கோணத்திலேயே நோக்கப்படுகின்றது. 

எனவே இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் காணப்படும் அத்தகைய பிம்பத்தை மாற்றியமைப்பதற்கும், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் கனேடிய வர்த்தகர்கள் குழுவின் இந்த வருகை முக்கியமாகப் பங்களிப்புச்செய்யும். அதேபோன்று இவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துசென்ற போதிலும், இலவசக்கல்வி, இலவச சுகாதாரம் போன்ற சேவைகளால் தாமடைந்த பயனைத் திருப்பிச்செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வருகைதந்திருக்கின்றார்கள். அதனை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம்' என்று இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேலும் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து இலங்கைக்கான தமது விஜயத்தின் நோக்கம் குறித்து கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை பின்வருமாறு எடுத்துரைத்தார்.

'அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, எம்மை இலங்கைக்கு வருகைதருமாறும் இங்கு எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளமுடியும் என்பது குறித்து ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார். பல்வேறு காரணங்களால் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துசென்ற நாம், நீண்டகாலம் கனடாவில் வசித்தாலும்கூட 'இலங்கையர்' என்ற அடையாளத்தை எம்மால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கமுடியாது. நான் பிறந்தபோது இந்த நாடுதான் எனக்கு இலவச சுகாதாரசேவையை வழங்கியது. பின்னர் இலவசக்கல்வியையும் உணவையும் வழங்கியது. அதனைத்தொடர்ந்து நாம் புலம்பெயர்ந்து சென்றபோது கனடா எமக்குச் சிறப்பான வாழ்க்கையை வழங்கினாலும், நாம் வெறுமனே 'கனேடியர்'களாகவன்றி 'இலங்கை கனேடியர்'களாக அடையாளப்படுத்தப்படுவதையே விரும்புகின்றோம். எமது பிள்ளைகள் 'இலங்கையர்' என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டுமென விரும்புகின்றோம். எனவே அதனை முன்னிறுத்தி இலங்கையுடனான இணைப்புப்பாலத்தை உருவாக்கவேண்டும் என்ற சுயநல நோக்கத்துடன், நாம் ஏற்கனவே இலங்கையிலிருந்து பெற்றவற்றை திருப்பிச்செலுத்தவேண்டுமென எண்ணுகின்றோம்' என்று தெரிவித்தார்.

அதன்படி அடுத்தவார நடுப்பகுதி வரை நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் அவர்கள், நேற்று பிற்பகல் இலங்கை முதலீட்டுச்சபையுடனும் நாட்டிலுள்ள சில முக்கிய வணிக நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர். அதுமாத்திரமன்றி எதிர்வரும் நாட்களில் வணிகத்துறைசார்ந்த பல்வேறு தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருக்கும் அவர்கள், அதன்பின்னரேயே எந்தெந்தத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதெனத் தீர்மானிப்பர். 

இருப்பினும் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க சக்திவலு, சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் போன்றவற்றில் விசேட அவதானம் செலுத்தியிருக்கும் இவ்வர்த்தகப்பிரமுகர்கள், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள், புதிய வணிக முயற்சியாண்மைகள் திறம்பட இயங்குவதற்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கவுள்ளனர்.

மேலும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தாம் தொடர்புபடவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த இலங்கையிலும் பொருளாதார ரீதியான சமத்துவத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே அரசியல் ரீதியான சமத்துவத்தை எட்டமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்தோடு வட, கிழக்கில் விடுதலைப்போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதன்பின்னர் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஒன்றிணைப்பதற்கும் தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01