சன்னி லியோனின் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ஓடியோ முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

03 Nov, 2022 | 04:42 PM
image

வர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

'சிந்தனை செய்' பட இயக்குநர் ஆர். யுவன் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் சன்னி லியோனுடன் சதீஷ், ரமேஷ் திலக், யோகி பாபு, தர்ஷா குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஜாவித் ரியாஸ் மற்றும் தரண்குமார் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த ஹொரர், த்ரில்லர் படத்தை வி.ஏ.யு மீடியா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒயிட் ஹோர்ஸ் ஸ்டூடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் டி.வீரசக்தி மற்றும் கே.சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை வர்த்தக மைய வளாகத்தில் பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. 

தமிழ் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பங்குபற்றிய இந்த விழாவுக்கு படத்தின் நாயகியான சன்னி லியோன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

இந்த படத்தை பற்றி இயக்குநர் யுவன் பேசுகையில், 

"தயாரிப்பாளர் வீரசக்தி அவர்களை சந்தித்து கதையை விவரித்தேன். அவர் கலாரசனை மிக்க தயாரிப்பாளர். அதனால் கதையின் உள்ளடக்கத்தை புரிந்துகொண்டு 'கதாநாயகியாக சன்னி லியோன் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று சொன்னவுடன், மறுபேச்சு பேசாமல் அவரை சந்திப்பதற்கு இணங்கினார். 

சன்னி லியோன் அவர்களை சந்தித்து, கதையை சொன்னவுடன் அவருக்கும் பிடித்துவிட்டது. 

இந்தப் படத்தில் அவர் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். அதிலும், பீரியட் காலகட்டத்தில் 'மாய சேனா' எனும் இளவரசி கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதற்கு அவரே நன்கு பயிற்சியெடுத்து பின்னணியும் பேசியுள்ளார். 

படத்தின் முன்னோட்டத்தில் இது நகைச்சுவையான திகில் படமாக தெரியும். நகைச்சுவையான படத்தை இயக்குவது தான் கடினம். படப்பிடிப்புத் தளங்களில் காட்சிகள் படமாக்கப்படும்போது படக்குழுவினர் சிரிக்க வேண்டும். 

இந்தப் படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்தா என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக  வழங்கியுள்ளனர். 

இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் படமாளிகைக்கு வருகை தந்து பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

நடிகை சன்னி லியோன் பேசுகையில், 

"இயக்குநர் யுவன் கதை விவரித்த விதம் நன்றாக இருந்தது. இந்தப் படத்தில் ஸ்டைலிஷ் தலைவியாக என்னை தோன்ற வைத்ததற்கு படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

'ஓ மை கோஸ்ட்' படத்தை மிகப்பெரும் பட்ஜட்டில் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்துக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

'ஓ மை கோஸ்ட்' படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையாக இருந்தது" என்றார்.

இதனிடையே நடிகை சன்னி லியோன் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழில் "ஆஹா அற்புதம்" என்றதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right