(நெவில் அன்தனி)
அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (02) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்றில் ஸிம்பாப்வேயை 5 விக்கெட்களால் வீழ்த்திய நெதர்லாந்து, இனிய நினைவுகளுடன் அவுஸ்திரேலியாவிலிருந்து விடைபெறவுள்ளது.
சுப்பர் 12 சுற்றில் தனது கடைசிக்கு முந்தைய போட்டியில் நெதர்லாந்து ஈட்டிய அபார வெற்றியால் அரை இறுதியில் நுழையும் ஸிம்பாப்வேயின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் பிரதான அல்லது சுப்பர் சுற்றில் நெதர்லாந்து ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
நெதர்லாந்து தனது கடைசிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது.
போல் வென் மீக்கெரென், பாஸ் டி லீட், லோகன் வென் பீக், ப்றெண்டன் க்லோவர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், மெக்ஸ் ஓ'டவுட், டொம் கூப்பர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் வழங்கிய சிறப்பான பங்களிப்பு என்பன நெதர்லாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை கலங்கச் செய்த ஸிம்பாப்வேயை இன்றைய போட்டியில் வெற்றிகொண்டதன் மூலம் நெதர்லாந்து அணியினர் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
அப் போட்டியில் ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட சுமாரான 118 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
4ஆவது ஓவரில் 8 ஓட்டங்கள் பெற்றிருந்த ஸ்டெபான் மைபேர்கின் விக்கெட்டை நெதர்லாந்து இழந்ததால் ஸிம்பாப்வே பெரு உற்சாகம் அடைந்தது.
ஆனால், மெக்ஸ் ஓ'டவுட், டொம் கூப்பர் ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நெதர்லாந்துக்கு வெற்றியை அண்மிக்க உதவினர்.
மெக்ஸ் ஓ'டவுட் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களையும் டொம் கூப்பர் 2 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 32 ஒட்டங்களையும் பெற்றனர்.
கொலின் அக்கர்மன் (1), அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
எனினும் பாஸ் டி லீட் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களைப் பெற்று நெதர்லாநதின் வெற்றியை உறுதிசெய்தார்.
ஸிம்பாப்வே பந்துவீச்சில் ரிச்சர்ட் இங்கராவா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட விரும்பிய ஸிம்பாப்வே 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஸிம்பாப்வே துடுப்பாட்டத்தில் இருவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறாதது அவ்வணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நெதர்லாந்தின் துல்லிய பந்துவீச்சில் திணறிய ஸிம்பாப்வே பவர் ப்ளே நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் பவ்ர் ப்ளேயில் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
அனுபவசாலிகளான சோன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிய ஸிம்பாப்வேயினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது.
துடுப்பாட்டத்தில் சிக்கந்தர் ராஸா 24 பந்துகளில் தலா 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களையும் சோன் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் போல் வென் மீக்கெரென் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லோகன் வென் பீக் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்றெண்டன் க்லோவர் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன்: மெக்ஸ் ஓ'டவுட்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM