'உங்கள் உடல் உங்களுக்கே சொந்தம்' - பாதுகாப்பற்ற தொடுகை ஆபத்தானது - பகுதி 4

Published By: Nanthini

02 Nov, 2022 | 04:27 PM
image

(மா. உஷாநந்தினி)

எந்த வயது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்? 

இன்றைக்கு வயது வித்தியாசமின்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. எந்த வயதுப் பிள்ளையையும் பலாத்காரம் செய்து, அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்க, பலர் சமூகத்தில் சுற்றித் திரிகின்றனர். பிறந்த குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. 

எனவே, இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக, பாலியல் கல்வியை குறிப்பாக, தொடுகை கல்வியை நாம் சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 

அந்த வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக இருந்த நடாஷா பாலேந்திரா, பாலர் வகுப்பிலிருந்தே பிள்ளைகளுக்கு கட்டம் கட்டமாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்; அக்கல்வி மாணவர்களுக்கு கட்டாய கல்வியாக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சுக்கு பரிந்துரைத்தார்.  

பாலர் வகுப்பு என்கிற போது, சுமார் ஏழு, எட்டு வயதிலிருந்தே நாம் இவற்றை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம். 

தெளிவாக சொல்வதானால், ஒரு பிள்ளைக்கு எப்போது சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறதோ அப்போதிருந்தே பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கலாம். 

பாலியல் கல்வி என்பது அறுவறுக்கத்தக்கதல்ல... உடல் உறுப்புகளை இனங்காட்டுவது, உறுப்புகளின் முக்கியத்துவங்களை பற்றி எடுத்துரைப்பது, தொடுகை பற்றி கற்பிப்பது முதலிய அம்சங்கள் இதில் உள்ளன. 

சொன்னால் புரியுமா? 

நாம் கற்பிக்கும் பாலியல் கல்வியை பிள்ளைகளால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா, அதற்கு அவர்களின் மனநிலை பக்குவப்பட்டிருக்குமா என்கிற சந்தேகங்கள் பலர் மத்தியில் காணப்படுகின்றன. 

தொடுகை பற்றி அறியாத, கேள்விப்படாத ஒரு பிள்ளையை நபரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனில், தனக்கு நேர்வது தவறு என்பதை அந்தப் பிள்ளையால் உணர முடியாது. அம்மாதிரி பிள்ளைகளுக்கு நாம் தொடுகை குறித்து கற்பிக்க வேண்டும். 

சேயா செதவ்மி. நான்கரை வயதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இறந்ததாக, நாம் சில வருடங்களுக்கு முன் அறிந்தோம். 

அந்த சோக சம்பவத்தை கேள்விப்பட்டபோது, ஒரு சிந்தனை வெளிப்பட்டது... 

ஒருவேளை, அச்சிறுமிக்கு நல்ல தொடுகை, கூடாத தொடுகையை பற்றி அவளின் பெற்றோரோ ஆசிரியரோ சொல்லிக்கொடுத்திருந்தால், சேயா செதவ்மி அதை உள்வாங்கியவளாக இருந்திருந்தால், அவளது மரணம் பிற்போடப்பட்டிருக்கும்!

சில பிள்ளைகளை பாருங்கள்... 

அவர்களுக்கு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி காணப்பட்டாலும், மனதளவில், குழந்தைத்தனம் மிக்கவர்களாகவே இருப்பர். 

அந்தப் பிள்ளைகள் நாம் சொல்லும் எந்தவொரு விடயத்தையும் விளையாட்டாக கருதுவார்களே ஒழிய, அதன் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள். 

ஆகவே, பெற்றோர் அல்லது ஆசிரியர் சொல்வதை கேட்டு, கிரகிக்கும் இயல்பு பிள்ளைகளுக்கு வரவேண்டும். அப்போது தான், நாம் சொல்லும் எதையும் பிள்ளைகளால் சிந்தித்து, உணர முடியும். 

மேலும், இன்றைய நிலவரப்படி, துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்த சிறுவர்களில் அதிகமானோர் மனநலம் குன்றியவர்களும் மாற்றுத் திறனாளிகளுமே என்பது தெரியவந்துள்ளது. 

புத்தி சுவாதீனமுள்ள பிள்ளைகளுக்கே பாலியல் கல்வியை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கிறதென்றால், மனநலம் குன்றிய பிள்ளைகளுக்கு அதை எப்படி நம்மால் சொல்லிக்கொடுக்க முடியும்? இது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. 

அதிகம் பாதிக்கப்படுவது ஆண்பிள்ளைகளே! 

பாலியல் கல்வி, குறிப்பாக தொடுகை என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒன்றாகும். 

பொதுவாக, அனைவருமே பாலியல் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகின்றபோது பெண் பிள்ளைகளின் மீதே அதிக கவனம் செலுத்துகிறார்கள். 

சிறுவர் உலகத்தில் பெண் பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கும் பாலியல் கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும். அவர்களுக்கும் தொடுகை பற்றி கற்பிக்கவேண்டியது அவசியமாகின்றது. 

இலங்கையில், கடந்த காலங்களில், 35 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியிருப்பதை அறிந்தோம். அவற்றை நோக்குகின்றபோது, அதிகமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகுபவர்கள் ஆண் பிள்ளைகளே என்பது தெரியவந்துள்ளது. 

மேலெழுந்தவாரியாக, பெண் பிள்ளைகள் குறித்து கணிப்பவர்களுக்கு இந்தத் தரவு ஆச்சரியத்தை தரலாம். 

துஷ்பிரயோகத்தை நிகழ்த்துபவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும் என்றில்லை. ஒரு பெண், ஓர் ஆணை துஷ்பிரயோகம் செய்யக்கூடும். 

ஒரு பெண், ஓர் ஆண்குழந்தையை அல்லது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்யக்கூடும். அதே போல் ஓரினச் சேர்க்கைகளும் இடம்பெறாமல் இல்லை. 

இலங்கையில் உல்லாசத் துறையை பார்த்தால், அங்கு தான் அதிக ஆண் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். கடற்கரையோரப் பகுதிகளிலும் உல்லாச விடுதிகளுக்கு அண்மையிலும் வசிக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை, உல்லாசம் அனுபவிக்க வருபவர்கள், அழைத்துச் சென்றோ அல்லது கடத்திச் சென்றோ தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். 

இது ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவராலும் நடந்தேறுகிறது. 

இது உல்லாசப் பயணிகளுக்கு இருக்கக்கூடிய ஒருவித நோய் என்பதோடு இவ்வாறானவர்களுக்கு தேவை, ஆண் பிள்ளைகளே என்பது மேலதிக தகவல். 

ஆசைகள், உணர்வுகளுக்கு அடிமையாகிவிட்ட பிள்ளைகளும் இதற்கு உடன்படுவதை அறிய முடிகிறது. 

இன்றும் சில கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற சில ஆண்பிள்ளைகள், 'அன்டிகளின் தொல்லை தாங்க முடியவில்லை' என்பார்கள். 

சமூகத்தில் பெண்பிள்ளைகள் வெளியே அனாவசியமாக போய் வருவதை பார்ப்பது குறைந்திருக்கும், அதேவேளை ஆண் பிள்ளைகள் இஷ்டம் போல் நண்பர்களோடு சுற்றித் திரிகிறார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களை இலகுவில் கவர்ந்து பாலியல் சீண்டல்களை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆண் பிள்ளைகளை தவறாக பயன்படுத்திக்கொள்ள ஏதுவான இடங்களாக பாடசாலைகள், பக்கத்து வீடுகள், நண்பர்களின் வீடுகள், ஸ்கெளட்ஸ், பயிற்சி முகாம்கள், பகுதிநேர வகுப்புகளை குறிப்பிடலாம். 

எனவே, பெண் பிள்ளைகளைப் போல் ஆண் பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள் என்பதில் பெற்றோர் அக்கறை கொள்ள வேண்டும். 

ஆண்பிள்ளைகளுக்குமான தொடுகை பற்றிய விழிப்புணர்வு 

ஆண்பிள்ளைகளுக்கும் தொடுகை பற்றி கற்பிக்க வேண்டும். 

காரணம், முதலாவது, ஆண்பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 

இரண்டாவது, ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். 

இந்தப் பிள்ளைகளுக்கு முறையான தொடுகை, முறையற்ற தொடுகை பற்றி சொல்லிக்கொடுத்தால் தான் அவர்களுக்கு நேரும் ஆபத்துக்களையும், அவர்களால் நேரும் ஆபத்துக்களையும் தடுக்க முடியும். மற்ற பெண்பிள்ளைகளை பார்க்கும்போது, 'அவர்களும் என் அம்மா, சகோதரியை போன்றவர்கள் தானே' என்கிற உணர்வு தோன்றும். 

(தொடரும்...)

இந்த கட்டுரையின் பகுதி 1ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையின் பகுதி 2ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையின் பகுதி 3ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right