(எம்.எப்.எம்.பஸீர்)
மின்சாரம், சமயல் எரிவாயு, எரிபொருள், பால் மா, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள இரு அடிப்படை உரிமை மனுக்களை கால வரையறை இன்றி கிடப்பில் வைக்க உயர் நீதிமன்றம் நேற்று (1) அனுமதியளித்தது.
நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய குழாம் இதற்கான அனுமதியை அளித்தது.
மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா முன் வைத்த கோரிக்கையை ஏற்று இதற்கான அனுமதியளிக்கப்ப்ட்டது.
மன்றில் நேற்று விடயங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, அத்தியவசிய பொருட்கல் குறித்த பிரச்சினைகள் தற்போது பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ள சூழலில், மனுவை முன் கொண்டு செல்வதற்கான உரிமையை தக்க வைத்துகொண்டு, குறித்த இரு மனுக்களையும் கிடப்பில் வைக்குமாறு கோரினார்.
அத்துடன் விஷேட தேவை ஒன்று ஏற்படுமாக இருப்பின் மனுவை நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் விசாரணைக்கு அழைக்க அதில் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தலையிட்டமைக்காக சட்டமா அதிபர் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இரண்டு மனுக்களையும் கிடப்பில் வைக்க அனுமதியளித்தது.
எஸ்.சி.எப்.ஆர். 106/ 22 மற்றும் எஸ்.சி.எப்.ஆர். 107 /22 ஆகிய இலக்கங்களின் கீழ் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் இந்த இரு மனுக்களும் தாக்கல்ச் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அதன் உப தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, செயலாளர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, பொருளாலர் சட்டத்தரணி ரஜித்த பெரேரா, பிரதி செயலர் சட்டத்தரணி பசிந்து சில்வா ஆகியோரால் இந்த இரு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், திறை சேரியின் செயலர், மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கியின் நிதிச் சபை, இலங்கை மின்சார சபை, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 42 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல்ச் செய்துள்ள இரு மனுக்களிலும், கணிய எண்ணெய், மின்சாரம், சமயல் எரிவாயு, உணவு, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், அதனால் மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அதனால் மக்களின் அடிப்படை உரிமைகல் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதனால் மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமயல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை தட்டுப்பாடின்றி நிவாரண விலையின் கீழ் தொடர்ச்சியாக மக்களுக்கு விநியோகிக்க முடியுமான செயற்றிட்டம் ஒன்றினை தயரைக்குமாரு பிரதிவாதிகளுக்கு உத்தர்விடுமாறு இந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.
அதே போல், பொருளாதார நிபுணர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கான குறுகிய கால, மத்திய கால நீண்ட கால கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளன.
அத்துடன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான தேசிய கொள்கை ஒன்றினை தயாரிக்கவும் உத்தரவிடுமாறு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.
அதனைவிட, தேசிய விவசாயம், பால் உற்பத்தி, பன்னை உற்பத்திகளை அதிகரிக்க கொள்கை ரீதியிலான செயற்றிட்டம் ஒன்றினை வகுக்கவும் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM