" உலகில் பல ஜனநாயக நாடுகளில் இனத்துவ தேசியவாத கட்சிகளும் பெரும்பான்மைவாத தீவிர வலதுசாரி கட்சிகளும் வளர்ந்துவரும் ஒரு காலகட்டத்தில், வெள்ளையர்களும் கிறிஸ்தவமும் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்தின் பிரதமராக ஐரோப்பியரல்லாத, இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் ரிஷி சுனாக் அடைந்திருக்கும் உயரம் குறியீட்டளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
" இங்கிலாந்தின் முதல் வெள்ளையர் அல்லாத பிரதமராக சுனாக் தெரிவுசெய்யப்பட்டிருப்பது கட்சியும் நாடும் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைக்கு இனம் மற்றும் மதங்களைக் கடந்த தீர்வுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார்நிலையில் இருப்பதை காட்டுகிறது.
" அவரது வெற்றி இந்தியாவில் சில தரப்பினரால் வரவேற்கப்படுகிறது.இந்தியாவை ஒரு காலகட்டத்தில் குடியேற்ற நாடாக ஆட்சிசெய்த நாட்டின் அதிகாரத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்பதன் மூலம் ஒரு வரலாற்றுக்கடமை நிறைவேறியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
" ஆனால், தற்காலத்தின் கடும் யதார்த்தங்களை வைத்து சோதனை செய்துபார்த்தால் குறியீடுகளின் அதிகாரம் வரையறுக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.எந்த சூழல்கள் காரணமாக சுனாக் இந்த உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறாரோ, அதே சூழல்கள் அவருக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்."
பிரிட்டனின் பிரதமராக சுனாக் பதவியேற்ற பிறகு சென்னை ' த இந்து ' ஆங்கில பத்திரிகை 27/10 /2022 இதழில் எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது ' குறியீட்டு' முக்கியத்துவம் ( Symbolic Importance)பற்றிய கருத்தாகும். அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கரான பராக் ஒபாமா ஜனாதிபதியாக தெரிவான வேளையிலும் பிறகு தற்போதைய பைடன் நிருவாகத்தில் இந்திய அமெரிக்கரான கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையிலும் எமது பிராந்திய நாடுகளில் இவ்வாறாக எல்லாம் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்களோ அல்லது சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களோ ஆட்சியதிகார உயர் பதவிகளுக்கு வரமுடியுமா என்று கேள்வி கிளப்பப்பட்ட வாதப்பிரதி வாதங்கள் மூண்டன.இப்போது சுனாக் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்தும் அதே போன்ற கேள்விகள் கிளம்பியதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில் இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கிடையில் கடந்தவாரம் மூண்ட சொற்போர் குறித்த செய்திகள் கவனத்தை ஈர்த்தன.
காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை, பிரிட்டனில் சுனாக் கண்ட உயர்வை இந்தியாவில் இத்தாலியப் பெண்மணி சோனியா காந்தியினால் பிரதமராக வரமுடியாமல் போன நிலைவரத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனாக்கினால் ஒரு ஐரோப்பிய நாட்டில் பிரதமராக வரக்கூடியதாக இருக்கிறது என்றால், சோனியா காந்தியினால் இந்தியாவில் ஏன் பிரதமராக வரமுடியாது என்பது அவர்களது ஆதங்கத்துடனான கேள்வியாகும்.அவரால் அவ்வாறு வரமுடியாமல் போனதற்கு காங்கிரஸ் அரசியல்வாதிகள் இந்து பெரும்பான்மை இனவாதத்தை குறைகூறுகிறார்கள்.
2004 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றபோதிலும் சோனியா காந்தியினால் இந்தியாவின் பிரதமராக பதவியேற்க முடியாமல் போனதற்கும் பிரிட்டிஷ் ஆளும் கட்சியின் தலைவராக சுனாக் தெரிவுசெய்யப்பட்டதற்கும் இடையில் சமாந்தரம் வரைவதை ஆளும் பாரதிய ஜனதா கட்சி நிராகரிக்கிறது.அதேவேளை, அப்துல் கலாமினால் ஜனாதிபதியாகவும் கலாநிதி மன்மோகன் சிங்கினால் பிரதமராக வரமுடிந்தமையை இந்தியாவின் தாராள ஜனநாயகத்திற்கான உதாரணங்களாக அந்த கட்சி முன்வைக்கிறது.
" ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகு பல தசாப்தங்களாக இந்திய குடியுரிமையை பெறுவதற்கு மறுத்துவந்த -- இத்தாலியில் பிறந்த சோனியா காந்திக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த -- ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த சுனாக்கிற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதா?" என்று பாரதிய ஜனதாவின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைவரான விஜய் சௌதாய்வாலே ருவிட்டர் சமூக ஊடகத்தில் கேள்வியெழுப்பினார்.
காங்கிரஸ் உட்பட இந்தியாவின் பல்வேறு எதிர்க்கட்சிகள் சுனாக்கின் உயர்வைப் புகழ்ந்த அதேவேளை பாரதிய ஜனதாவை தாக்கியதை அடுத்தே அவர் இந்த பதிவின் மூலம் தனது பிரதிபலிப்பை வெளியிட்டார்.
ஜம்மு -காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவியுமான மெஹ்பூபா முஃப்தி கருத்து வெளியிடுகையில் இந்திய வம்சாவளி சுனாக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டது பெருமைக்குரிய ஒரு தருணமே. சிறுபான்மை இனத்தின் உறுப்பினர் ஒருவரை பிரிட்டன் அதன் பிரதமராக ஏற்றுக்கொண்டிருப்பது முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டியதாகும்.ஆனால் நாம் இன்னமும் தேசிய குடியுரிமைப் பதிவு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகின்ற பாரபட்சமான சட்டங்களினால் கட்டுண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
முஃப்தியின் இந்த கருத்துக்கு பதிலளித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவி சங்கர் பிரசாத்," ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக சுனாக் தெரிவுசெய்யப்பட்ட பிறகு சில தலைவர்கள் பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக மட்டுமீறிய அளவுக்கு பேசத்தொடங்கியிருக்கிறார்கள்.இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல் கலாமும் 10 வருடங்களாக பிரதமராக மன்மோகன் சிங்கும் பதவிவகித்த அதிவிசேட காலப்பகுதிகளை இந்த தலைவர்களுக்கு கண்ணியமான முறையில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.தற்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு எமது ஜனாதிபதியாக இருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பன்முகத்தன்மையையும் பல்வகைமையையும் கொண்டாடுவதில் இந்தியா பிரகாசமான ஒரு உதாரணமாக விளங்குகிறது,ஆனால் இங்கிலாந்து எங்களுக்கு பாடம் சொல்லித்தரவேண்டிய அளவுக்கு மோடி அரசாங்கத்தின் கடந்த 8 வருடங்களில் 'வேற்றுமையில் ஒற்றுமை ' என்ற கோட்பாடு மறுதலையாக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.
" அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் கலாநிதி அப்துல் கலாம் ஜனாதிபதியாக வந்தார்.வாஜ்பாய்க்கும் நரேந்திர மோடிக்கும் இடையே மலையளவு வேறுபாடு இருக்கிறது.வாஜ்பாய் ஜவஹர்லால் நேருவின் சிந்தனையின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார் என்று நான் நம்புகிறேன்.நேருவின் மரபை ஒழிப்பதற்கு மோடி கங்கணம் கட்டிநிற்கிறார் போல தோன்றுகிறது " என்று ரமேஷ் குறிப்பிட்டார்.
பி. சிதம்பரம்,சஷி தரூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் பிரதமராக சுனாக்கின் உயர்வு இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்று கூறியிருக்கின்ற அதேவேளை இந்தியாவில் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் கடந்த காலத்தில் ஜனாதிபதியாகவும் மாநில முதலமைச்சர்களாவும் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்று ரமேஷ் கூறுகிறார்." மக்களின் ஆணையைப் பெறுபவர்களினால் பிரதமராக வரமுடியும்.ஜனநாயக அடிப்படையில் ஒருவர் தெரிவுசெய்யப்படுவாரேயானால், எமக்கு பிரச்சினையில்லை" என்றும் அவர் சொன்னார்.
சிதம்பரம் தனது ருவிட்டர் பதிவொன்றில் ," முதலில் கமலா ஹரிஸ், இப்போது ரிஷி சுனாக்.அமெரிக்காவினதும் ஐக்கிய இராச்சியத்தினதும் மக்கள் தங்களது நாடுகளின் பெரும்பான்மையினத்தைச் சாராத குடிமக்களை அரவணைத்து அரசாங்க உயர்பதவிகளுக்கு தெரிவுசெய்திருக்கிறார்கள்.இதில் இருந்து இந்தியாவும் பெரும்பான்மையின வாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் கற்றுக்கொள்வதற்கு பாடமொன்று இருக்கிறது " என்று கூறியிருக்கிறார்.
இவர்கள் சொல்வது போன்று பெரும்பான்மையினவாத அரசியல் சக்திகளுக்கு பாடம் ஒன்று இருக்கிறது என்ற போதிலும்,இந்தியாவில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் பிரதமராக அல்லது ஜனாதிபதியாக தெரிவான தோற்றப்பாட்டை பிரிட்டனில் சுனாக்கின் உயர்வுடன் ஒப்பிடுவது எந்த விதத்திலும் பொருத்தமானதல்ல.அவ்வாறு இந்தியாவில் அரசியல் உயர் பதவிகளுக்கு வந்தவர்களில் எவரும் வந்தேறுகுடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.அவர்கள் எல்லோரும் இந்தியர்கள்.
மீண்டும் காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கக்கூடிய வாய்ப்பு வரும்பட்சத்தில் சோனியா காந்தி பிரதமராக விரும்புவாராக இருந்தால் அதற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இருப்பதற்கு ' சுனாக் தோற்றப்பாடு ' உதவக்கூடும்.ஆனால், சோனியா காந்தி கட்சியை பின்னணியில் இருந்து இயக்கிக்கொண்டிருந்தாலும், தீவிர தேர்தல் அரசியலுக்கு மீண்டும் வரக்கூடிய நிலையில் இல்லை. காங்கிரஸும் கூட தேசிய ரீதியில் பாரதிய ஜனதாவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்கக்கூடிய வலுவான நிலையில் இல்லை.அது வேறு விடயம்.
இதனிடையே, இலங்கையிலும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ஏன் வரமுடியவில்லை என்ற வாதப்பிரதி வாதங்கள் குறிப்பாக ஊடகங்களில் கிளம்பியிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது தொடர்பில் ஆராய இப்பத்தியில் இடவசதியில்லை. என்றாலும், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் எம்.பி. தெரிவித்த கருத்தொன்றை குறிப்பிடாமல் கடந்து செல்லமுடியவில்லை.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஒருவர் வந்திருக்கிறார் ; உலகம் இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது என்ற காரியவாசத்தின் கூற்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமைகளை வைத்துக்கொண்டு ஏன் அரசியல் பதவிகளில் இருக்கமுடியாது என்ற அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.
சுனாக் பிரிட்டனில் பிறந்தவர்.அங்கேயே படித்து ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.அவரது பெற்றோர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து கடந்த நூற்றாண்டில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள்.ஆனால் பசில் இலங்கையில் பிறந்தவர்.பொருளாதார ரீதியில் வசதியான வாழ்க்கை தேடி அமெரிக்கா சென்று குடியுரிமையை பெற்றுக்கொண்டவர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து மேலும் வசதியானதும் அதிகாரத்துடன் கூடியதுமான வாழ்க்கையை அனுபவிக்க மீண்டும் இலங்கைக்கு வந்தவர்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோதாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.ஆனால் பசில் அவ்வாறு செய்ய ஒருபோதும் முன்வரவில்லை.அதனால் பிரிட்டனில் சுனாக்கின் நிலையுடன் பசிலின் விவகாரத்தை ஒருபோதும் ஒப்பிட முடியாது.
முடிவாக, கிறிஸ்தவரும் வெள்ளையரும் அல்லாத குடியேற்றவாசிகளின் மகன் ஒருவனை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பிரிட்டிஷ் அரசியல் முறைமை நேர்மறையான பரிணாம வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியின் ஒரு உறுதிச்சான்றாகவே சுனாக்கின் உயர்வை நோக்கவேண்டும்.அதில் உள்ள குறியீட்டு முக்கியத்துவம் உரிய முறையில் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM