அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

01 Nov, 2022 | 10:06 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்படவுள்ளது. 

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மருதானை எல்பிஸ்டன் திரையரங்கம் அருகே இருந்து இந்த ஆர்ப்பாட்டம் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அங்கிருந்து தொழில்னுட்ப சந்தி ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியானது கோட்டை ரயில் நிலையம் வரைச்  செல்லவுள்ளது. ரயில் நிலையம் முன்பாக  எதிர்ப்பு மாநாடு நடாத்தப்படவுள்ளது.

 இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்,  நாட்டின்  எதிர்க் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்  பெரும்பாலான அரசியல் கட்சிகள்  உள்ளிட்ட 20 கட்சிகள்,  150 தொழிற் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான  ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டமைப்பின் அனைத்து  பங்காளிக் கட்சிகளும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.

இதன்போது ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னர் கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடாத்தப்படும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ, குறித்த கூட்டமைபில் உள்ளடங்கும்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேஷன், ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் ஆகியோர் அடக்குமுறை மற்றும் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக உரையாற்றவுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளது.

இதனைவிட இன்றைய ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும் பங்கேற்கும் நிலையில்,  முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.

 இதனைவிட,  பாராளுமன்றில் தனித்து செயற்படும் டளஸ் அழகப் பெரும தலைமையிலான குழுவினரும், அனுர பிரியதர்ஷன யாப்பா - சந்திம வீரக்கொடி குழுவினரும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணியினரும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனைவிட முன்னிலை சோஷலிச கட்சி உள்ளிட்டவையும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து தவிர்ந்துள்ளது.

 அரசியல் கட்சிகளுக்கு  மேலதிகமாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கம்,  அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்,  இலங்கை வங்கிச் சேவையாளர்கள் சங்கம்,  தொழிலாளர் போராட்ட மையம்,  இலங்கை தோட்ட தொழிலாளர்கள்சங்கம்,  உள்ளிட்ட 150 தொழிற் சங்கங்கள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் காரர்கள் உட்பட  சிவில் அமைப்புக்கள்,  சிவில் சமூக பிரதிநிதிகளும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது  எந்த தடை வந்தாலும்  நிறுத்தப்பட மாட்டடாது எனவும்,  திட்டமிட்டபடி நடாத்தப்படும் எனவும் , மருதானை - எல்பிஸ்டன்  மண்டபம் அருகே இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  இதன்போது ஆசிரியர் தொசிற் சங்கத் தலைவர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தை அடக்க பாதுகாப்பு தரப்பு முயலக் கூடாது எனவும், ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது கை வைத்தால் நிலைமை பாரதூரமாகும் எனவும்  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது தெரிவித்தார்.

 அடக்கு முறைக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நிபந்தனையின்றி தமது கட்சியும் கட்சியினரும் இருப்பதாக அவர் எதிர்க் கட்சி அலுவலகத்தில் வைத்து  நேற்று ( 1) அடக்கு முறைக்கு எதிராக  அரசியல் கட்சிகள்,  தொழிற் சங்கங்கள்,  சிவில் அமைப்புக்கள் இணைந்து முன் வைக்கும் முன் மொழிவில் கையெழுத்திட்டு அறிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் அதன் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகரவும், இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என நேற்று கொழும்பில் வைத்து அறிவித்தார்.

 ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவு சார்பில் ஊடக சந்திப்பொன்றினை நேற்று நடாத்திய  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்ர, வீட்டில் இருக்கும் அனைத்து பெற்றோருக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தி செயலர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினர் நேற்று கையெழுத்திட்ட அடக்கு முறைக்கு எதிராக  அரசியல் கட்சிகள்,  தொழிற் சங்கங்கள்,  சிவில் அமைப்புக்கள் இணைந்து முன் மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாரு,

இலங்கையின் குடிமக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற அரசியல் முடிவுகளாலும், பரவலாக நடைபெறும் ஊழல்களாலுமே இப்பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டன என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அரசாங்கம் இதனை மறந்துவிட்டு மொத்த பொருளாதார அழுத்தங்களையும் அதன் குடிமக்கள் மீது சுமத்தி வருகின்றது. 

பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி நடத்தும் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்களையும் அரசாங்கம் கொடூரமாக ஒடுக்கி வருகிறது.

குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக, குடிமக்களின் கருத்துவெளிப்பாட்டுரிமை உட்பட அடிப்படை மனித உரிமைகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளையும் அரசாங்கம்  அப்பட்டமாக மீறுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பின்வரும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

1) நாட்டின் பல்வேறு சட்டங்களைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் குடிமக்களை ஒடுக்குவதை அரசாங்கம் வாடிக்கையாக மாற்றியுள்ளது. அந்தவகையில் சிவில் உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படும் சட்டங்களில் ஒன்றாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

2) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

3) மேல்மாகாணத்தில் நடைபெறும் அமைதியான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள்/எதிர்ப்பு ஊர்வலங்களில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்துதல், முற்றுகையிடுதல், அவற்றுக்கெதிரான நீதிமன்ற உத்தரவுகளை எடுத்தல், அமைதியான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள்/எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்துகொள்பவர்களைத் தாக்கி கைது செய்தல் மற்றும் தீங்கிழைக்கும் வகையில் அவர்களுக்கெதிராக வழக்குத் தொடுப்பதை பொலிசார் உடனடியாக நிறுத்த வேண்டும்.

4) அமைதியான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள்/ எதிர்ப்பு ஊர்வலங்களில் பொலிசார் தலையிட்டு, சட்டவிரோதமாக கைது செய்த/தீங்கிழைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

5) அமைதிப் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள்/எதிர்ப்பு ஊர்வலங்களில் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்திய, முற்றுகையிட்ட, அவற்றுக்கெதிரான நீதிமன்ற உத்தரவுகளை எடுத்த, அவ்வமைதிப் போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள்/எதிர்ப்பு ஊர்வலங்களில் ஈடுபட்டவர்களை  கைதுசெய்த பொலிசார் மீது சட்டங்களின் பிரகாரமும் தாபன விதிக்கோவைகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) அடக்குமுறையை சட்டப்பூர்வமாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட புனர்வாழ்வு மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மேற்கூறிய முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கீழே கையொப்பமிட்டவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45
news-image

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின்...

2023-09-26 16:45:18