முதுகு வலி நிவாரணியாக அறிமுகமாகவிருக்கும் ஸ்மார்ட் நாற்காலி !

01 Nov, 2022 | 11:54 AM
image

தகவல் தொழில்நுட்பத்  துறையின் அதீத வளர்ச்சியின் காரணமாக இன்றைய  காலத்தில் எம்மில் பலரும் உறங்கும் நேரத்தை விட... பயணிக்கும் நேரத்தை விட... ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கிறது. 

இதனால் உடல் சூடு அதிகமாகி, செரிமான கோளாறு ஏற்படுவதுடன் முதுகு வலி, கழுத்து வலி போன்ற உபாதைகளும் ஏற்படுகிறது. அலுவலகமாக இருந்தாலும் அல்லது இல்லத்திலிருந்து பணியாற்றுவதாக இருந்தாலும் அதிக நேரம்  நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம்.  

ஒவ்வொருவரும் தங்களுடைய சௌகரியத்திற்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு முதுகு வலியும், கழுத்து வலியும் உண்டாகிறது. இதற்காக வைத்தியசாலைக்குச் சென்று  டொக்டர்களிடம் ஆலோசனை கேட்டால், அவர்கள் ட்ராக்சன் அல்லது பிரத்யேக உறையை அணிந்து கொள்ளுங்கள் என பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவை தற்காலிக நிவாரணத்தை தான் வழங்குகிறதே தவிர, வலியை குறைப்பதில்லை. இந்நிலையில் ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் உணரியுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்மார்ட் நாற்காலிகளை வடிவமைத்திருக்கிறார்கள். 

இந்த சென்சார்கள், பயனாளி சரியான நிலையில் (Posture) அமர்ந்திருக்கிறாரா..? என்பதையும், எவ்வளவு நேரம் சரியான நிலையில் அமர்ந்து பணியாற்றுகிறார் என்பதையும், வலி ஏற்பட்டால் எதன் காரணமாக.. எங்கு ஏற்பட்டது என்ற தரவுகளையும் சேமித்து, உங்களுடைய  மருத்துவருக்கும், உங்களுடைய ஸ்மார்ட்போனுக்கும் குறுஞ்செய்திகளாக அனுப்புகிறது.

விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் இந்த ஸ்மார்ட் நாற்காலிகள், முதுகு வலி மற்றும் கழுத்து வழியால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். முதுகு வலி மற்றும் கழுத்து வலியை கண்டறிந்த பின், அதிலிருந்து நிவாரணம் பெறுவது எளிது. மேலும் கொர்ப்பரேட் அலுவலகங்களிலும் வலியை கண்டுணர்த்து எச்சரிக்கும் ஸ்மார்ட் நாற்காலிகள் விரைவில் இடம்பெறவிருக்கிறது.

மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்களிடையே ஸ்மார்ட் வொட்ச், ஸ்மார்ட் ரிவி போன்றவை.. பலன்களை நன்முறையில் அளித்து வருவதால், முதுகு வலி மற்றும் கழுத்து வலியை கண்டறிந்து நிவாரணம் அளிக்கும் ஸ்மார்ட் நாற்காலிக்கும் பாரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்