கந்தபளை கோணபிட்டிய தோட்டத்தில் இம்மாதம் 4 ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக, மண்மேடு தாழிறங்கியதால் மண்சரிவு அபாயம் என அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள 11 வீடுகளைச் சேர்ந்த 45 இற்கும் மேற்பட்டவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டார்கள்.

 

இவர்களுக்கு 3 நாட்கள் தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக உணவு வழங்கப்பட்டது. 3 நாட்களுக்கு பின் இந் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

இதனால் இங்கு தங்கியிருந்தவர்கள் மண்சரிவு அபாயம் உள்ள தங்களின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளனர்.

 

இதேவேளை தேசிய கட்டிட ஆய்வு நிலையத்தின் அதிகாரிகள் இப்பிரதேசத்தை பார்வையிட்டு மண்சரிவு அபாயம் இல்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பிடங்களுக்கு செல்லுமாறும், மழை பெய்யும் காலங்களில் மாற்று இடங்களில் தங்குமாறும் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட இவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அத்தோடு இப்பகுதியில் தொடர்ந்து ஏற்படும் மண்சரிவு அபாயத்தினால் மக்கள் அச்சத்தோடு இருப்பதாகவும், இதுவரையும் தாங்கள் வாழும் பகுதிக்கு கூரை தகரமோ, குடிநீர் வசதிகளோ ஏனைய விடயங்களையும் அதிகாரிகளால் செய்துக் கொடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிய அரசியல்வாதிகளும் தமக்கு எவ்வித வசதிகளையும் செய்துக் கொடுக்கவில்லை எனவும் இவர்கள் அங்கலாகிக்கின்றனர்.

 

எனவே பாதிக்கப்பட்ட தமக்கு உடனடியாக வீடுகளை அமைத்து பாதுகாப்பு வழங்குமாறு சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வருமாறு கோருகின்றனர்.