22 ஆவது திருத்தத்தில் முஸ்லிம்களின் நலன் உறுதிப்படுத்தப்படுமா ?

Published By: Digital Desk 5

30 Oct, 2022 | 08:48 PM
image

ஏ.எல்.நிப்றாஸ் 

பெரும் ஆரவாரங்களுடனும் ஆர்ப்பரிப்புக்களுடனும் அரசியலமைப்பில்; இன்னுமொரு திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 22ஆவது திருத்தம் முற்றுமுழுதாக நாட்டு நலனுக்கானது என்றும், இதனால் மக்களின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது போலவும், வழக்கம்போல ஒரு பொய்யான தோற்றப்பாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 

22ஆவது திருத்தத்தில் பல நல்ல முன்மொழிவுகள் உள்ளதென்னவோ உண்மைதான். ஆனால் இதனால் மக்களின் நிகழ்கால நெருக்கடிகளுக்கு தீர்வு கிட்டுமா? அல்லது அத்திருத்தம் எந்தளவுக்கு மக்கள் நலனை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும்? என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும். 

1978இல் ஜே.ஆர்.ஜயவர்தன கொண்டுவந்த அரசியலமைப்பில் முதவாவது திருத்தத்தை அவரே மேற்கொண்டார். அவரது காலத்திலேயே அதிகப்படியான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆக மொத்தத்தில், ஜே.ஆர். முதல் அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்க வரையிலான ஆட்சியாளர்கள் இந்த யாப்பில் முழுமையாக திருப்தியடையவில்லை அல்லது பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய காலத்தின் தேவை எழுந்தது எனக் கூறலாம். 

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் 19ஆவது திருத்தத்தை கொண்டு வந்தது. ‘ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்தல்’ உள்ளடங்கலாக பல நல்ல ஏற்பாடுகள் இதில் இருந்தன. அத்துடன் மஹிந்த அரசாங்கம் நிறைவேற்றியிருந்த 18ஆவது திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டிருந்த சில சரத்துக்களுக்கான திருத்தங்களும் இதில் உள்ளடங்கியிருந்தன. 

பிறகு, கோட்டபாய அரசாங்கம் ஒற்றைக்காலில் நின்று 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது. 19அவது திருத்தத்தை நீக்குவதே அதனது பிரதான நோக்கமாக இருந்தது. அத்துடன் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பஷில் ராஜபக்ஷவை எம்.பி.யாக நியமிப்பதற்கான பிரத்தியேக ஏற்பாட்டையும் உள்ளடக்கியிருந்தது.  இந்நிலையில், இப்போது மற்றுமொரு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கடந்த பல திருத்தங்களை ஒரு தொடர் சங்கிலியாக நோக்கினால். அநேகமான திருத்தங்கள் முன்னைய ஒரு திருத்தத்தின் ஏற்பாட்டை நீக்குவதை அல்லது மாற்றுவதை முக்கிய நோக்காகக் கொண்டு முன்னகர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். 

இதிலுள்ள அரசியல் வேடிக்கை என்னவென்றால், இந்த திருத்தங்கள் எல்லாவற்றுக்குமே அதே எம்.பி.க்கள்தான் மாறி மாறி ஆதரவளித்துள்ளார்கள். 20ஆவது திருத்தம் ‘சரி’ என்றவர்கள் தான் இப்போது 22இற்கும் ஆதரவாக வாக்களித்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் 19இற்கும் கையுயர்த்தியிருந்தார்கள். முஸ்லிம் எம்.பி.க்கள் இதில் முக்கியமானவர்கள். 

எதிர்காலத்தில் இன்னுமொரு திருத்தம் வந்தாலும் இந்தக் கூட்டம் கையுர்த்த வெட்கப்படப் போவதில்லை. அதுமட்டுமன்றி, ‘பஷில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போன்ற சுயநலன்மிக்க அரசியல் கருத்தியல்களும் நகர்வுகளும் முன்னுக்குப் பின் முரணாகி கடைசியில் புஷ்வாணமாகிப் போயிருப்பதையும் காண்கின்றோம். 

ஆகவேதான், யாப்பு மற்றும் திருத்தங்களோ அல்லது வியூகங்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்புக்களோ மக்கள் வாழ்வில் பெரிய முன்னேற்றம் எதனையும் கொண்டு வரவில்லை என்று கூறுகின்றோம். ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அதனால் பயன்பெற்றார்கள் அல்லது தமது நலன்களை அடைந்து கொண்டார்கள் என்பதே நமது பட்டறிவாகும். 

எது எவ்வாறாயினும், நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமது இனம், சமூகம் சார்ந்த அபிலாஷைகளை முன்கொண்டு செல்வதைத் தவிர சிறுபான்மைச் சமூகங்களின் முன் வேறு தெரிவுகள் இல்லை என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

முஸ்லிம் கட்சித் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறான காத்திரமான முன்னெடுப்புக்களைச் செய்கின்றார்கள்? என்பதே இங்குள்ள மில்லியன் டொலர் கேள்வியாகும். 

22ஆவது திருத்தமானது பல சிறுசிறு திருத்தங்களுடனேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முழுமையான இறுதி வடிவம் என்னவென்பது வர்த்தமானி வெளியான பிறகே உத்தியோகபூர்வமாக தெரியவரும். இருப்பினும், சில முக்கிய விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளமை புலனாகின்றது. 

அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல், தேசிய பெறுகை ஆணைக்குழு மற்றும் கணக்காளர் ஆணைக்குழுவை  உருவாக்குதல், அமைச்சுக்களின் எண்ணிக்கை, பிரதமர் பதவி நீக்கம் தொடர்பான சரத்து, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் எம்.பி.யாவதை தடுக்கும் ஏற்பாடு, இரண்டரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் போன்றவை இதில் முக்கியமான திருத்தங்களாக கருதப்படுகின்றன.  

இப்புதிய திருத்தம் பற்றிய தேசிய மட்டத்திலான ஒரு பார்வை இருக்கின்றது. அதற்குப் புறம்பாக ‘ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல்’ என்ற ஏற்பாட்டை முஸ்லிம் சமூகம் குறிப்பாக அரசியல்வாதிகள் ஏற்கனவே ஆழமாக கூர்ந்து நோக்க வேண்டும். 

அதாவது, புதிய திருத்தத்தின்படி ஆணைக்குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தின் போது அரசியலமைப்பு சபையின் ஆலோசனையானது தவிர்க்க முடியாததாக ஆக்கப்பட்டிருக்கின்றது. அதன்மூலம் இச்சபையின் பலம் புலனாகின்றது. 

எனவே, இலங்கையில் வாழும் தனியான ஒரு சமூகம் என்ற வகையில் ஆணைக்குழுக்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை ஏதோ ஒரு அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டிய தேவை நமக்குள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற முக்கியமான ஆணைக்குழுக்களிலாவது பொருத்தமான முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது  இன்றியமையாதது. 

ஆணைக்குழுக்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமெனில், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் பெருமளவுக்கு சார்ந்திருக்கின்ற அரசியலமைப்புப் பேரவையில் ‘பலமான’ முஸ்லிம் பிரதிநிதித்துவம் சரிவர உறுதிப்படுத்தப்பட வேண்டியது அடிப்படையானது. இங்குதான் முஸ்லிம் சமூகம் கவனிக்க வேண்டியுள்ளது. 

இதற்கு முன்னைய 18ஆம், 19ஆம், 20ஆம் திருத்தங்களிலும் அரசியலமைப்புப் பேரவையை ஒத்தவொரு அமைப்பாக்கம் இருந்தது எனலாம். அதன் அதிகாரங்கள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது வேறு விடயம். 

ஆனால் முன்னர் கொண்டுவரப்பட்;ட ஓரிரு திருத்தங்களில் பல்-சமூக அரசியல் பிரதிநிதிகளை உள்வாங்கப்படக் கூடியவாறான சொல்லாடல்  காணப்பட்டதாகவும், மற்றைய சில திருத்தங்களில் அவ்; விதமான நேரடி சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. மாறாக, புத்திஜீவிகளை உள்வாங்கும் பாங்கிலான ஒரு சொற்பிரயோகமே இருந்தது என்றும் விடயமறிந்தோர் கூறுகின்றனர். 

22ஆவது திருத்தத்தின் இறுதி வடிவம் எமக்கு உத்தியோகபூர்வமாக தெரியாது. இருந்த போதிலும், இது விடயத்தில் எல்லா இனக் குழுமங்களையும் உள்வாங்குவதற்கான நேரடி ஏற்பாடு ஒன்று இத்திருத்தத்தில் இல்லாமல் போய்விடுமோ? என்ற சந்தேகம் முஸ்லிம் அரசியல் நோக்கர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு சபையில்; புத்திஜீவிகள் பிரதிநிதித்துவம் செய்வது நல்ல விடயமே. அரசியல்வாதிகளை விட பல விடயங்களில் அவர்கள் நடுநிலையாகவும் சிறப்பாகவும் செயற்படலாம். ஆனால். புத்திஜீவிகளுக்கு மேலதிகமாக, ஒரு அறிவார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கம் வகிப்பது சிறந்தது என்ற கருத்தே மேற்படி நிலைப்பாட்டுக்கான அடிப்படையாகும். 

கடந்த காலத்தில் அங்கம் வகித்த இரு முஸ்லிம் புத்திஜீவிகளும்; தம்மால் முடியுமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள். எனவே இங்கு நாம் அவர்களை குறைமதிப்பீடு செய்யவில்லை. மாறாக, பிற சமூகங்களைச் சேர்ந்த பலர் அங்கம் வகிக்கின்ற ஒரு பெரிய சபையில் சில விடயங்களை பலமாக, அடித்துப் பேசுவதற்கு எம்.பி.க்கள் அதிகம் துணிவார்கள் என்பது யதார்த்தமாகும்.  

இந்த இ;டத்தில், நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம். அதாவது கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள், உப குழுக்களில் அங்கம் வகித்த முஸ்லிம் எம்.பி.க்கள் இந்த சமூகத்திற்காக எதனை அடித்துப் பேசினார்கள்? முஸ்லிம் பிரதிநிதிகளை இச் சபையில் நியமித்தால் மட்டும் சாதித்து விடுவார்களா? என்றால், அதற்கு விடையில்லை. 

ஆனால், சுயாதீன ஆணைக்குழுக்களில் நியமிக்கப்படும் உறுப்பினர்களுள் துறைசார்ந்த எமது சமூகத்தவரையும் உள்வாங்குவதற்கான அதிகாரம் அரசியலமைப்புப் பேரவைக்கு இருக்கின்றது என்றால், அப்பேரவையில் பலமான, அறிவார்ந்த (கவனிக்க…) முஸ்லிம் எம்.பி.யும் உள்ளடக்கப்படும் விதத்தில் யாப்புத் திருத்த சொல்லாடல்கள் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில், புத்திஜீவிகள் என்ற வகுதிக்குள் முஸ்லிம் எம்.பி.க்கள் நேரடியாக உள்ளடங்குவது சாத்தியமில்லை என்று வை.எல்.எஸ். ஹமீட் போன்ற சில ஆய்வாளர்கள் வலியுறுத்தி வந்தார்கள். 

ஆனால், தமக்கு எல்லாம் தெரியும், எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்ந்த பிறகே புத்திசாலித்தனமான முறையில் முடிவெடுக்கின்றோம் என்ற தோரணையில் செயற்படுகின்ற முஸ்லிம் தலைவர்களோ, எம்.பி.க்களோ உண்மையாகவே தாம் கூறுவதை தமது செயலில் காட்டவில்லை என்பதே கசப்பான வரலாறாகும்.  

அந்த வரிசையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தில் அல்லது ஏனைய ஏற்பாடுகளில் முஸ்லிம்களின் பொதுவான நலன்களை உறுதிப்படுத்வதற்காக முஸ்லிம் எம்.பி.க்கள் எந்தளவுக்கு ‘புத்திசாலித்தனமாக’ செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது, இத் திருத்தம் வர்த்தமானியில் பிரசுரமானதும் வெளிச்சத்திற்கு வரும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தேர்தல்கள் - முக்கிய அம்சங்கள்

2024-10-09 15:56:40
news-image

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில்...

2024-10-09 15:16:10
news-image

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

2024-10-09 15:10:57
news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-09 12:56:00
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39
news-image

இந்திய அணுகுமுறை மாறுகிறதா?

2024-10-06 16:02:59