பிரித்தானிய அதிசயம்

By Digital Desk 5

30 Oct, 2022 | 08:49 PM
image

கார்வண்ணன்

பிரித்தானிய அரசியலில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 45 நாட்கள் பிரதமராகப் பதவி வகித்த லிஸ் ட்ரஸ் பதவி விலகியதும், கொன்சர்வேட்டிவ் கட்சியில் அவருக்குப் போட்டியாக இருந்த ரிஷி சுனக் பிரதமராகப் பதவியை ஏற்றிருக்கிறார்.

இதற்கு முன்னர் பிரித்தானியாவில் பிரதமர்கள் பதவி விலகியிருக்கிறார்கள், அவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் பதவிக்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அவற்றுக்கு எல்லாம் அப்பால், ரிஷி சுனக் புதியதொரு வரலாற்றைப் படைத்திருக்கிறார். 

ஏனென்றால் அவர் பிரித்தானியாவைப் பூர்வீகமாக கொண்டவரோ வெள்ளையினத்தவரோ அல்ல. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தெற்காசிய இனத்தவர். ஒரு காலத்தில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை பிரித்தானியா ஆட்சி செய்தது. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கொண்ட  தேசமாக பிரித்தானியா விளங்கியது.

ஏனென்றால், கிழக்கே, நியூசிலாந்து, அவுஸ்தரேலியா தொடங்கி, மேற்கே கனடா வரை வியாபித்திருந்தது பிரித்தானிய சாம்ராஜ்யம்.

அவ்வாறான பிரித்தானிய சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பெரும்பாலான நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறி விட்டது.

இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவை இப்போது இந்தியர் ஒருவர் ஆளுகின்ற நிலை தோன்றியிருக்கிறது. இதுதான் காலத்தின் மாற்றம். ஜனநாயகத்தின் செழிப்பு. பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்றவுடன், இந்தியாவைப் போலவே இலங்கையில் இருந்தும் அவருக்கு வாழ்த்துச் செய்திகள் பறந்தன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது வாழ்த்துச் செய்தியில், தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர், பிரித்தானியாவை வழிநடத்துவார் என்பது பெருமைக்குரியது என்று குறிப்பிட்டு, அங்குள்ள ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயற்படுகின்றன என்று வியந்திருக்கிறார்.

ரிஷி சுனக்கின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

சந்திரிகா குமாரதுங்க பிரித்தானியாவின் ஜனநாயக நிறுவனங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருப்பது அவரது வாழ்த்துச் செய்தியில் பிரதிபலிக்கிறது.

அதேபிரித்தானிய அமைச்சரவையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜெயவர்த்தனவும் இடம்பெற்றிருந்தார் என்பது அவருக்கு இன்னும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கலாம்.

அதேபிரித்தானிய ஜனநாயக நிறுவனங்களையும் மரபுகளையும் பின்பற்றி உருவாக்கப்பட்டது தான், இலங்கை போன்ற  நாடுகளின் ஆட்சி மற்றும் நிர்வாக அமைப்புகள்.

ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும், உருவாக்கிக் கொண்ட அரசியலமைப்புகளும், நாட்டை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தி விட்டன.

11 ஆண்டுகள் சந்திரிகா குமாரதுங்கவும், அவரது தந்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மூன்றரை ஆண்டுகளும், தாய் சிறிமாவோ பண்டாரநாயக்க, 12 ஆண்டுகளும் என பண்டா குடும்பத்தின் கைகளில், மட்டும் நாடு 26 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்கிறது.

நாட்டை- நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை சீரழித்ததில், பண்டார குடும்பத்துக்கும், கணிசமான பொறுப்பு உள்ளது. 

அதுபோலவே சேனநாயக்க குடும்பம், ஜே.ஆர் குடும்பம், ராஜபக்ஷ குடும்பம் என 74வருட சுதந்திர இலங்கையின் வரலாற்றில், 4 குடும்பங்கள் மட்டும், 64 வருடங்கள் ஆட்சியில் இருந்திருக்கின்றன.

இதுதான் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் வறுமை. பிரித்தானிய அரசியல் பாரம்பரியங்களின் நற்பண்புகளை உதறித் தள்ளி விட்டு, பன்னாடை போன்று குப்பைப் பண்புகளைத் தான் இலங்கை தத்தெடுத்துக் கொண்டது.

நாட்டின் பொருளாதார நிலைக்கு மாத்திரமன்றி, அரசியல் மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புகளில் ஏற்பட்டிருக்கின்ற வெறுமை நிலைக்கும் அது தான் காரணம்.

தெற்காசியர்கள், ரிஷி சுனக்கின் நியமனத்தைப் பார்த்துப் பெருமைப்படுவது அபத்தம். ஏனென்றால், பிரித்தானியா விட்டுச்சென்ற ஜனநாயக பாரம்பரியங்களை இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சரியாக பேணவோ புரிந்து கொள்ளவோ இல்லை.

அவ்வாறு நடந்து கொண்டிருந்தால் எவ்வளவோ பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம். எவ்வளவோ பிரச்சினைகளில் இருந்து மீண்டிருக்கலாம். எவ்வளவோ முன்னேற்றங்களை அடைந்திருக்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்கியிருந்தால், தனிநாட்டுக்கான போராட்டம் தொடங்கியிருக்காது, அதனைச் சார்ந்த இழப்புகளும், அழிவுகளும் தடுக்கப்பட்டிருக்கும்.

அதற்காக வீணடிக்கப்பட்ட வளங்களும், இழக்கப்பட்ட உயிர்களையும் கொண்டு நாட்டை கட்டியெழுப்பியிருக்க முடியும்.

இன்றைக்கும் ஆட்சியில் உள்ளவர்களும் சரி ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களும் சரி இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுகின்ற நிலையில் இல்லை. பெரும்பான்மைச் சிங்கள மக்களும் அத்தகைய மனோ நிலையில் இல்லை. 

ரணில் ஜெயவர்த்தன பிரித்தானிய அமைச்சரான போது, அதற்காக பெருமைப்பட்ட சிங்கள மக்களால், இங்குள்ள தமிழ் மக்களுடன் அதிகாரங்களை, உரிமைகளை வழங்கி, உயர் பொறுப்புகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை.

பிரித்தானியர்கள், வெள்ளையின மேலாதிக்க மனோபாவத்தில் இருந்திருந்தால், ரிஷி சுனக்கினால் பிரதமராக வந்திருக்க முடியாது. 

ரணில் ஜெயவர்த்தனவினால் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கவோ, அமைச்சராகியிருக்கவோ முடியாது.

இவற்றை இனிமேலாவது சிங்கள மக்களும், ஆட்சியாளர்களும் புரிந்து கொண்டு செயற்பட முனைந்தால் தான் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களை சரியாக கட்டியெழுப்ப முடியும்.

அதேவேளை, ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழர்களைப் பொறுத்தவரையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

ஏனென்றால் அவர் முன்னர் கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்த போது, தமிழ் கொன்சர்வேட்டிவ் பிரதிநிதிகளுக்கு சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் தமிழ் கொன்சர்வேட்டிவ் பிரதிநிதிகளைச் சந்தித்த ரிஷி சுனக், இலங்கையில் நடந்த பாரிய அட்டூழியங்களுக்கு நீதி வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார்.

ரஷ்யர்கள் மீது பிரித்தானியா விதித்துள்ள தடைகளைப் போல, இலங்கை அதிகாரிகள் மீது இலக்கு வைக்கப்பட்ட தடைகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறான நிலையில் ரிஷி சுனக் பிரதமராகியிருப்பது, பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், 3 படை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடைகளை விதிக்கும் என்ற தகவல் வெளியானது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக உள்ள ஜெனரல் சவேந்திர சில்வா மீது அமெரிக்கா இதேவிதமான தடைகளை விதித்திருக்கிறது.

தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டவர்கள், அமெரிக்காவுக்கு செல்வதற்கு வீசா வழங்க மறுத்திருக்கிறது.

ஆனாலும், அண்மையில் கொழும்பு வந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை அதிகாரபூர்வமாக சந்தித்துப் பேசியிருந்தார்.

இதனால் அவர் மீது அமெரிக்க அதிகாரபூர்வ தடைகளை விதிக்கவில்லை என்பது உறுதியானது.

அமெரிக்காவை அடியொற்றி பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் இலங்கைப் படை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக கூறப்பட்ட போதும் இன்னமும் அது நடந்தேறவில்லை.

இந்தளவுக்கும், இலங்கை தொடர்பான அண்மைய தீர்மானத்தை கொண்டு வந்த பிரித்தானியா, பொறுப்புக்கூறல் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில், புதிய பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கம், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை தீர்க்கமாக முன்னெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதற்கு ரிஷி சுனக் அவசரப்படுவாரா என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம், விலை உயர்வு என்பன மக்களுக்கு பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரத்தை சீர்படுத்தவே தன்னை ஜனாதிபதியாக்கியிருப்பதாகவும், அதனை தான் நிறைவேற்றுவேன் என்று கூறியது போலத் தான், ரிஷி சுனக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கடுமையான முடிவுகளை எடுப்பேன் என்றும், அதற்காகவே தாம் பிரதமர் ஆகியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆக அவருக்கு முன் நிறையவே உள்நாட்டுப் பிரச்சினைகளும், நெருக்கடிகளும் இருக்கின்றன. அதனைத் தாண்டி அவர் இலங்கை விவகாரத்தை கையில் எடுப்பதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right