தப்பிக்கும் கறுப்பாடுகள்

By Digital Desk 5

30 Oct, 2022 | 08:50 PM
image

என்.கண்ணன்

“தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை கண்டுபிடிக்கும் பொறிமுறையோ தகுதிநீக்கம் செய்யும் அதிகாரமோ அல்லது போட்டியிடாமல் தடுக்கும் அதிகாரமோ, கிடையாது”

எல்லா மட்டங்களிலும், தண்டனையில் இருந்து தப்பிக்கின்ற நிலை ஊறிப்போன இலங்கையில், தார்மீக ரீதியில் பொறுப்பேற்றல் என்ற வழக்கம் கிடையவே கிடையாது.

ஜனநாயக அரசியலில் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொள்வது, முக்கியமானதொரு பண்பு.

முறையற்ற செயற்பாடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் வரும் போது, தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது, அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வது அல்லது அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று உறுதிப்படுத்தப்படும் வரை- விலகியிருப்பது ஒரு வழக்கம்.

ஆனால் இலங்கை அரசியலில் அறமும் இல்லை. இவ்வாறான பண்புகளும் இல்லை.

அவ்வாறான நிலை இருந்திருந்தால், 22 ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களில் ஒருவராவது முன்வந்து, தங்களின் பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகியிருந்திருப்பார்கள்.

22 ஆவது திருத்தச்சட்டத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதை தடுப்பதாகும்.

19ஆவது திருத்தச்சட்டத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்த போதும், பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்குள் கொண்டு வருவதற்காக, 20 ஆவது திருத்தச் சட்டத்தில் அந்த விடயம் நீக்கப்பட்டது.

இப்போது மீண்டும் பஷில் ராஜபக்ஷவை இலக்கு வைத்து, அந்த திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பஷில் ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை கொண்டவர், அவரைப் பாதுகாக்க முற்பட்டு தோல்வியடைந்திருக்கிறது பொதுஜன பெரமுன.

இப்போதைய பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட 10 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று ஊகங்கள் நிலவுகின்றன. அதனை பேராசிரியர் சன்ன ஜயசுமண, உதய கம்மன்பில, போன்றவர்கள் சுட்டிக்காட்டியும் உள்ளனர்.

ஆனால், எத்தனை இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. 

இவ்வாறான நிலையில் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளியே வராமல் பதுங்கியிருக்கின்றனர்.

ஏனென்றால் அது வெளியே தெரியவந்தால், அவர்களின் தற்போதைய பதவிகளுக்கும் வரப்பிரசாதங்களுக்கும் ஆப்பு வைப்பதாக அமைந்து விடும்.

22 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டதாக கொண்டாடுகின்ற தரப்புகளுக்குள்ளேயே கறுப்பாடுகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

அவர்களை இனங்கண்டு, பிரித்தறியத் தெரியாதது தான் இன்றுள்ள முக்கியமான பிரச்சினை. யார் யார் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், அவர்களை எப்படிக் கண்டறிவது, அதற்கு என்ன பொறிமுறை உள்ளது என்பது தான் சிக்கலான விடயமாக உள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் படி, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை வெளிப்படுத்துகின்ற எந்த ஏற்பாடும் கிடையாது.

இந்தியாவில் 1967இல் கொண்டு வரப்பட்ட கடவுச்சீட்டு சட்டத்தின்படி, இந்தியர்கள் வேறெந்த நாட்டிலும் குடியுரிமை பெற்றவுடன் அருகில் உள்ள இந்திய தூதரகத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால், இலங்கையில் அவ்வாறான சட்டம் இல்லை. அதனைப் பயன்படுத்தி இரண்டு கடவுச்சீட்டுகளை பலர் வைத்திருக்கிறார்கள் என்று, கூறியிருக்கிறார் உதய கம்மன்பில.

அவ்வாறான சட்டத்தை இலங்கையில் கொண்டு வரவேண்டும், அடுத்து, இரட்டைக் குடியுரிமை பெறுபவர்கள் பற்றி தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும், உடன்பாட்டை ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் பல நாடுகள் தங்களின் பிரஜைகள் பற்றிய தரவுகளை பகிர்ந்து கொள்வதை விரும்புவதில்லை. 

இவ்வாறான நிலையில் எவ்வாறு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களைக் கண்டுபிடிப்பது, பிரித்தறிவது, பாராளுமன்றத்தை விட்டு வெளியேற்றுவது என்ற குழப்பம் உள்ளது.

சபாநாயகர்  இவர்களை கண்டுபிடித்து, பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, அதற்கு சாத்தியமில்லை என்று சபாநாயகர் செயலகத்தினால் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினர்களின் வேட்புமனுக்களை பரிசீலனை செய்து, அவர்களை போட்டியிடத் தகுதியானவர்கள் என்று ஏற்றுக் கொண்டது தேர்தல்கள் ஆணைக்குழு தான்,

அவர்கள் தான், இதனை கண்டறிந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியிருக்கிறது.

ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழுவோ, தங்களுக்கு தகுதிநீக்கம் செய்யும் அதிகாரமோ அல்லது போட்டியிடாமல் தடுக்கும் அதிகாரமோ, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை கண்டுபிடிக்கும் பொறிமுறையோ கிடையாது என்று கூறுகிறது.

இந்த வேலையை குறிப்பிட்ட உறுப்பினருக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் மட்டும் தான், மேற்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தரப்பினராக இந்த விவகாரத்தில் இருந்து நழுவி மற்றத் தரப்பை கைகாட்டுகின்ற நிலையே காணப்படுகிறது.

19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னரும், பதவி விலகாமல் இருந்த, பிரதி அமைச்சர் கீதா குமாரசிங்கவுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட பின்னர் தான், அவர் தகுதியற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், இரட்டைக் குடியுரிமையைக் கைவிட்டு விட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கூட, தங்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு கடைசி வரை முயற்சித்துக் கொள்கிறார்கள்.

அதேவேளை, தற்போதைய பாராளுமன்றத்தில் 10 வரையான இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர் என்பதை, சம்பிக்க ரணவக்க நிராகரித்திருக்கிறார். ஆனால் அவரிடமும் அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது.

இவ்வாறான நிலையில் சமூக ஊடகங்களில், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று பல்வேறு பட்டியல்கள் உலாவுகின்றன. அவர்களின் உண்மையில் எத்தனை பேர் அவ்வாறானவர்கள் என்று தெரியாது.

இந்த நிலையில், இரட்டை குடியுரிமை கொண்டிராதவர்கள் கூட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவது, அபத்தமானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது பவ்ரல் அமைப்பு.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை அடையாளம் காண்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில், அவர்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களின் பதவிகளுக்கு ஆப்பு வைக்க முடியும்.

அதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அதற்கிடையில் தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விடவும் கூடும். ஏனென்றால், அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைக்கு வந்து விடும்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும், புதிதாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தவர்களும் தான், 22 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர விடாமல் தடுக்க முயன்றனர்.

இவர்களுக்குத் தான் இந்த திருத்தம் ஆபத்தானது. ஆனாலும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகினால் தவிர, குடியுரிமை பற்றிய தங்களின் நிலையை எடுத்துக் கூறினால் தவிர, இந்த விவகாரத்தில் தீர்க்கமான எந்த முடிவையும் எடுக்க முடியாது.

இவ்வாறான நிலையில் இருந்து பார்க்கப் போனால், பசிலை உள்ளே வர விடாமல் தடுத்து விட்டதை மட்டும் வெற்றியாக கருதலாமே தவிர, இரட்டைக் குடியுரிமைதாரிகள் அனைவரையும் தடுத்து விட்டதாக கொள்ள முடியாது.

தங்களின் குடியுரிமை நிலை பற்றிய இரகசியத்தை பேணுகின்ற வரைக்கும் அல்லது உரிய சட்டங்கள் கொண்டு வரப்படும் வரைக்கும், அவர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைவதை கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறான கோணத்தில் பார்த்தால், 22 ஆவது திருத்தம் எவ்வாறு வெற்றிகரமானதாகும்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right