களங்கத்தை துடைக்குமா இராணுவம் ?

Published By: Digital Desk 5

30 Oct, 2022 | 07:13 PM
image

சுபத்ரா

“தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகப்பாதுகாப்பு வரிகளை அறவிடும் அரசாங்கத்திடம் இருந்து மக்களின் உயிர், உணவு, பொருளாதாரம் மற்றும்  சமூகப் பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் கிடையாது”

வடக்கில் முன்னர், கடத்தலுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று, வல்வெட்டித்துறை. அங்குள்ளவர்களில் அநேகர், இந்தியாவில் இருந்து பொருட்களை கடத்தி வந்து இங்கு விற்பவர்களாகவும், இங்கிருந்து பொருட்களை அங்கே கொண்டு போய் விற்பவர்களாகவும் தான் இருந்தனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கட்டுப்பாடற்ற வர்த்தகம் அனுமதிக்கப்படாத அந்தக் காலகட்டத்தில், தீர்வையின்றி, வரிகளின்றி பொருட்களை பரிமாறிக் கொள்ளும் வர்த்தகம் இதன் மூலம் நடந்தேறியது.

இந்தியா அப்போது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு மாறவில்லை. உள்நாட்டு உற்பத்திகள் மட்டும் தான் அங்கு பெரும்பாலும் கிடைக்கும்.

இலங்கையில் இருந்து வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களை அங்கு கொண்டு சென்று கொடுப்பதும், இந்தியாவில் இருந்து புடைவைகள், துணிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதும் இந்த வணிகத்தில் முக்கியமானது.

அப்போது, அபின் போன்ற போதைப்பொருட்களும் கடத்தி வரப்பட்டன. ஆனால் அவை மட்டுப்படுத்தப்பட்டளவில் தான் இடம்பெற்றன.

கண்ணாடியிழைப் படகுகளும், வள்ளங்களும், இதற்காக அப்போது பயன்படுத்தப்பட்டன.

இந்த கள்ளக் கடத்தலைத் தடுப்பதற்காக தொண்டைமானாறில் ஒரு சிறிய இராணுவ முகாம் இருந்தது. 

வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையமும், சுங்க அலுவலகமும் இயங்கின. பருத்தித்துறையில் பொலிஸ் நிலையம் இருந்தது.

இதனை மீறித் தான் அப்போது, இந்த கடத்தல் வியாபாரம் இடம்பெற்றது. அங்கு அது ஒரு தொழிலாகவே இருந்தது. அதனை யாரும் சட்டவிரோதமான செயற்பாடாக பார்ப்பதில்லை.

வல்வெட்டித்துறையை வளப்படுத்தி செழிப்படையச் செய்ததில், இந்த வியாபாரத்துக்கு கணிசமான பங்கு இருந்தது.

இந்தக்கடத்தல் வியாபாரத் தொடர்புகள் தான், பின்நாட்களில், ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் அமைப்புகளுக்கு வசதியாக அமைந்தது. 

அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், தாக்குதல்களில் ஈடுபட்டு விட்டு, தப்பிச் சென்று தமிழகத்தில் மறைந்து கொள்வதற்கும், தமிழகத்தில் பயிற்சிகளை எடுத்துக் கொண்டு இங்கு வந்து செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்பாக இருந்தது.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எல்லா அமைப்புகளுக்கும், இந்த தொடர்பு கைகொடுத்தது.

ஆனால், 1990ஆம் ஆண்டு இந்தியப் படைகள், இலங்கையில் இருந்து வெளியேறியதும், வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளால் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், இனிமேல் யாரும் கடத்தல் தொழிலை முன்னெடுக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவரின் அந்த உத்தரவுக்குப் பின்னர், எல்லா கடத்தல் வியாபாரங்களும் முடிவுக்கு வந்தன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் வரை, யாருமே, கடத்தல் தொழிலை மேற்கொள்ளவில்லை. அது நூறு வீதம் கட்டுப்படுத்தப்பட்டது.

அதுபோன்று, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கஞ்சாவோ, போதைப்பொருட்களோ பயன்பாட்டில் இருக்கவில்லை. அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர்கள் முழுமையான வெற்றியைப் பெற்றிருந்தார்கள்.

இப்போது, நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

வல்வெட்டித்துறை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில், கஞ்சா கைப்பற்றப்படுவது தொடக்கம், போதைப்பொருட்களின் பயன்பாடு, விற்பனை, எல்லாமே அமோகமாக இடம்பெற்று வருகிறது.

இந்தியத் தொடர்புகளால் மாத்திரமன்றி வேறு வழிகளிலும் இப்போது போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்துக்குள் ஊடுருவத் தொடங்கி விட்டன.

கட்டுப்படுத்த முடியாதளவுக்கு நிலைமைகள் கை மீறிச் சென்று விட்டன. இந்த நிலைமைக்கு பொறுப்பு வாய்ந்த தரப்புகளின் அசமந்தப் போக்கே பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

வடக்கில் தமிழ் இளைஞர்களின் மீது திட்டமிட்டு போதைப்பொருட்கள் திணிக்கப்படுவதான ஒரு சந்தேகமும் குற்றச்சாட்டும், தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு பெரும் போராக உருவெடுத்தது வரலாறு.

அத்தகையதொரு நிலை மீண்டும் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காகவே திட்டமிட்டு வடக்கில் உள்ள இளம் சமூகத்தை குறிவைத்து, போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

இதற்குப் பின்னால், அரச பாதுகாப்பு இயந்திரங்களே இருப்பதாகவும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் கூட, அரச இயந்திரம், போதைப்பொருட்களின் பயன்பாடு, விற்பனை, கடத்தல் போன்றவற்றை முற்றாக கட்டுப்படுத்தும் பணியை முன்னெடுத்திருக்கவில்லை.

அண்மையில் வடக்கில் போதைப்பொருட்களின் பயன்பாடு, அவற்றினால் ஏற்படும் மரணங்கள், மற்றும் பாதிப்புகள், விற்பனை, கடத்தல் என்பன அதிகரித்துள்ளன.

இதுபற்றிய, ஊடகங்களின் கவனம், மற்றும் பொதுமக்களின் கடும் அதிருப்தி என்பன அதிகரித்துள்ள நிலையில், அரச பாதுகாப்பு இயந்திரம் ஏதோ தாங்களும் செயற்படுவது போலக் காட்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

பொலிஸாரால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள், பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இவ்வாறான நிலையில், பலாலியில் உள்ள யாழ்ப்பாண படைகளின் தலைமையகத்தில் இருந்து கடந்த வாரத்தில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

மாதகல் பகுதியில் சுமார் 100 கிலோ கஞ்சாவுடன், படகு ஒன்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பயன்பாடு, விற்பனை, கடத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவினால், விசேட நடவடிக்கை படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசேட நடவடிக்கை பிரிவே மாதகல் கஞ்சா கடத்தலை முறியடித்தது என்றும், அதுபற்றி மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

முகாம்களுக்குள் முடங்கியிருந்த இராணுவம் இப்போது போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு என்ற பெயரில், வெளியே வரப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு தான் இந்த கஞ்சா கடத்தல் முறியடிப்பு தகவல்.

கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்கள் பல இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு நடக்கவில்லை என்று கூறினால் அது தவறு.

பல இடங்களில் கடத்தல்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் முழுமையாக அல்ல. இராணுவம் வடக்கை கைப்பற்றிய பின்னர் தான், மிக மோசமான போதைப்பொருள் ஊருடுவல் சமூகத்துக்குள் நிகழ்ந்தது என்பது, நூறு வீத உண்மை. அதனை யாரும் மறுக்க முடியாது.

அவ்வாறாயின், வடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக என்ற பெயரில், இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?

பாதுகாப்பு என்பது தனியே விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பை தேடிக் கொள்வது மட்டுமல்ல.

ஒரு நாடு எல்லா வழிகளிலும், மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது.

அதற்காக தேசிய பாதுகாப்பு வரியை மக்கள் செலுத்துகிறார்கள். இப்போது கூடவே சமூக பாதுகாப்பு வரியும் அறவிடப்படுகிறது.

ஆனால், அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கவில்லை. உயிர் பாதுகாப்பு இல்லை, உணவுப் பாதுகாப்பு இல்லை, பொருளாதார பாதுகாப்பு இல்லை, சமூகப் பாதுகாப்பும் கிடையாது.

இந்த நிலையில்,  இராணுவம் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு, விற்பனை போன்றவற்றை முறியடிக்கும் செயற்பாட்டுக்காக ஒரு விசேட நடவடிக்கை பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது என்பது முக்கியமில்லை.

அதன் செயற்றிறனும் விளைவும் எவ்வாறானதாக இருக்கப் போகிறது என்பது தான் முக்கியமானது.

முடக்க நிலையில் உள்ள இராணுவத்தை வெளியே கொண்டு வருவதற்கான உத்தியாக இதனைக் கருதாமல், செயற்றிறன்மிக்க முயற்சியாக அமைய வேண்டும்.

அவ்வாறு செய்வதன் ஊடாக, வடக்கில் போதைப்பொருள் பயன்பாடு ஒழிக்கப்படுமானால், இத்தருணத்தில் விடுதலைப் புலிகள் எவ்வாறு இன்றைக்கும் நினைக்கப்படுகிறார்களோ அந்த நிலை ஏற்படும்.

இந்த நிலைக்கு அரச பாதுகாப்பு இயந்திரம் மறைமுக காரணியாக இருக்கிறது என்ற சந்தேகமும், குற்றச்சாட்டும், மறைந்து போகும். அந்த நிலையை, இராணுவத்தின் விசேட நடவடிக்கை படைப்பிரிவு ஏற்படுத்துமா? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54