(நா.தனுஜா)
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமது போராட்டத்தை மேலும் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகவும், இனிவரும் காலங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை தாம் மேலும் தீவிரமாக எதிர்க்கப்போவதாகவும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் போனமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும், காணாமல் போனோரில் பெரும்பான்மையானோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அல்லது அதற்கெதிரான குழுக்களாலேயே கடத்தப்பட்டார்கள் என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர் செய்திச்சேவையில் கடந்த வியாழக்கிழமை (ஒக் 27) வெளியான செய்தி பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளடங்கலாக எந்தவொரு உள்ளகப் பொறிமுறையின் ஊடாகவும், தமக்குரிய நீதி கிட்டாது என்றும் அப்பொறிமுறைகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் நீண்டகாலமாக கூறிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மகேஷ் கட்டுலந்தவின் இக்கருத்தினால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து கேசரியிடம் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி, இவ்வாறான ஒருவரை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவராக நியமித்ததன் மூலம் அரசாங்கம் எமக்கு எத்தகைய நீதியை வழங்க எதிர்பார்க்கின்றது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்னர் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளராக கடமையாற்றிய சாலிய பீரிஸ் மனிதாபிமானமுடைய சிறந்த மனிதராக இருந்தபோதிலும், அவரையே தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், 'இனவாதி' போன்று செயற்படும் தற்போதைய தவிசாளரை எவ்வாறு ஏற்றுக்கொள்வோம் என்றும் வினவினார்.
அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமது போராட்டத்தை மேலும் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகவும், தாம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் தீவிரமாக எதிர்க்கப்போவதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட லீலாதேவி தெரிவித்தார்.
மேலும், படையினரிடம் சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக சனல்-4இன் ஆவணப்படத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களின் தரவுகள் என்பன உள்ளபோது, அதற்குரிய ஆதாரங்கள் இல்லையென கூறுவது ஒருபோதும் ஏற்புடையதன்று என அவர் கண்டனத்தை வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM