(லியோ நிரோஷ தர்ஷன்)
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இணைக்கும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு கட்சியின் உயர் மட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களது விருப்பத்தின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், கட்சிகளின் பிரதான உறுப்பினர்கள் மாத்திரமன்றி, கிராமிய மட்டத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் முக்கிய செயற்பாட்டாளர்களையும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைப்பதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால தேர்தல்கள் குறித்து கருத்தில் கொண்ட நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருடன் இன்று சனிக்கிழமை (ஒக் 29) இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொகுதிகள் மற்றும் கிராமிய மட்டத்தில் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், எம்முடன் இணைந்து செயற்பட உள்ளவர்களுக்கு அது உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் எனவும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் குறித்து தேசிய அரசியல் மேடைகளில் பேச்சுக்கள் இடம்பெறுகின்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சியை வலுப்படுத்தல் மற்றும் புதிய கூட்டணிகள் குறித்து கலந்துரையாடி வருகின்றன.
ஐக்கிய தேசிய கட்சி, ஆளும் பொதுஜன பெரமுன, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என அனைத்து கட்சிகளுமே புதிய கூட்டணிகள் குறித்து திரைக்குப் பின்னால் பல்வேறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் செயல்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைய உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தனர்.
ஜனாதிபதி ரணிலின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு கடந்த வியாழக்கிழமை (ஒக் 27) சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
கம்பஹா தொகுதியில் தனது ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து செயற்படுமாறு பெரும்பாலானவர்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
அன்றைய தினம் பிற்பகல் ரவி கருணாநாயக்க மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM