சிறுபான்மைச் சமூகங்கள் உண்மையாக எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இந்த அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பன்முகப் படுத்தப்பட்ட மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தளர்பாடங்கள் மற்றும் மல்டி மீடியாக்கள் வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி  அன்வர் வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

இனவாதத்திற்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். ஒட்டு மொத்தமான இலங்கையர்கள் அத்தனை பேருடைய வாழ்வையும் முடக்க எத்தனிக்கும் இனவாத சக்திகளுக்கு இனி இந்த நாட்டில் எவரும் இடமளிக்கக் கூடாது. காணிகளை இழந்தவர்களாக மக்கள் காணப்படுகின்றார்கள்.

அதேவேளை மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் வழங்கப்பட்டிருந்தும் அது நடைமுறையில் இல்லை. அடுத்த 2017 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற பௌதீக வளப்பற்றாக்குறைகள் முற்றாக நீங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆயினும், பௌதீக வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அப்பால் மாணவர்களின் கல்வி அடைவை அதிகரித்துக் கொள்ள வழிவகை கண்டாக வேண்டும். புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் மாணவர்களின் அடைவுகளை அதிகரித்துக் கொள்ள திட்டம் வகுக்க வேண்டும். 

சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வி அறிவையும் பெற்றுக் கொள்வது தற்கால தொழினுட்ப உலகில் பெருந்துணை புரியும்.  தகவல் தொழினுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அந்த அறிவை ஆக்க பூர்வமான வழிகளுக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தொழில் வாண்மை ரீதியில் தொழினுட்ப அறிவைப் பெற்றுக் கொள்வது பற்றிச் சிந்திப்பது சமகாலத் தேவையாக உள்ளது. அடுத்த நிதியாண்டில் எமக்குக் கிடைக்கப் போகின்ற பாரிய நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு பயனுள்ள முறையில் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய சரியான திட்டமிடலை இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு பெரிய முதலீடுகள் வரும்பொழுது இந்த மாகாணம் அதிக அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ள முடியும். முதலீட்டு வரி விலக்கு அளிக்கின்ற ஒரு நிலைக்கு நாம் இந்த மாகாணத்தைப் பற்றிய அக்கறையை ஆளும் அரசாங்கத்திற்குக் கொடுத்ததன் விளைவாக அதிக நன்மைகள் கிடைக்கப் போகின்றன.

மனித வளங்களும் இயற்கை வளங்களும் சிறந்த அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான உறுதியான திட்டங்களை வகுத்துள்ளோம்.” என்றார்.

-அப்துல் கையூம்