(இராஜதுரை ஹஷான்)
உயிருக்காக போராடும் நோயாளியிடமிருந்து இரத்தத்தை எடுப்பதை போல அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரிகளை அதிகரித்துள்ளது.
வரி அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நெருக்கடிக்கு தீர்வு காண இயலாவிடின், இந்த அரசாங்கம் கௌரவமாக பதவி விலகுவது சிறந்ததாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
நாவல பகுதியில் வியாழக்கிழமை (ஒக் 27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் கூட பெரும் போராட்டத்தை எதிர்கொள்கிறார்கள்.
நாட்டின் பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் நோயாளியை போல் காணப்படுகிறார்கள்.
நோய்வாய்ப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியர் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போது அரசாங்கம் ஒரு வைத்தியரை போல் செயற்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையான நோயாளிக்கு அரசாங்கம் சிகிச்சையளிப்பதை விடுத்து, வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறை உள்ளது என குறிப்பிட்டுக்கொண்டு நோயாளியின் உடலில் இருக்கும் மிகுதியான இரத்தத்தை எடுப்பதை போன்று தான் இந்த அரசாங்கம் மனசாட்சி இல்லாத வகையில் பல்வேறு வரி அறவிடலை அமுல்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் மக்களின் நாளாந்த செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மொத்த சனத்தொகையில் 50 சதவீதமான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கடந்த செப்டெம்பர் மாத தரவுகளின்படி, பணவீக்கம் 73 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.
மறுபுறம் உணவு பணவீக்கம் 99 சதவீதத்தினாலும், போக்குவரத்து பணவீக்கம் 115 சதவீதத்தினாலும் உயர்வடைந்துள்ளது.
நாட்டு மக்கள் ஏதாவதொரு வழிமுறையில் கடனாளியாகியுள்ளார்கள். கடன் வட்டி வீதம் நூற்றுக்கு நூறு வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரி நூற்றுக்கு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெறுமதி சேர் வரி (வெற் வரி) 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி என்ற வி 2.5 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரியும் 50 சதவீதம் முதல் 100 சதவீதமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அனைத்து தரப்பிலும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயிருக்காக போராடும் நோயாளியிடமிருந்து இரத்தத்தை எடுப்பதை போன்று பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வரி அறவிடல் ஊடாக அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
வரி அதிகரிப்பு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தீர்வாக அமையாது. இந்த தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2015ஆம் ஆண்டு அமுல்படுத்தினார்.
2015ஆம் ஆண்டு 5.5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஐந்து வருட காலத்துக்குள் 2.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இம்முறையும் அதுவே நேரிடும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியான கொடுக்கல் வாங்கல்களை தவிர்த்தால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.
பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டம் ஏதும் கிடையாது. நாட்டு நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று குறிப்பிட்டோம்.
ஆனால், இந்த அரசாங்கம் மக்களின் இரத்தத்தை உறிஞ்சுதை மாத்திரம் பொருளாதார கொள்கையாக கொண்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. ஆகவே, இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM