உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி சட்டத்தரணி அம்பிகை கஜேந்திரன்

By Nanthini

27 Oct, 2022 | 04:51 PM
image

(மா. உஷாநந்தினி)

"மகிழ்வான சூழல்

கவிஞனை பொய் சொல்ல வைக்கும் !

துன்பத்தில் எழுந்த கவிதைகள்

நிஜத்தை பேசும்... வலியை பேசும்...!" 

கோண்டாவிலை சேர்ந்த கவிதாயினி, சட்டத்தரணி திருமதி. அம்பிகை கஜேந்திரன் 28 வருடங்களாக தமிழோடு பயணித்து வருகிறார். மிக இள வயதிலேயே தமிழின் மீதும் கவிதைகள் மீதும் ஈடுபாடு ஏற்பட்டதற்கான காரணத்தை கேட்டபோது,

"தமிழ் என் தாய்மொழி என்பதால் அதனோடு இயல்பான காதல். கைக்கிளையாகவோ (ஒருதலை) பெருந்திணையாகவோ அன்றி, அன்பின் ஐந்திணையாய் அமைந்த காதல்.

அந்த தாய்மொழியை தாய்ப்பாலுடன் தந்தவள் என் தாய்தான். அவரும் ஒரு எழுத்தாளர். அவர் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பத்திரிகைகளில் பல ஆக்கங்களை எழுதியும், அவர் ஒரு புத்தகத்தை கூட வெளியிட்டதில்லை" என்றார்.

இன்றும் பல பத்திரிகைகளில் கட்டுரைகள், சிறுகதைகள், சட்டம் சார்ந்த கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்.  

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் சட்டம் சார்ந்த கட்டுரைகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் 'நீதம்' எனும் சஞ்சிகையிலும், கொழும்பு சட்டக் கல்லூரியால் வெளியிடப்படும் 'நக்கீரம்' எனும் நூலிலும் தொடர்ந்து எழுதுகிறார்.

'போதிமரக் குயில்' கவிதை நூலுக்குப் பிறகு அம்பிகை பஞ்சலிங்கம் எனும் பெயரில் இவர் நயமான தமிழின் ஊடாக மாற்றுச் சிந்தனைகளை அள்ளித் தெளித்து எழுதிய கவிதைகளின் தொகுப்பு, 'அநேகி'. இதிலுள்ள 30 கவிதைகளையும் வாசிக்கையில், தோன்றிய சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடியபோது கவிதாயினி பகிர்ந்துகொண்ட விடயங்கள் இனி...

உங்களுக்கு கவிதைகளில் ஏன் அத்தனை விருப்பம்?

துன்பக்கடலை கடப்பதற்கு கையில் கிடைத்த துடுப்பு கவிதையே. கவிதை எனக்கான ஊடகம். எனது எல்லா வகையான எண்ணங்களையும் கவிதை மொழிநடையை பயன்படுத்தி நாசூக்காக நாகரிகமாக வெளியரங்கப்படுத்த முடிகிறது. ஆதலால், கவிதை மீது கூடுதல் மோகம்.

'நமக்குத் தொழில் கவிதை' என்கிற எனது  கவிதையை நான் இப்படி முடிக்கிறேன்.

"நான் இறந்த பின்பு என்

அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்!

எரிகையில் நான் எழுதிய

எழுத்துக்களின் சிதறல்களை

கட்டாயம் கண்டுபிடிப்பீர்கள்"

அந்தளவுக்கு கவிதை என்னை ஆள்கிறது. கவிதைகளில் எனக்கு பிடிப்பு வர காரணமே, கவிதையின் வடிவம்தான். ஒரு சொல்லுக்குள் தான் சொல்ல வரும் ஆயிரம் கதைகளை கவிதை கொண்டிருக்கும்.

சுருங்கச் சொல்லின், விளங்கவைக்கும் ஆற்றல் கவிதைக்கு மட்டும்தான் இருக்கிறது.

உங்கள் கவிதைகளை வாசிக்கிறபோது எம்மில் பல ஊகங்கள்... (உதாரணமாக, 'அநேகி' கவிதை. வில்லி, தூயவள், கவிமகள் கதாபாத்திங்கள்) கவிதைக்குள் ஒரு கவிஞராய் பேசுகிறபோது உங்களை நீங்களே பல ரூபங்களாய் பிரதிபலிப்பதாக தெரிகிறதே... அப்படியா?

எந்தக் கவிதையாக இருப்பினும், கவிஞர் தன்னை எப்படியும் வெளிப்படுத்திவிடுவார்.

'அநேகி' நூல் 'மகடூஉ' வகையானது என்கிறீர்கள்.... 'மகடூஉ' என்பதென்ன?

நூல்களை 'ஆடூஉ', 'மகடூஉ' என்று வகைப்படுத்தலாம். ஆண்தன்மையான நூல்கள் 'ஆடூஉ' நூல்கள் என்றும், பெண்தன்மையான நூல்கள் 'மகடூஉ' நூல்கள் என்றும் சொல்லப்படுவது வழமை. 'அநேகி' முழுக்க முழுக்க ஒரு பெண் பேசுவதாகவே அமைந்துள்ளது. அதனாலேயே இதை 'மகடூஉ' நூல் என்கிறேன்.

'அநேகி' ஓர் உரைகவி தொகுப்பு. உரைகவி என்பது உங்களுக்கே உரிய கவிநடையா?

உரைநடை தொகுப்பு எனும் வடிவம் தமிழுக்கு புதிதல்ல. இலக்கியம்  ஜனரஞ்சகமாக இருக்க வேண்டுமெனில், உரைநடை வடிவம் தேவை. அதேவேளை இலக்கியம் மற்றும் தமிழின் தரத்தையும் பேணவேண்டும். அதற்காக இறுக்கமான மொழிநடையை கொஞ்சம் பயன்படுத்தலாம். உரை வடிவப்பாங்கு பாரதியின் கவிதையிலும் காணப்படுகின்றது. பாரதியை நேசிப்பதால் அவரின் பாங்கு என்னில் இருப்பது இயல்புதானே.

'அநேகி' என்கிற வார்த்தையை பற்றி விளக்கமாக சொல்லுங்கள்...

'அநேகி' அநேகத்துவம்... பன்மைத்துவம். ஒரு மனிதனுக்குள் நிறைந்திருக்கும் பல்பரிமாணத் தோற்றம்.  

தனி மனிதன் என்பவன் வெறுமனே ஜடத்தாலும் உயிராலும் அணைந்த கூட்டு அல்ல. அது எல்லோருக்கும் பொதுமைப்பாடு. ஆனால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படும் உணர்ச்சித் ததும்பல்களே தனித்துவமானவை. அவற்றை வெளிப்படுத்தும் விதமே 'அவனை' அடையாளப்படுத்துகின்றது. எனினும், அந்த ஒருவனுக்குள்ளும் அநேகம் பேர் வாழ்கின்றார்கள் என நான் ஆழமாக நம்புகிறேன்.

இந்த நூலின் சில கவிதைகளில் கவிஞர் என்பவர் தோல்வி, நிராகரிப்பு, தனிமை, துயரம், பொறுமை, நிதானம், தெளிவு... என்கிற மன விம்பங்களில் காட்டப்படுகிறார். யதார்த்தத்தில் இதை எப்படி பொருத்திப் பார்க்கிறீர்கள்?

'அநேகி'யை என் இதயத்தின் மொழிபெயர்ப்பாகத்தான் கருதுகிறேன். காலச்சாகரத்தில் தோல்விகள் என்னை தழுவிக்கொண்டபோது என் கைகளில் கிடைத்த துடுப்பாக போற்றுகிறேன்.

தோல்வி, நிராகரிப்பு..... போன்றன எம் வாழ்வியலில் ஓர் அங்கம்தான். இவற்றிலிருந்து வெளிவர பலருக்கும் ஏதோவொரு வழி கிடைத்துவிடுகிறது.

சிலர் வழி தெரியாமல் துன்பப்படுகின்றனர். சிலருக்கு இசை நல்ல மருந்து. அதேபோல் கவிஞர்கள் ஆயுதமாக ஏந்திக்கொள்வது கவிதையைத்தான். இவற்றை கருப்பொருளாக வைத்து கவிதை புனைவதால் ஒவ்வொரு வாசகரும் தனக்குள் நிகழ்ந்ததாய் வாசித்துக்கொள்வார். திருப்தியுறுவார். சிக்கல்களில் இருந்து மீள முயல்வார்.

இந்த சமூகக் கரிசணையோடே கவிஞர்கள் யதார்த்தத்தை நாசூக்காக வெளிப்படுத்துகிறார்கள்.

ஒருவருக்குள் இருக்கும் 'அநேகரை' அந்த ஒருவர் இனங்காண ஏதும் வழியுண்டா?

தன்னை அறிய முயல்பவர், தன்னுடைய எண்ண ஓட்டங்களை கண்காணிப்பவர், தன் மீது கரிசணை கொண்டவர், சுயவிரும்பி... இப்படி இருப்பவர்களால் இலகுவாக தனக்குள் வாழும் பலரை கண்டுகொள்ள முடியும்.

ஆக, உங்களை கவனியுங்கள், உங்களை ரசியுங்கள், உங்களை உணருங்கள். அநேகத்தை இலகுவாக இனங்காணலாம்.

'இருதாரம்' கவிதையில் துயரம், மகிழ்ச்சி ஆகிய இரண்டை பற்றி சொல்கிறீர்கள். துயரமும் கண்ணீருமே ஒருவருக்குள் கவிதையை பிறப்பிக்கிறது... பூரணப்படுத்துகிறது என்றால், சோக ரசமே கவிதைகளை (படைப்புகளை) சிறப்பிக்கும் என்பது உங்கள் கருத்தா?அழுது வடிப்பது மட்டுமே சிறந்த படைப்பாக இருக்குமா? ஏன், இன்பகரமான சூழல் கவிஞர்களுக்கு பொருந்தாதா?

இன்பகரமான சூழல் கவிஞர்களுக்கு பொருந்தாது என்றில்லை. ஆனாலும், இன்பத்தை விட துன்பம் சிறந்த அனுபவத்தை வழங்கிவிடும்.

"உலகம் வியந்து போற்றும் எம் கவிதைகள் எல்லாம் எம் துயர காலங்களில் கண்ணீரோடு எழுதப்பட்டனவே" என்று ஷெல்லி கூறுவார்.

மகிழ்ச்சியான சூழல் கவிஞனை பொய் சொல்ல வைக்கும். உயர்வு நவிற்சியணிகளை அதிகம் கையாள வைக்கும்.

"கவிதைக்கு பொய்யழகு" எனும் வாக்கியம் இன்பமான தருணத்தில் படைத்த கவிதைகளுக்கே பொருந்தும்.

ஆனால், துன்ப காலத்தில் எழுந்த கவிதைகள் நிஜத்தை பேசும். வலியை பேசும். பூசி மெழுகாத மொழிநடையுடன் கவிதை உருவாகும். கவலைகளிலிருந்து வெளியேற அதுவே பாலமாகவும் அமையும்.

ஒரு சினிமா பாடலை கேட்கிறோம்..... ஒரு மனிதன் இன்பமாக இருக்கும்போது பாடலின் இசையையும், துன்பத்தில் இருக்கும்போது பாடலின் வரிகளையும் ரசிப்பான்.

பாடலின் வரி என்பது கவிதைதானே... வாசகர்களும் சோக ரச கவிதைகளையே அதிகம் நேசிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கவிதைகளுக்குரிய சொல்லாடல் பாங்கினை கையாள எங்கு, யாரிடம் கற்றீர்கள்?

நல்ல நூல்களை வாசிப்பதனூடாக கற்றுக்கொண்டேன். மரபிலக்கியங்கள் பல புதிய சொற்களை அறிமுகப்படுத்தின. நாகரிகமான மொழிநடையை கற்பித்தன.

சிறு வயது வார்த்தை விளையாட்டுக்கள் எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, 'கோவிந்தன் கோபித்துக்கொண்டு கோண்டாவிலில் இருந்து கோப்பாய்க்கு கோபத்துடன் போனான்' என எதுகை மோனையுடன் வாக்கியங்கள் படைக்கும் ஆற்றலை விளையாட்டு மூலமாக எனக்குள் கொண்டுவந்தவர் எனது அம்மாதான். நான் வசனங்களை பேசத் தொடங்கிய காலத்திலேயே அவர் என்னோடு வார்த்தைகளால் விளையாடியுள்ளார். அதனால்தான் என்னில் சொற்களுக்கு பஞ்சமின்றிப் போனது.

தனிமையை, அதனூடாக தற்கொலையை நாடும் ஒரு மனிதரின் மனநிலையை உணர்வு பொங்க கவிதைகளில் கொண்டுவருகிறபோது, அக்கவிதை சுவைஞரின் (வாசகர்) மனதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

எந்தவொரு கவிதையும் வாசிப்பவரின் மனதில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். ஆனால், எனது கவிதைகளை ஆழமாக வாசித்தால், அவை தற்கொலை உணர்வை வெற்றிகொள்ளும் மனோநிலையை வாசகர்களிடத்தில் விதைக்கும் என்றே நம்புகிறேன்.

'மரணத்துக்கு மடல்' என்ற கவிதை கூட ஞானநிலையில் மரணத்தை அழைப்பதாக இருக்கிறதே தவிர, மரணத்தை தூண்டுவதாக இல்லை.

"விண்ணப்பிக்காமலே கிடைத்தது இந்த மனிதப்பிறவி" என்று நான் குறிப்பிடுவது 'ஞானநிலையில்' என்பதை ஒரு நல்ல வாசகர் புரிந்துகொள்வார்.

"முகமூடிகளற்ற என் முகம் மிகவும் பயங்கரமானது.....", "நான் எனக்குள் சும்மாதான் இருக்கிறேன்...", "புத்தகம் என்ற சொல்லில் அறிவு இல்லை, தத்துவம் என்ற சொல்லில் தெளிவு இல்லை..." -மிக விசித்திரமாக சிந்திக்கின்றீர்களே... எப்படி?

எனது கவிதைகள் தன்னுணர்வு சார்ந்தவை. ஒரு கவிஞர் தன்னை முழுமையாக உணர முயல்வார்.

நான் எவ்வாறு இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? எப்படி பயணிக்கிறேன் போன்ற என் உணர்வுகளில் நான் கூடிய கவனம் செலுத்துபவள். கிட்டத்தட்ட ஒரு தியான நிலைதான்.

இந்நிலையில் என் உணர்வுகளை அப்படியே வெளியில் படம்பிடித்துக் காட்ட முயல்கிறேன்.

ஒரு வேலையுமின்றி தனியிடத்தில் இருக்கும் எனது எண்ண ஓட்டங்களும் நடவடிக்கைகளும் எனது உள்ளுணர்வுகளும் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் கவனிக்கிறேன்.

ஆனால், தோன்றும் எண்ணங்களை தணிக்கை செய்துவிட்டே மற்றவர்களுடன் நாம் பழகுகிறோம். அதனால் எனது முகம் மட்டுமல்ல, உங்கள் எல்லோரினது முகங்களுமே அப்படித்தான்...

முகமூடிகளோடு திரியாமல் அதை நீங்கள் கழற்றி வைக்கும்போதே உங்களுக்கு புரியும், உங்களது 'நீங்கள்' எத்தகைய பயங்கரமானவர்கள் என்று.

மேலும், என்னுடன் நான் நடத்தும் உரையாடல்களே என்னை கண்டுபிடிக்க வைத்தன. நல்ல ஆழமான வாசிப்பும், கற்றதை எனக்குள் ஆராயும் திறனுமே இதுபோன்ற கவிதைகளை படைக்க வைக்கின்றன.

கனவை, மரணத்தை, கடவுளை, சில சமயங்களில் நம்மை நாமே கேள்வி கேட்பதும் ஆராய்வதுமான தன்மையை கவிதைகளில் அவதானித்தேன். எல்லை கடந்த சிந்தனையை அகலப்படுத்துவது இதுபோன்ற கேள்விகள் தானோ? கேள்வி கேட்பது எத்தனை முக்கியமானது என நினைக்கிறீர்கள்?

எல்லை கடந்த சிந்தனைகள்தான் அறிவையும் விசாலப்படுத்தும். கேள்விகளை தொடுப்பதால் தெளிவு கிடைக்கும் என்பதால் 'கேள்வி கேட்பது' மிக முக்கியம். ஞானம் கிடைக்க வேண்டுமெனில், கசடு அறும் வரை 'கேள்வி கேட்க' வேண்டும்.

ஈழத்து மகாகவி, இந்திய மகாகவி, சித்தர்களின் சாயலில் சில வரிகளை புகுத்தியிருக்கிறீர்கள். மரபு இலக்கியங்களை அதிகமாக வாசிக்கும் பழக்கம் உண்டோ?

ஆம். மரபு இலக்கியங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துபவள் நான். சிறு வயதிலிருந்து பாரதியின் கவிதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

'செந்தமிழ் தேறாதோன் கவிசெய்தல் நகைப்பூட்டும் செயல்' என சங்கமருவிய காலப் புலவன் எழுதிய பிறகும் தமிழை சரிவர கற்காமல், மரபு இலக்கியங்களை சரிவர மனதில் இருத்தாமல், கவிதை பாடினால், அது நிலைக்காது என நம்புகிறேன்.

சில இக்கால கவிவரிகள்... வெறும் வேரற்ற மரங்களாய், சில பொழுது இன்பம் துய்க்கும் மின்னலாய் மறைந்துவிடும்.

ஆழமான இருத்தல் மக்கள் மத்தியில் கிடைக்க வேண்டுமெனில், மரபு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

மரபில் புதுமை செய்யலாம். சித்தர்களின் வாக்கியங்கள் சில எனக்குள் ஆழமாக பதிந்திருக்கின்றன. அவை உண்மையும் கூட.

நாம் நம்புவனவற்றை தானே படைக்கமுடியும். ஆதலால்தான் இவ்வாறான கவிதைகள் தோன்றுகின்றன போலும்.

உங்களுக்கு பி‍டித்த கவிஞர், எழுத்தாளர் யார்?

கவிஞர்களில் தனிப்பட யாரையும் கூறிவிட முடியாது. மு.மேத்தா, தபுசங்கர், வைரமுத்து, கலீல் ஜிப்ரான், ஷெல்லி என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் படைப்புக்களை அடிக்கடி வாசிப்பேன். எழுத்தாளர்களில் கல்கியை தான் பிடிக்கும்.

கம்பன், வள்ளுவன், ஒளவையார், பாரதி என்று இக்காலத்தவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத பழநெடுங் கவிஞர்களை என்றும் மதிக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right