காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

By Nanthini

26 Oct, 2022 | 04:27 PM
image

காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 89ஆவது ஜெயந்தி இன்று (ஒக் 26) உலகெங்கும் உள்ள அவரது சீடர்களாலும் பக்தர்களாலும் கொண்டாடப்படுவதற்கான ஒழுங்குகளை இலங்கை காயத்ரி பீடம் ஏற்பாடு செய்துள்ளது. 

காயத்ரி சித்தர் பெருமானின் பணிகளுள் மட்டக்களப்பு காயத்ரி பீடத்தில் அமைந்துள்ள சப்த ரிஷி மண்டலம் பிரதானமானது. 

உலகில் வேறெங்கிலும் சப்த ரிஷிகளுக்கான மண்டலம் இற்றை வரை அமைக்கப்படவில்லை. 

இங்கு சப்த ரிஷிகள் (7 ரிஷிகள்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தியானமே இங்கு பிரதானமானது. காயத்ரி சித்தர் பெருமான் தனது பக்தர்களின் ஆன்மிக ஈடேற்றத்துக்காகவே இதனை செய்திருந்தார். 

இலங்கையில் வாழ்ந்து வழிகாட்டிய சில ஆன்மிகவாதிகள் மக்களின் ஷேமத்துக்காக பலவிதமான காரியங்களை இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று செய்திருக்கிறார்கள். 

கண்டி மாவட்டத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் காளிமுத்து சந்தனம்மா தம்பதிகளுக்கு 1933 ஒக்டோபர் 26ஆல் பிறந்த முருகேசு சுவாமிகளும் அவர்களில் ஒருவர் என்றால் அதில் தவறு இருக்க முடியாது. அவரது 89ஆவது ஜெயந்தி தினம் இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அவரது பக்தர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. 

உண்மையில் அவருக்கென சீடர்கள் யாருமில்லை. அவர் யாரையும் சீடர்களாக வரித்துக்கொள்ளவுமில்லை. அவரது பக்தர்களாக ஆயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் இருக்கிறார்கள்.

அவரது சமாதி தினம் 2007 செப்டெம்பர் 24 ஆகும். உண்மையும் விசுவாசமும் நிறைந்த பக்தர்கள் தனது குருநாதர் சமாதியடைந்துவிட்டதாக கூறவோ, எண்ணவோ மாட்டார்கள். 

குருநாதர் என்றைக்கும் அவர்களோடு வாழ்ந்துகொண்டிருப்பதாகவே எண்ணுவார்கள். அந்தளவுக்கு அவர்கள் தமது குருவின் மீது பக்தி வைத்திருப்பர். காரணம், அவர்களது நெஞ்சத்தில் தமது குருவை மனோ ரீதியாக பிரதிஸ்டை பண்ணியிருக்கிறார்கள். 

அவ்வாறு மனதோடு வாழும் குருவுக்கு ஒரு விழா என்றால், அதுதான் அவரது 89ஆவது ஜெயந்தி தினம்.

காயத்ரி சுவாமி... 

12 வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றவர். அந்த சிறு வயதில் கூலி வேலைக்கு  செல்லுமளவுக்கு வறுமையும் பசியும் பட்டினியும் அவரது குடும்பத்தை வாட்டி வதைத்திருந்தது. 

பின்னர் அவர் இள வயதிலேயே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். அதனை பின்னாளில் "குருதான் பக்தனை தேடி கண்டுபிடிப்பார். பக்தனால் குருவை கண்டுபிடிக்கவே முடியாது" என சுவாமி பல தடவை கூறியிருக்கிறார். 

இதே கருத்தை உமாபதி சிவாச்சாரியாரும் திருவருட்பயனிலே "பார்வையென மாக்களை பற்றிப் பிடித்தற்காம் போர்வையெனக் காணார் புவி” என கூறியிருக்கிறார்.

குருநாதர் தான் சந்தித்த சம்பவத்தை ஒரு கோட்பாடாக மாற்றி கூறுவதுண்டு. 

அவர் கூலி வேலை செய்துவந்தபோது, ஒரு பெரிய மகான் தன்னை சந்தித்து தனக்கு சில மந்திரங்களை உபதேசித்ததாகவும், அவர் விக்னேஸ்வரப் பெருமானை துதிப்பதற்கான துதிகள் அடங்கிய புத்தகமொன்றை கையளித்ததாகவும் விபரிப்பார். இச்சம்பவமே குருநாதர் தன் சீடனைத் தேடி வந்த நிகழ்வாகும். 

அது அவரது ஆன்மிக வாழ்வு தோன்றுவதற்கான  வித்தாகிவிட்டது. அது மரமாக வளர்ந்து ஏராளமான கனிகளை இன்று வரை தந்துகொண்டிருக்கின்றது. அதனை ஆயிரமாயிரம் பக்தர்கள் பறித்து சுவைக்கிறார்கள். அந்த ஆன்மிகக் கனிக்கு ஈடிணை ஏதுமில்லை.

ஆன்மிகம் என்பது ஓர் இலகுவான பாதையல்ல. அது கரடுமுரடானது. வலிகளையும் சோதனைகளையும் தரவல்லது. அவற்றை தாண்டி சைவ சித்தாந்தம் கூறும் சமயக் கோட்பாடுகளோடு வாழ்பவர்களுக்கே ஆன்மிகம் தித்திக்கும். சுகம் தரும். இது நிஜம்!

மனதில் "தீய எண்ணங்கள் ஏதுமின்றி, அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், தீயது செய்யாமல் மனச்சாட்சிக்கு பயந்து வாழ்தலும் ஆன்மிகம்தான். இதையே வள்ளுவர் "மனத்தின்கண் மாசிலன் ஆதல்” என்கிறார்.

நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் இன்போடும் பரிவோடும் பேசுதல், எல்லோருக்கும் நம்மால் முடிந்த வரை நன்மைகளையே செய்தல், அனைவரையும் மரியாதையுடனும் கௌரவ குறைவின்றியும் நடாத்துதல், எதற்குமே பேராசைப்படாமல் இருத்தல் என்பன அவற்றுள் சில. இந்த குணங்கள் நம்மில் குடிகொண்டிருக்க வேண்டும்.

அதனை இப்படியும் கூறலாம். நமது வலது கையில் நம்மால் தோற்றுவிக்கப்படும் செயற்பாடுகள் இருக்கின்றன என வைத்துக்கொண்டால், அந்தச் செயற்பாடுகள் தரும் விளைவுகள் நமது இடது கைக்கு வந்து சேரும். இது பிரபஞ்சத்தின் ஒரு நியதி. அது எல்லோருக்கும் பொதுவானது. இதனை யாரும் மறுப்பதற்கில்லை. 

நாம் வலது கையால் செய்யும் செயற்பாடுகளை  தவறின்றி மனசாட்சிக்கேற்ப செய்யும்போது இடது கை வெற்றியால் நிரம்பி வழியுமல்லவா! இதனையே 'நமது வாழ்வுக்கு நாமே பொறுப்பு' என்ற தத்துவம் விளக்குகிறது.

எந்த காரியத்தை செய்தாலும், அதனூடாக எத்தகைய விளைவு ஏற்படினும், அவை யாவுமே இறைவனால் ஏற்படுகிறதென நினைத்து, அந்த இறைவனுக்கு நமது நெஞ்சின் ஓர் ஓரத்தில் இடம் ஒதுக்கி, அவரை நிலைத்து நிற்க வைக்கிறோமா என்பதை நாமாக பரிசீலித்துப் பார்க்க வேண்டும். 

ஒரு செயல் நடைபெற்று முடிந்தவுடனாவுதல் அந்தச் செயலுக்கு இறைவனே காரணம் என்பதையாவது நினைத்து, அதையொட்டி அந்த இறைவனுக்கு சமர்ப்பணம் செய்கிறோமா? நன்றி செலுத்துகிறோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

இவ்வாறான செயற்பாடுகளை நாம் கடைபிடித்து வாழ்ந்து வந்தாலே அது ஆன்மிகமாகிவிடும்.

இறைவனை அடைவதற்கு அல்லது இறைவனால் நாம் ஆட்கொள்ளப்படுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. ஆன்மிகத்திலும் பல சூட்சுமங்கள், நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றை புரிந்துகொண்டு நாம் செயற்பட வேண்டும்.

அப்பர் சுவாமிகள் நாற்குரவர்களுள் ஒருவர். அவர் இறைவனுக்கு பணிசெய்வதில் சிறந்து விளங்கியவர். அவர் இறைவனை தன் நெஞ்சத்தில் நிலைபெறுமாறு அழைக்கிறார்.

நிலைபெறுமா றெண்ணுதியே நெஞ்சே நீ வா

நித்தலும் என் பிரானுடைய கோயில்புக்கு

புலர்வதென் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு

பூமாலை புனைந்தேற்றி புகழ்ந்துபாடி

தலையாரைக் கும்பிட்டு கூத்தும் ஆடி

சங்கரா சய சய போற்றியென்றும்

அனல் புனல்சேர் செஞ்சடையம் ஆதியென்றும்

ஆரூரா என்றென்றே அலறா நில்லே”

(அப்பர் தேவாரம்)

இதுவே 'சரியை' வழிபாடென நமது சமயம் உணர்த்துகிறது. 

சரியை வழிபாட்டிலே புறக்கிருத்தியங்களே நடைபெறுகின்றன. அகக் கிருத்தியங்கள் இடம்பெறுவது குறைவு அல்லது முற்றிலும் இல்லை.

புலர்வதன் முன் கோவிலை சுத்தம் செய்தல், பூமாலை புனைதல், நந்தவனம் அமைத்தல் என அவை விரிவுபடலாம்.

அடுத்ததாக இருப்பது 'கிரியை' வழிபாடாகும். இது முன்னையதிலும் சற்று மேலானது. இதிலே சரியை வழிபாட்டில் இருக்கும் அம்சங்களோடு மனமும் ஒன்றிக்கும். மந்திரங்களை உச்சரித்தல். பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கும் தெய்வங்களை தொட்டு புனிதப்படுத்தல் என்பன இதற்குள் அடங்கும். 

இவ்வாறு செய்யும்போது இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதான உணர்வொன்று ஏற்படும்.

அடுத்து 'யோகம்'. யோகம் என்றால் 'ஒன்றித்தல்'. இங்கே சாதகன் தான் இறைவனோடு ஒன்றித்துவிடுகிறான். இது சரியை, கிரியை வழிபாடுகளிலிருந்து சற்று வேறுபடுவதோடு, உயர்ந்தும் நிற்கிறது.

அடுத்து ஞான மார்க்கம். இது முன்னைய மூன்று படிகளிலிருந்தும் முற்றிலும் வித்தியாசமானது. சரியை, கிரியை, யோகம் ஆகியன இறைவனை நெருங்கச் செய்தன.

அவ்வாறான படிகளை கடந்துவந்த பிறகு 'ஞான' மார்க்கத்துக்குள் இறங்கிவிட வேண்டும். இங்கே சாதகன் அகத்திலும் புறத்திலும் இறைவனை காண்கிறான். 

தனது செயற்பாடுகள் அனைத்துக்கும் இறைவனே காரணம் என நம்புகிறான். இந்த நிலை அவனும் இறைவனும் ஒன்றிக்கும் நிலையாகும். இங்கே இறைவனையும் சாதகனையும் பிரித்துப் பார்க்கவோ வேறுபடுத்தவோ முடியாது.

'அட்டாங்க யோகம்' இதனையே இன்னும் சில படிகள் மேலே சென்று விளக்குகிறது. அவை 8 விதமான படிமுறைகளைக் கொண்டது. முழுக்க முழுக்க ஆழமான பயிற்சிகளை உள்ளடக்கியது. 

இந்த உலகில் வாழ்பவர்கள் உலகுக்கான கடமைகளோடு இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கி வெற்றி காண்பது சிரமமானதே. வெற்றி காண முடியாதென கருதிவிடக்கூடாது. இதற்குள் இறங்கி, மூழ்கி, வெற்றி கண்டவர்கள் அனேகர். அவர்களுள் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளும் ஒருவர். அவர் தன்னை காயத்ரி மாதாவாக,  சித்தர்களின் தோழனாக மாற்றிக்கொண்டார் என்பது உண்மை.

8 படிமுறைகள் கொண்ட இந்த அட்டாங்க யோகத்தில் முதற்படி 'இயமம்' ஆகும். இதன் அர்த்தமாவது சைவ சித்தாந்தத்தில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை கச்சிதமாக கடைபிடிப்பதாகும். இதனால் சிற்சில தீய பழக்கங்கள் சாதகனை விட்டு விலகி ஓடிவிடும். சைவ சித்தாந்தம் ஒரு விதி. அது ஒரு மனிதனது செயற்பாடுகளை வரைமுறை செய்தும், வரையறை செய்தும் காட்டுகிறது.

அடுத்தது 2ஆவது படி 'நியமம்' ஆகும். இதன் அர்த்தமாவது சைவ சித்தாந்தத்தில் கூறப்படாதனவற்றை தவிர்த்துவிடல் வேண்டும் என்பதாகும்.

அடுத்து 3ஆவது படி 'ஆசன'மாகும். இது சாதகன் உடற்பயிற்சிகள் செய்து, நோயின்றி இருப்பதையும் அவனது மனவளர்ச்சியையும் காட்டுகிறது. சாதகன் சாதனைகளில் தன்னை உள்ளீர்த்துக்கொள்ளும்போது, அவனது உடல் அவனுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இதற்காகவே இந்த 3ஆவது படிமுறை அதனை வலியுறுத்தி நிற்கிறது.

அடுத்தது 4ஆவது படியான 'பிரணாயாமம்' ஆகும். மூச்சு வாங்குதல் என்பது பொருள். இது ஒரு இயற்கை. பௌதீகச் செயற்பாடு. இது உடலையும் மனதையும் கட்டுப்படுத்தவல்லது. இது ஆசனத்துக்கு அடுத்தபடியாக வருகிறது. 

ஆசனம் கைகூடினால் தான் பிரணாயாமம் கைகொடுக்கும். மூச்சை வசப்படுத்தும் போது,  மனம் இலேசாக வயப்பட்டுவிடும். அது பரவிப்பாயாது.

அடுத்தது 5ஆவது படியாகும். அது 'பிரத்தியாகாரம்' ஆகும். இது முன்னைய நான்கு படிகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. மனதை  வசப்படுத்த தெரிந்த பின் சாதகன் தான் நினைத்த பொருளாக தன்னை மாற்றிக்கொள்ளும் வகையில் செயற்பட முனைகிறான். 

இறைவனாக அல்லது காயத்ரி மாதாவாக தன்னை மாற்றிக்கொள்வதில் அவன் இறங்குவது ஒருபோதும் தப்பாகாது. அதைத்தான் காயத்ரி சித்தர் பெருமான் செய்தார். அதனால் காயத்ரி மாதாவின் காரகத்துங்களை அவர் வசப்படுத்திக்கொண்டார். அது அவரை காயத்ரி சித்தராக்கிவிட்டது.

அடுத்ததாக 6ஆவது படி 'தாரணை' ஆகும். சாதகன் தனது நிலையை மாற்றிக்கொள்ளும்போது அவனது மனம் சற்று தளம்பல் நிலைக்கு தள்ளப்படக்கூடும். ஆனாலும், அதை கட்டுப்படுத்தி, தனது வழியிலிருந்து விலகாமல் நிற்க திடசங்கற்பம் பூணல் வேண்டும்.

அடுத்ததாக 7ஆவது படி 'தியானம்' ஆகும். இது முற்றிலும் உயர்வான நிலை. சாதகன் தன்னை முன்னைய படிமுறைகளினூடாக மாற்றிக்கொண்டிருந்தாலும், அவன் அதன் உச்ச நிலையை தொட வேண்டும். அதனையே தியானம் வலியுறுத்துகிறது. அவன் இறைவனை ஒரு ஒளிப்பொருளாகவே ஏகத்துவமாக காணவேண்டும்.  

8ஆவது... கடைசிப் படியான 'சமாதி' நிலையாகும். சாதகன் இறைவனை கண்டுகொண்டு அந்தக் காட்சியிலே மூழ்கியிருப்பதை சமாதி என்கிறோம். இதனையே திருமூலப் பெருமானும் செய்தார். அவரது சமாதி நிலை ஒரு வருடத்துக்கு ஒரு தடவை தான் கலையும். 

சமாதி நிலை கலைந்ததும் அவரிடமிருந்து ஒரு திருமந்திரம் வெளிவரும். இப்படி அவர் 4000 வருடங்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

காயத்ரி சுவாமி அவரது பக்தர்களை மீட்டெடுத்து உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்காக பல பயிற்சி வகுப்புக்களை நடத்தினார். அனேகர் அதில் கலந்துகொண்டனர். தமிழ்மொழியை புரிந்துகொண்ட ஒரு சில வேற்று மொழிக்காரர்களும் அப்பயிற்சி வகுப்புக்களில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு சில மதுபான பிரியர்களும் கலந்துகொண்டனர். பயற்சி வகுப்பு தொடங்கிய 2ஆவது நாளிலிருந்தே வாழ்நாள் பூராவுமே மதுபானத்தை அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள். இவையெல்லாம் காயத்ரி சித்தர் பெருமானின் மகிமை என்றுதான் சொல்ல வேண்டும். 

காய்ச்சி அறிய நீரை சுத்தப்படுத்தாத பாத்திரத்தில் சேமிப்பதால் என்ன பயன்? இதனை பக்தர்கள் புரிந்துகொண்டு தத்தம் வாழ்வை செம்மைப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

காயத்ரி சித்தர் ஒரு சில சித்தர்களோடு நெருங்கிய தொடர்பை பேணிவந்தார். அவர்களும் காயத்ரி சித்தர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இது ஒரு ஆன்மிக உறவு. இதற்கப்பால் வேறு வியாக்கியானம் தேவையில்லை.

காயத்ரி சித்தர் பெருமானின் பணிகளுள் மட்டக்களப்பு காயத்ரி பீடத்தில் அமைந்துள்ள சப்த ரிஷி மண்டலம் பிரதானமானது. 

உலகில் வேறெங்கிலும் சப்த ரிஷிகளுக்கான மண்டலம் இற்றை வரை அமைக்கப்படவில்லை. 

சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் 'குரு கீதை' படித்து அதன் வழி நடக்க வேண்டும். அது புகட்டும் வழிகாட்டல்கள் சாதகனொருவன் ரிஷிமார்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்கு உதவும். 

காயத்ரி பீடத்தை அனேகர் ஒரு கோவிலாகவே நினைப்பதுண்டு. உண்மையில், இது ஒரு ஆச்சிரமம். ஆச்சிரமம் என்பது ஒவ்வொரு தனிமனிதனையும் அட்டாங்க யோகத்தோடு இணைத்து வாழ வைப்பதாகும். ஆதலால், குரு வழிபாட்டில் தம்மை இணைத்துக்கொண்ட பக்தர்கள் அட்டாங்க யோகத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உச்சம் தொடல் வேண்டும்.

காயத்ரி சித்தர் ஒரு வழிகாட்டி. சமயத் தொண்டு, சமூகத் தொண்டு என பல வகைகளிலும் தொண்டாற்றினார் என்பதை யாரும் மறக்க முடியாது. அவரது பக்தர்கள் இப்போதும் அவர்களோடு வாழ்வதாகவே நினைக்கிறார்கள்.

காயத்ரி சித்தர் தமிழ்மொழியிலும் ஆங்கில மொழியிலும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

தமிழில் 'காயத்ரி மந்திர மகிமை', 'ஞான குரு', 'மனித காந்தம்', 'எளிய முறை யோகப் பயிற்சி', 'காயத்ரி குண்டலினி விழிப்பு' என்பனவும், ஆங்கிலத்தில் The Great Science and power of Gayathri, The spiritual Tenets of Sri Gayathri Peetam, Cosmics Mystic of Meditation என்பன அவற்றுள் சில. 

காயத்ரி சித்தர் பெருமானை வணங்கி, அவர் காட்டிய வழியில் வாழ்ந்து முன்னேறுவோம்!

- எஸ்.எஸ். தவபாலன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right