வழிமுறைகளை கையாளுங்கள்!

Published By: Digital Desk 7

26 Oct, 2022 | 12:37 PM
image

கேள்வி: 

எனக்கு வயது 30. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. பதின்பருவம் முதலே எனக்கு உரோம வளர்ச்சி இருந்தது.

ஆனால், இப்போது அதுவே பெரும் பிரச்சினையாகிவிட்டது. கை, கால்களில் மட்டுமன்றி, முகத்திலும் உடலிலும் கூட உரோமம் வளர ஆரம்பித்துவிட்டது. என் கணவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது போல் காட்டிக்கொண்டாலும், அவருக்கு என் மீது லேசான வெறுப்பும் தோன்றியிருப்பதாகவே எண்ணுகிறேன். அந்த வெறுப்பு விஸ்வரூபம் எடுக்க முன், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? ஏதேனும் உதவி செய்ய முடியுமா?

பதில்:

அதிக உரோம வளர்ச்சிக்கு ஹோர்மோன்களே முக்கிய காரணம். ஆண், பெண் இருபாலரது உடலிலும் ஆண் தன்மையைத் தூண்டக்கூடிய ஹோர்மோன்களும், பெண் தன்மையைத் தூண்டக்கூடிய ஹோர்மோன்களும் உண்டு. எந்த ஹோர்மோன் அதிகமாகச் சுரக்கிறது என்பதை வைத்தே அவர்களது தோற்றமும் நடத்தையும் வேறுபடுகின்றன. 

எனினும், பரம்பரை மரபுக்கூறுகளாலும் இதுபோன்ற பிரச்சினைகள் தலைதூக்கலாம். இன்னும் சிலர், தாமதமான அல்லது விரைவான மாதவிலக்கைச் சீர்படுத்துவதற்காக மருந்து எடுத்துக் கொள்வதுண்டு. அவ்வாறானவர்களுக்கும் பக்கவிளைவாக இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. இன்னும் சிலர், செயற்கை மணமூட்டிகள், ருசியூட்டிகள் (முக்கியமாகத் துரித உணவுகளில்) கலந்த உணவுகளைஅதிகம் உட்கொள்வதனாலும் இது போன்ற பிரச்சினை ஏற்படுகிறது.

உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு நீங்கள் செய்யக்கூடியது, உரோமத்தை அகற்றுவதே. இது காலத்தையும் பணத்தையும் சற்று விரயமாக்கவே செய்யும். ‘வெக்சிங்’ செய்து கொள்ளலாம். அல்லது, விளம்பரங்களில் காண்பிக்கப்படும் ‘ஷேவிங் ஜெல்’லைப் பயன்படுத்தி உரோமங்களை அகற்றலாம். 

சவர்க்காரத்தைத் தவிர்த்துவிட்டு, மஞ்சள், பயற்றம்மா என்பவற்றைப் பயன்படுத்துங்கள். இவற்றுடன் தேசிக்காய்சாறு,தேன் என்பனவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கோரைக்கிழங்கு என்று ஒன்று இருக்கிறது. நாட்டு மருந்துக்கடைகளில் இது கிடைக்கும். அதை வாங்கி அரைத்து அப்படியே உடம்புக்குத் தேய்த்துக் குளித்துவந்தால், ஆறு மாதங்களில் ரோம வளர்ச்சி நன்கு குறையும். வாரம் ஒருமுறை உப்பில்லாத வெண்ணையை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவிவர, முகம் பட்டுப்போலாகும். 

உங்கள் தற்போதைய நிலையால் நீங்களே உங்கள் மீது தேவையற்ற ஒரு வெறுப்பை உண்டாக்கியிருக்கிறீர்கள் போலும். அதனால்தான் கணவர் உங்கள் மீது வெறுப்புடன் நடந்துகொள்வதாக எண்ணுகிறீர்கள். எனினும் உங்கள் சந்தேகத்தில் நியாயம் இல்லாமல்இல்லை. உடனடியாக மேற்கண்ட வழிமுறைகளைக் கையாளத் தொடங்கினால், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right