பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் மலையக மக்களுக்கு சொந்த நிலம் வழங்கப்படவேண்டும். தேசிய அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் வலியுறுத்தினர்கள்.

பாராளுமன்றத்தில்  2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கமத்தொழில், பெருந்தோட்ட கைத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றுமு; நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான செலவுத்தலைப்புக்கள் மீது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உரையாற்றுகையில், 

இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்து வந்த அரசாங்கங்கள் உருவாகுவதற்கு முதுகெலும்பாக இருந்தவர்கள் மலையக மக்கள். மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் முக்கிய இடங்களில் இருந்துள்ளார்கள். பதவிகளை வகித்துள்ளார். 

இருப்பினும் ஏனைய மக்களுடன் ஒப்பிடும்போது மலையக மக்களின் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. அவர்கள்  சொந்த நிலம் இல்லாதிருக்கின்றார்கள். அவர்களுக்கான நிலங்களை வழங்குவதற்காக 7பேர்ச் காணி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இருப்பினும் அந்தக்காணி வழங்கப்படுவதில் தற்போது வரையில் இழுத்தடிப்பு நீடித்துக்கொண்டேயுள்ளது. 

அண்மையில் மண்சரிவு இடம்பெற்றபோது நாம் அங்க சென்றிருந்தோம். குறிப்பாக மண்சரிவில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தின் டெனிஸ்வத்தை உள்ளிட்ட தோட்ட மக்கள் வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு  இன்னமும் வீடுகள் வழங்கப்படவில்லை. கொட்டில்களிலேயே தற்போது வரையில் உள்ளனர். அவர்களுக்கான உரிய வீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அதேநேரம் மலையகத்தில் மண்சரிவு அபாய நிலங்களாக சில பகுதிகள் அறிவிக்கப்பட்டள்ளன. இருந்தபோதும் அம்மக்கள் அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இன்னமும் ஆபத்தான பகுதிகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். 

உண்மையிலேயே மலைய மக்கள் லயன்களிலேயே இன்னமும் வாழும் நிலைமை நீடிக்கின்றது. லயன்கள் என்று அவற்றைக் கூறுவதையும் விடவும் லயத்துச் சிறைகளில் வாழும் அந்த மக்கள் அவ்வாறான வாழ்க்கையிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டும். தற்போது கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 730 சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் அந்த சம்பளம் முழுமையாக கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கணப்படவில்லை. 

அண்மையில் 22 தோட்டக் கம்பனிகளால் தேயிலைத்தோட்டத்தை சரியாக பராமரிக்க முடியாதுள்ளதாக கூறப்பட்டது. அவற்றை  அரசங்கத்திடம் ஒப்படைக்குமாறு தேசிய அரசாங்கம் பணித்திருந்தது. எனினும் எந்தவொரு கம்பனியும் அவ்வாறு ஒப்படைப்பதற்கு முன்வரவில்லை. ஆகவே அது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.  

அதேபோன்று இறப்பர் ஆராய்ச்சி நிலையம், தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்ட 110 ஊழியர்கள் தற்போது தற்காலிக ஊழியர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களின் நியமனங்களை உறுதி செய்யவேண்டும் என்றார்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றுகையில், 

மலையக மக்கள் பிரித்தானிய ஆட்சியக்காலத்தில் இங்கு தோட்டத்தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்டார்கள். இற்றைக்கு 200ஆண்படுகளாகின்ற போதும் அவர்களுக்காக சொந்த நிலங்கள் வழங்கப்படவில்லை. 

சொந்த நிலம் இல்லாத ஒரு சமுகத்தால் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆகவே சொந்த நிலங்கள் வழங்கப்படவேண்டும். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் தொழிலாளர்களாக, கூலிகளாக சென்றவர்களுக்கு அந்த நாடுகளின் பிரஜா உரிமை வழங்கப்பட்டு சொந்த நிலங்கள் வழங்கப்பட்டு இன்று சிறந்த நிலைமையில் உள்ளமையை நாங்கள் உலகத்தில் காணக்கூடியதாகவுள்ளது. 

ஆகவே மலையக மக்களுக்கும் சொந்த நிலங்கள் வழங்கப்படவேண்டும். அவர்களின் வாழ்விடங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும். மலையகத்தில் இன்றும் மாணவர்கள் 200படிகள் இறங்கி பாடசாலை செல்கின்றார்கள். நாளொன்றுக்கு எட்டுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் பாடசாலைக்காக செல்கின்றார்கள். இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும்.

தேயிலை பயிர்ச்செய்கை கைவிடப்படும் அபாயத்தில் உள்ளது. சிறுசிறு தோட்டங்கள் மூடப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஆகவே உரிய மானியங்கள் வழங்கப்பட்டு இந்த நாட்டில் பொருளதாரத்தில் அதீத செல்வாக்கை செலுத்தும் தேயிலை செய்கையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.