(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மற்றும் அர்ஜுன் அலோசியஸ் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர். அர்ஜுன் அலோசியஸ் மோசடி செய்த பணம் நாமல் ராஜபக்ஷவின் துபாய் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி முடிந்தால் அர்ஜுன் அலோசியஸ{க்க எதிராக  கருத்துக்களை முன்வைக்குமாறு பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநயக்க உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியுள்ளார். அவருடைய குற்றச்சாட்டுக்களையும் நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். 

எம்மை தொடர்ச்சியாக திருடர்களாக கூறிக்கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் எதனையும் நிரூபிக்கவில்லை. காரணம் நிரூபிப்பதற்கு அவ்வாறான விடயங்கள் நடைபெற்றிருக்கவில்லை. அதுவே யதார்த்தமாகிவிருக்கின்றது. 

இந்நிலையில் பாராளுமன்ற கோப்குழு மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பாக முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை குற்றவாளியாக கூறியுள்ளது. அதேபோன்ற அவருடைய மருகனான அர்ஜுன் அலோசியஸ{ம் அதனுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில் அவர்கள் இருவரின் மீதும் உடனடியாக பாரபட்சமின்றி உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கோப்குழுவின் அங்கத்தவராக இருக்கின்றபோதும் அவர் கோப்குழுவின் அறிக்கையில் கையொப்பமிடவில்லை. அத்தகையவரே எனக்கு சவால் விடுக்கின்றமை வேடிக்கையாகவுள்ளது என்றார்.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் என்மீது ஆதரமற்ற குற்றச்சாட்டக்களை முன்வைத்து வருகின்றார். தொடர்ச்சியாக அனைத்து விடயங்களுக்கும் ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டி வரும் அவர் பொய்யான விடயங்களை மக்களுக்கு வழங்காது உண்மையான கருத்துக்களையே பொதுமக்களுக்கு வழங்கவேண்டும் என்றார்.