22 ஆவது திருத்தத்தை சாத்தியமாக்கிய இரு தரப்பு இணக்கப்பாடு நீடிக்க வேண்டும்

25 Oct, 2022 | 07:43 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

அரசியலமைப்புக்கான 22 வது திருத்த நிறைவேற்றம் ஒரு அதிர்ச்சி போன்று வந்தது.முதலில் இந்த திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தை பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அண்மைய எதிர்காலத்தில் அது மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படாது அல்லது எடுக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படாது என்றே தோன்றியது.

அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இரு சர்ச்சைக்குரிய வாடயங்களில் கருத்து வேற்றுகை இருந்தது.கட்சிகளுக்கு இடையில் மாத்திரமல்ல கட்சிகளுக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் நிலவின. முதலாவது சர்ச்சைக்குரிய  விடயம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்கள் கடந்த பின்னர் ஜனாதிபதி தனது தற்துணிபு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை கலைப்பது பற்றியது.இரண்டரை வருட காலத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை புதிய திருத்தத்திலும் நிலைபெறச் செய்தது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு தெளிவான அரசியல் வெற்றியாகும்.

20 வது திருத்தமும் தற்போதைய 22 வது திருத்தமும் இரண்டரை வருடங்களுக்கு பிறகு  ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்கமுடியும் என்று கூறுகின்றன.இவற்றுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தம் நான்கரை வருடங்களுக்கு பின்னர் மாத்திரமே பாராளுமன்றத்தை கலைக்கமுடியும் என்று ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தியது.ஆனால் 22 வது திருத்தம் இரண்டரை வருடங்களுக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை தொடர்ந்து பேணுகிறது.இதை பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு சதைவாகவே கருதமுடியும்.

பாராளுமன்றத்துக்கு ஐந்து வருட ஆணையை மக்கள் வழங்கியபிறகு விரைவாகவே ஜனாதிபதி அதை கலைப்பது ஒரு நல்ல ஜனநாயக நடைமுறையல்ல.2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்தபோது இதே அடாத்தான் ஜனாதிபதியின் அதிகாரத்தின் பிரயோகத்தினால் ஜனாதிபதி விக்கிரமசிங்கவே அன்று பாதிக்கப்பட்டவர்.இடைநடுவில் அவரது பிரதமர் பதவி துண்டிக்கப்பட்டது.

இரண்டாவது சர்ச்சைக்குரிய விடயம் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாவது பற்றியதும் மக்களால் தெரிவுசெய்யப்படும் அரசியல் பதவிகளை வகிப்பது பற்றியதுமாகும்.இரட்டைக் குடியுரிமை கொணடவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு 20 வது திருத்தம் அனுமதி வழங்கியது.ஆனால் 19 வது திருத்தம் அந்த உரிமையை பிரத்தியேகமாக தடுத்தது.இப்போது 22 வது திருத்தமும் அவ்வாறே செய்திருக்கிறது. 

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களில் சுமார் பத்துப் பேர் இரட்டைக்குடியுரிமையுடையவர்கள் என்று கூறப்படுகிறது.அந்த வெளிநாடுகளின் குடியுரிமையைக் கைவிடுவதா அல்லது பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதா என்பதை தீர்மானிக்கவேண்டியவர்களாக அவர்கள் இப்போது இருக்கிறார்கள்.இது ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரிய ஒரு தாக்கமாகும்.அதன் தேசிய அமைப்பாளரும் அதிகார மையமுமான பசில் ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்.இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றத்திற்குள் இருந்தே கிளம்புகிறது.அவர்கள்்பதவி விலகாவிட்டால் தகராறை நீதிமன்றத்திலேயே தீர்க்கவேண்டிவரும்.

எரியும் பிரச்சினைகள் 

அரசியலமைப்புக்கான 22 வது திருத்தம் பாராளுமன்றத்தில் 174 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.ஒரேயொரு உறுப்பினரே அதற்கு எதிராக வாக்களித்தார். இதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதமுடியும்.அவரின் தலைமைத்துவத்தின் கீழ் அரசின் தடுப்புக்களும் சமப்படுத்தல்களும் முறைமையில் (state's system of checks and balances) குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பு உண்மையில் ஏகமனதாக இடம்பெற்றிருக்கின்றன.இது ஆளும் கட்சியின் பழைய தலைவர்கள் அணிக்கும் பலவான்களுக்கும் ஒரு தோல்வியாகும்.ஆளும் கட்சி மூன்று அல்லது அதற்கும் கூடுதலான குழுக்களாக சிதைந்துபோய்க்கிடக்கிறது.

ஆளும் கட்சியின் மொத்தம் 134 பாராளுமன்ற உறுப்பினர்களில் 30 க்கும் அதிகமானவர்கள் மாத்திரமே 22 வது திருத்தத்தை எதிர்த்தார்கள்.கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்றத்திற்கு வரமுடியாதவாறு செய்யப்பட்டிருக்கிறார்.முன்னாள் நிதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச வெளிநாட்டு குடியுரிமையை துறக்காவிட்டால் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்தே கட்சிக்கு வழிகாட்டவேண்டியிருக்கும்.சமுதாயத்தின் அடிமட்டத்தில் மக்களை அணிதிரட்டுவதிலேயே அவரின் ஆற்றலும் பலமும் இருப்பதால் அவருக்கு இது ஒரு பாரதூரமான பின்னடைவாக இல்லாமல் இருக்கலாம்.பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து மக்களை அணிதிரட்டமுடியும்.

 22வது திருத்த நிறைவேற்றம் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை குறிப்பாக நியமனங்களைச் செய்வது தொடர்பான அதிகாரங்களை குறைக்கும்.20 வது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதி தான் விரும்பியவர்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும்  அரசின் உயர்பதவிகளுக்கும் நியமிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.அந்த அதிகாரத்தை இப்போது ஜனாதிபதி இழக்கிறார்.(இந்த நியமனங்களில் பிரதம நீதியரசர்,உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகள், தேர்கல்கள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான  உறுப்பினர்கள்,தலைவர்கள் நியமனம், பொலிஸ்மா அதிபர் நியமனம் ஆகியவை அடங்குகின்றன).

 இந்த அதிகாரங்கள் இப்போது  அரசியலமைப்பு பேரவைக்கு மாற்றப்படுகின்றன.அரசியலமைப்பு பேரவை மீது ஜனாதிபதி செல்வாக்கைக் கொண்டிருப்பார்,ஆனால் எதேச்சையான அதிகாரமிருக்காது.ஏனென்றால் அந்த பேரவையின் உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்படுவார்கள். பேரவைக்கான மூன்று சிவில் சமூக உறுப்பினர்கள் பிரதமரினாலும் எதிர்க்கட்சி தலைவரினாலும் கூட்டாக நியமிக்கப்படுவார்கள்.ஆணைக்குழுக்களுக்கு பக்கச்சார்பற்ற உறுப்பினர்கள் நியமனமாவதை இந்த சிவில் சமூக உறுப்பினர்களினால் உறுதிசெய்யக்கூடியதாக இருக்கும்.இவ்வாறாக தனது அதிகாரங்களில் சிலவற்றை கைவிடுவதன் மூலமாக ஜனாதிபதி இதுகாலவரை கடுமையாக பிளவுபட்டிருந்த ஒரு பாராளுமன்றத்தில் எதிர்பார்த்திராத வகையிலான கருத்தொருமிப்பை கொண்டுவந்த ஒரு தலைவர் என்ற நியாயப்பாட்டை பெறுகிறார்.

ஆளும் கட்சி மூன்று அல்லது அதற்கும் கூடுதலான குழுக்களாக சிதறுண்டு போனமை நாடு எதிர்நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளை கையாளுவதற்கு கருத்தொருமிப்பின் அடிப்படையிலான அணுகுமுறையை வகுப்பதில் தொலைநோக்கும் துணிவாற்றலும் கொண்ட ஒரு தலைவராக மகத்தான பாத்திரத்தை ஜனாதிபதி வகிக்க வசதியாயமையும் எனலாம்.இந்த பிரச்சினைகளில் கடந்த இரு வருடங்களில் பாரதூரமான பரிமாணங்களை எடுத்த பொருளாதார நெருக்கடி, நீண்டகால ஊழல் மற்றும் தவறான நிருவாகம் ஆகியவை அடங்கும்.

பொருளாதார மறுசீரமைப்பு பல மட்டங்களில் மக்கள் மீது பாரிய சுமைகளை ஏற்றப்போகின்ற ஒன்றாக அமையும்.அந்த மறுசீரமைப்பை ஒரு இருதரப்பு இணக்கப்பாட்டு அணுகுமுூறயூடாக கையாளுவது சிறந்ததாக இருக்கும்.நீண்டகால தேசிய இனப்பிரச்சினையையும் இதே அணுகுமுறையில் கையாளுவது நல்லது.1956 தொடக்கம் அரசியல் தீர்வொன்றைக் காணமுடியாமல் இருக்கும் இனப்பிரச்சினை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் அடங்கிப்போன ஒரு எரிமலை போன்று தோன்றுகிறது.ஆனால் யதார்த்தநிலை அதுவல்ல.

  மானசீகமான  அணுகுமுறை

கருத்தொருமிப்பு அரசாங்கத்தை நீடிப்பதற்கு சொல்லும் செயலும் ஒன்றாயமைவதுடன் மானசீகமான அக்கறையை வெளிக்காட்ட வேண்டியதும் அவசியமாகும்.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதைச் சுட்டிக்காட்டினார்.அரசியலமைப்பு திருத்தங்கள் நன்னோக்குடன் கொண்டுவரப்படவேண்டும் என்று அவர் சொன்னார்.அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் சமூக உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலமாக தெரிவு செய்யும்போது அந்து மூவரையும் அரசாங்கமே நியமித்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கும் என்பதால் அந்த உறுப்பினர்களை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் கூட்டாக நியமிக்கக்கூடியதாக ஏற்பாடு வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாச விடுத்த வேண்டுகோளை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்.அவரின் இந்த செயலில் பரஸ்பர விட்டுக்கொடுப்பு உணர்வு வெளிப்பட்டது.ஆனால் இரு  விடயங்களில் அந்த கருத்தொருமிப்பு விரைவாக முறிவடையக்கூடும். அதில் மிகுந்த ஜாக்கிரதையுடன் செயற்படவேண்டியது அவசியம்.

பொருளாதாாரம் வீழ்ச்சியடைந்து போராட்ட இயக்கம் எழுச்சிபெற்றதை அடுத்து புதிய தேர்தல்களுக்கான தேவை குறித்து சமுதாயத்தின் சகல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டது.இவ்வருடம் மார்ச்சில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படவேண்டியவையாக இருந்தன.ஒத்திவைப்பு இன்றி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டாக இணங்கின.ஏனென்றால், உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடகாலத்துக்கு  நீடிக்கப்பட்டு விட்டது.

முரண்பாடு தோன்றக்கூடிய இரண்டாவது விடயம் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஆட்சிமுறையின் தவறான முகாமைத்துவம் மற்றும் ஊழலுக்கு எதிராக அமைதிவழியில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவதாகும்.ஊழலும் தவறான முகாமைத்துவமும் இல்லாத சமுதாயம் ஒன்றை வேண்டிநிற்பவர்கள் கைதுசெய்யப்பட்டு கொடூரமாக தண்டிக்கப்படுகின்ற அதேவேளை, அவற்றுக்கு பொறுப்பானவர்கள் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் உயர்பதவிகளில் தொடருகிறார்கள்.

22 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சகல சுயாதீன ஆணைக்குழுக்களும் செயலிழக்கும் என்று நீதியமைச்சர் விஜேத்ச ராஜபக்ச அபிப்பிராயம் வெளியிட்டார்.குறிப்பாக இரு ஆணைக்குழுக்கள் சிறப்பாக செயற்பட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அந்த இரண்டும் தொடர்ந்தும் இயங்க அனுமதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த இரு ஆணைக்குழுக்களும் சிவில் சமூகத்தினால் உன்னிப்பாக நோக்கப்படும்.

ஒத்திவைப்பு இன்றி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த முடியும் ; நடத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர உரிமைக்காக உறுதியாக  குரல் கொடுத்துவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுமே அந்த இரு ஆணைக்குழுக்களுமாகும்.மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அரச நிறுவனமாக இருக்கின்ற போதிலும் இவ்வாறாக ஜனநாயக உரிமைகளுக்காக உறுதியாக குரல் கொடுப்பது பெருமிதப்படக்கூடியதாகும்.ஆட்சியதிகாரத்துக்கு உண்மையை எடுத்துரைப்பவர்கள் அரசு என்ற கப்பலை பாதுகாப்பான துறைமுகம் நோக்கி கொண்டுசெல்பவர்கள் என்பதால் துரோகத்தனமான அரசியல் போக்குகளில் இருந்து அவர்கள் ஆட்சி நிபுணத்துவமும் அரசியல் விவேகமும் கொண்ட தலைமைத்துவத்தினால் காப்பாற்றப்படவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14
news-image

"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...

2024-03-17 12:21:53
news-image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...

2024-03-17 06:39:41
news-image

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

2024-03-10 14:17:23
news-image

வலுப்பெறும் அரசியல் பிளவுகள் 

2024-03-10 12:32:34
news-image

தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...

2024-03-08 16:39:57
news-image

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...

2024-03-05 22:00:38
news-image

மீண்டும் "Political Cabinet" 

2024-03-03 12:29:24
news-image

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள் 

2024-02-28 13:29:58