(நா.தனுஜா)
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 94 ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்கள் சிறைக்கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கடந்த ஜுலை 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 94 ஆம் பிரிவின் கீழான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டன.
அவ்வழிகாட்டல்களை கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடந்த 21 ஆம் திகதிவரை அவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வழிகாட்டல்கள் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
கொவிட் - 19 வைரஸ் பரவலின்போது சிறைச்சாலைகள் திணைக்களமானது பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறைக்கைதிகளின் உரிமைகள் பலவற்றை மட்டுப்படுத்தியது.
அதன்படி சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கான நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய உணவும் மட்டுப்படுத்தப்பட்டது.
எனவே தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களை சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பில் தற்காலிகமாகவும், உத்தியோகபூர்வமற்ற வகையிலும் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடுகளை சட்டபூர்வமாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சியாகவே எண்ணத்தோன்றுகிறது.
இவ்வழிகாட்டல்கள் மூலம் ஒடுக்குமுறைகள் மிகச்சாதாரணமானவையாக மாற்றப்படுவதுடன் தமது உறவினர்கள் தம்மை வந்து பார்வையிடுவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் சிறைக்கைதிகள் கொண்டிருக்கும் உரிமை குறிப்பிடத்தக்களவில் மறுக்கப்படுகின்றது.
இவ்வழிகாட்டல்களின் பிரகாரம் சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கான நாட்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 6 நாட்கள் என்பதிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் என்பதாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாளொன்றில் சிறைக்குள் இருக்கவேண்டிய நேரம் 20 மணித்தியாலங்களில் இருந்து 23 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமையானது சிறைக்கைதிகளின் ஆரோக்கியத்தின்மீது மிகமோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
மேலும் சிறைக்கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் உணவு வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லாததன் காரணமாகவே சிறைக்கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் உணவு வழங்குகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM