(லியோ நிரோஷ தர்ஷன்)

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 ஆயிரத்து 29 கிராம சேவகர் பிரிவிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர் வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிரங்கி போட்டியிடும் . புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது உரையாற்றும் போதே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது உறுப்புரிமையை நல்லாட்சி அரசாங்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்று சிந்தித்தோம். இதனடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக உள்ளுராட்சிமன்ற தேர்தலை வைக்காமல் இன்னோரன்ன காரணங்களை கூறி தேர்தல் பிற்போடப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டு இன்று அரசியல் ரீதியாகவும் பழிவாங்கப்பட்ட நிலையில் முன்னாள் உள்ளுராட்சிமன்ற தலைவர்களும் உறுப்பினர்களும் உள்ளனர். 

யாழ்ப்பாணத்தின் பங்குப்பற்றல் முக்கியமானதாகும். 18 ஆயிரத்து 29 கிராம சேவகர் பிரிவிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி  இனி வரும் காலங்களில் வலுவாக அடிமட்ட பணிகளை முன்னெடுத்து தேர்தலை எதிர்கொள்ளும். மேலும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தி ஜீவிகள் மற்றும் பல அமைப்புகள் இன்று எம்முடன் இணைந்து புதிய அரசயில் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனூடாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலுவடைய ஆரம்பித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.