நீடிக்கும் கடற்படை மர்மங்கள்

By Digital Desk 5

24 Oct, 2022 | 01:31 PM
image

சுபத்ரா

செப்டெம்பர் 16ஆம் திகதி தங்காலையில் இருந்து, புறப்பட்டுச் சென்ற நிலையில் காணாமல் போன கடற்படையின் இழுவைப் படகில் இருந்த- கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், ஐந்து கடற்படையினரும், ஒரு மாதம் கழித்து, கரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றனர்.

தங்காலைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில், சந்தேகத்துக்குரிய படகுகள், கப்பல்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அந்தப் படகுடன், செப்டெம்பர் 17ஆம் திகதி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சந்தேகத்துக்குரிய படகு ஒன்றை அவதானித்திருப்பதாகவும், அதனை நோக்கிச் செல்வதாகவும் கடைசியாக தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட அந்தப் படகுபற்றிய எந்த தகவலையும், கடற்படை பகிரங்கப்படுத்தவில்லை. அதுமட்டுமன்றி செப்டெம்பர் 26ஆம் திகதி தான், விமானப்படை விமானங்கள், கடற்படைப் படகுகள் மூலமாக படகைத் தேடும் பணியைத் தொடங்கப்பட்டது.

காணாமல்போன படகை, தேட ஆரம்பிப்பதற்கு ஏன் 10 நாட்கள் தாமதமானது என்பது முதல் கேள்வி.

படகு காணாமல் போன விடயம் தொடர்பாக, கிட்டத்தட்ட, நான்கு வாரம் கழித்தே, கடற்படை வாயைத் திறக்கத் தொடங்கியது.

அதுவும், அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை. ஊடகங்களில் கசிந்த தகவலின் அடிப்படையில் தான், கடற்படைப் பேச்சாளர் பதிலளிக்கத் தொடங்கியிருந்தார்.

காணாமல் போன படகு பற்றி தகவல் வெளியிட ஏன் அவ்வளவு தாமதமானது என்பது இரண்டாவது கேள்வி.

காணாமல் போன கடற்படைப் படகை கண்டுபிடிக்க, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல்கள் நடத்த உதவி கோரப்பட்டதாக கடற்படை கூறுகிறது.

படகின் இயந்திரம் பழுதடைந்து, மோசமான வானிலை காரணமாக, எங்காவது ஆழ்கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றே கடற்படை பேச்சாளர் முதலில் கூறியிருந்தார்.

எனினும், சந்தேகத்துக்கிடமான படகை நெருங்குவதாக இறுதியாக தகவல் கிடைத்த நிலையில், அந்தப் படகில் இருந்தவர்கள், இதனைக் கைப்பற்றியிருக்கலாம் அல்லது மூழ்கடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் காணப்பட்டது.

அதேவேளை, காணாமல் போன படகில் இருந்த கடற்படையினர், இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற ஊகமும் எழுந்தது.

காணாமல் போன படகு, கடற்படையினர் பயன்படுத்துகின்ற மரபுசார்ந்த படகு அல்ல. கடற்படையின் படகுகளின் இருப்புப் பட்டியலில் இது இடம்பெற்றிருக்கவுமில்லை.

பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்தும் அந்தப் படகை, கடற்படையினர் புலனாய்வுத் தேவைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தென்பகுதி கடற்பரப்பின் ஊடாக ஹேரோயின், ஐஸ் போன்ற போதைப்பொருட்கள்,  ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மூலம் இலங்கைக்குள் கடத்தப்படுகின்றன.

இவ்வாறான பல படகுகளை, இலங்கை கரையில் இருந்து, வெகு தொலையில், கடற்படையினர் கைப்பற்றி கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வாறான பல படகுகளில் இருந்து 2186 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருக்கிறது. 

கடற்படையினர் தங்களின் அதிகாரபூர்வ கப்பல்களில் ரோந்து செல்லும் போது, கடத்தல்காரர்களால் அவற்றை இலகுவாக கண்டுபிடித்து விடலாம்.

மீன்பிடிப் படகில் இருந்து கண்காணிப்பை மேற்கொள்ளும் போது, எவருக்கும் சந்தேகம் வராது.  அதனால் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் இந்தப் படகைப் பயன்படுத்தியிருக்கலாம்.

மீன்பிடிப் படகாக இருந்தாலும், கடற்படையினர், நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை வைத்திருந்திருக்க முடியும்.

எனினும், காணாமல் போன அந்தப் படகில் ஜி.பி.எஸ். கருவியோ, செய்மதி தொடர்பு சாதனமோ இருக்கவில்லை என்று கடற்படை வட்டாரங்கள் கூறியிருக்கின்றன.

அது சரியான தகவலாயின், குறித்த மீன்பிடிப் படகு, ஆழ்கடலில் கண்காணிப்புக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை.

கரையில் இருந்து சாதாரண தொடர்பு சாதனங்களைக் கொண்டு தொடர்பு கொள்ளக் கூடிய தொலைவில் தான் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

அவ்வாறான தூரத்தில் இருந்த போது, படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தால், அதனைக் கண்டுபிடிப்பது கடற்படைக்கோ, விமானப்படைக்கோ கடினமானதாக இருந்திருக்காது.

குறித்த படகு அனுப்பும் தகவல்களைக் கொண்டு, சந்தேகத்துக்குரிய படகுகளை கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடிய தொலைவில் தான் அது இருந்திருக்கும்.

அவ்வாறான தொலைவில் படகு காணாமல் போயிருந்தால், கடற்படை அதனைக் கண்டுபிடித்து மீட்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. 

ஆனாலும் தேடுதல் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதால், அந்தப் படகைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான் கடற்படைப் படகில் இருந்தவர்கள், வேறொரு நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இலங்கை கடற்படையினர் வேறொரு நாட்டுக்குத் தப்பிச் செல்வது ஒன்றும் புதியதல்ல.

தற்போது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கும், அமெரிக்கா கொடையாக வழங்கிய கடற்படையின் பி- 627 ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் பணியாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட 9 கடற்படையினர் அங்கு பயிற்சியின் போதே தப்பிச் சென்று விட்டனர்.

அவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தான், சியாட்டில் (seattle) துறைமுகத்தில் இருந்து செப்ரெம்பர் 3ஆம் திகதி 171 மாலுமிகளுடன் அந்தக் கப்பல் புறப்பட்டு, குவாம், மணிலா துறைமுகங்கள் வழியாக கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்னர், 2004இல் சமுத்ர என்ற போர்க்கப்பலையும், 2018இல் கஜபாகு என்ற போர்க்கப்பலையும், இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்ட கடற்படை அணிகளில் இருந்த 6 கடற்படையினர் அமெரிக்காவில் தப்பிச் சென்று காணாமல் போயினர்.

அவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பி-627 கப்பலை கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்ட மாலுமிகள் குறித்து அதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், 9 பேர் தப்பிச் சென்று விட்டனர்.

இவ்வாறான நிலையில் காணாமல் போன படகு குறித்தும், சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.

இந்த நிலையில், திடீரென காணாமல் போன படகில் இருந்து, தொடர்பு கிடைத்து விட்டதாகவும், அதிலிருந்த கடற்படையினர் கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் கடற்படை தகவல் வெளியிட்டது.

இதனைச் சார்ந்து கடற்படை தலைமையகம் வெளியிட்ட தகவலுக்கும், கடற்படைப் பேச்சாளர்  வெளியிட்ட தகவலுக்கும் இடையில் கூட முரண்பாடுகள் காணப்படுகின்றன.

கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவல்களுக்கிடையில், கூட சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கடந்த 18ஆம் திகதி மாலையில் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், “இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்த படகு, மோசமான வானிலை காரணமாக, சுமார் 400 கடல் மைல்களுக்கு அப்பால், நகர்ந்து சென்றது. 

படகில் இருந்த கடற்படையினர் இயந்திரக் கோளாறை சரி செய்த பின்னர், தரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கடற்படையின் A 521, துணைக் கப்பல் இன்று மதியம் அதனைக் கண்டறிந்து தகவல் தொடர்பு இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்தியது.” என்று கூறப்பட்டிருந்தது.

கடற்படையின் அந்த தகவல் வெளியாக முன்னரே, 18 ஆம் திகதி காலையில், படகுடன் மீளத் தொடர்பு கிடைத்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்திருந்தன.

அது எவ்வாறு என்பது மூன்றாவது கேள்வி.

கடற்படையினருடன்  A -521 கப்பலுக்கு தொடர்பு கிடைத்து விட்டது, என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே,  ஆறு கடற்படையினரும், பாணமவில் உள்ள, கடற்படையின் தென்கிழக்குப் பிராந்திய தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஆனால் அவர்கள் சென்ற படகு கொண்டு வரப்படவில்லை. கடற்படைக் கப்பலிலேயே ஏற்றி வரப்பட்டனர்.

அந்தப் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தாலும், அதனை கட்டியிழுத்துக் கொண்டு வந்திருக்க முடியும்.

அவ்வாறு செய்யாமல் நடுக்கடலில் விடப்பட்டது ஏன் என்பது நான்காவது கேள்வி.

18ஆம் திகதி பிற்பகலில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், சுமார் 12 மணிநேரத்துக்குள் கரைக்கு கொண்டு வரப்பட்டிருந்தால், கடற்படையினரை, துணைக்கப்பல் சந்தித்த இடம் கரையில் இருந்து கிட்டத்தட்ட 120 கடல் மைல் தொலைவுக்குள் தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால், அல்பா- 521 என்ற அந்த துணைக் கப்பல், மணிக்கு 10 கடல் மைல் வேகத்திலேயே பயணிக்கும் திறன் கொண்டது.

19ஆம் திகதி அதிகாலையில், பாணமைக்கு கொண்டு வரப்பட்ட கடற்படையினர் அனைவரும் மருத்துவ சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்ட்ட போதும், அவர்கள் நலமாக உள்ளனர் என்று கடற்படை பேச்சாளர் கூறியிருக்கிறார்.

சாதாரணமாக ஒரு இழுவைப்படகில், அதிகபட்சம் 6000 லீற்றர் குடிநீரை எடுத்துச் செல்லும் வசதியே இருக்கும். 

படகில் இருந்த உணவுப்பொருட்கள் இரண்டு வாரங்களில் தீர்ந்து போனதாக கடற்படையினர் தெரிவித்தனர் என்று கடற்படைப் பேச்சாளர் கூறயிருக்கிறார்.

செய்மதி தொலைபேசி, ஜிபிஎஸ் கருவிகள் இல்லாத கடற்படைப் படகில் நீண்ட நாட்களுக்கான உணவு இருந்திருக்காது.

படகில் இருந்தவர்கள், மிகவும் சிக்கனமாக சாப்பிட்டிருந்தாலும் கூட, அவர்களால் நல்ல தேகாரோக்கியத்துடன் இருந்திருக்க முடியாது.

அவ்வாறாயின், இரண்டு வாரங்களுக்கு மேலாக சரியாக உணவை உண்ண முடியாதவர்களால் எவ்வாறு நதேகாரோக்கியத்துடன் கரைதிரும்பியிருக்க முடியும் என்பது, ஐந்தாவது கேள்வி.

படகு, 400 கடல் மைலுக்கு அப்பால், இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்த கடற்படையினர்  20 நாட்களுக்குப் பின்னர் இயந்திரத்தை திருத்தி, மீண்டும் கரை நோக்கிப் பயணம் செய்ததாகவும், தொலைத்தொடர்பு சாதனம் திடீரென வேலை செய்யத் தொடங்கியது என்றும், சில நாட்களில் மீண்டும் இயந்திரம் பழுதடைந்ததாகவும், தொலைத்தொடர்பு சாதனம் இயங்கவில்லை என்றும் அதிலிருந்தவர்கள் கூறியதாக கடற்படைப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

20 நாட்களுக்குப் பின்னர் இயந்திரம் செயற்படத் தொடங்கிய பின்னர், தொலைத்தொடர்பு சாதனம் இயங்கத் தொடங்கியிருந்தால், அதன் மூலம் கடற்படையுடன் அவர்கள் தொடர்பு கொள்ள முடியாமல் போனது ஏன், ஆபத்துக்கால சமிஞ்ஞையை அனுப்ப முடியாமல் போனது ஏன் என்பது ஆறாவது கேள்வி.

எவ்வாறாயினும், அந்தப் படகு 400 கடல் மைலுக்கும் அதிகமாகப் பயணம் செய்திருப்பின், அந்தளவுக்கு எரிபொருள் கையிருப்பு இருந்திருக்குமா என்பது ஏழாவது கேள்வி.

காணாமல் போன கடற்படையினர் மீளக் கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்கள் விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளனர் என்றும் கடற்படை கூறியிருக்கிறது.

இதுவும் சந்தேகங்களை எழுப்புகிறது. காணாமல் போன கடற்படையினர் ஒருவாறு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதும், இந்த விவகாரத்தில் பல மர்ம முடிச்சுக்கள் இன்னமும் அவிழாமலேயே உள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right